Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi
கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?
கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?
பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.
பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.
இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.
மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.
கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.
இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.
எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.
ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.
மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.
விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.
இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.
கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!
கட - உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக்
கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!
கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.
கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.
மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
வாழ்க வளமுடன்.
-