What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work? | CJ

What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?

What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?


வேதாந்தம் என்பதற்கும், சித்தாந்தம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எதை பயனுள்ளதாக கருதலாம்? எப்படி பயனாகிறது?

அந்தம் என்ற வடமொழி, முடிவான உண்மையை குறிக்கும் ஒரு சொல்லாகும். வேதம் என்பது உயர்வான உண்மை, மாற்றுக் கருத்தில்லாதது என்றும் பொருள் தரும் சொல்லாகும். அது மதிப்பானது என்ற தகுதியையும் பெற்றிருக்கும். பொதுவாகவே, வாழ்ந்த முன்னோர்களின் வழியாக, மனித வாழ்வை உயர்த்தக்கூடிய அருளுரைகள் இதில் அடங்கி இருக்கும். ஓவ்வொரு நிகழ்விலும், இயற்கையோடும், இறையாற்றலோடும் ஒருங்கிணைந்து, அறிந்து உணரப்பெற்ற உண்மைகளின் தொகுப்பு வேதம், அதை சொல்லும் வழிமுறையே வேதாந்தம் என்றாகிறது. உலகில் பல்வேறு, பாரம்பரியமான வேதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் இருக்கின்ற வேதம் மிகச் சிறப்பானது. முழுமையானது என்பதை ஐயமில்லை. உலகுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

சித் என்றால் உயிர் ஆகும். இந்த உயிரை ஆராய்ந்து, அதன் பஞ்ச பூதத்தின் முதன்மையான நிலையையும் அறிந்து கொண்டு, அந்த உயிரின் மூலமான, வெட்டவெளி என்ற மெய்ப்பொருள் நிலையையும் உணர்ந்து அறிந்தவர்கள் சித்தர் என்றாயினர். சித் என்ற உயிர் உண்மை வழியாக, மூலமும், முடிவான உண்மையையும் சொல்லும் பொழுது, அது சித்தாந்தம் என்றாகிறது. சித்தாந்தம் என்பது, சித்தர்கள் வழியாக, தமிழ்நாட்டில் தான் உருவானது. அக்காலம் முதல், உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் அதன் அடையாளம் பல்வேறு வகைகளில் சிதறிவிட்டது. வேறு வேறு பெயர்களில் மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால், சித்தாந்தத்தின் ‘மூலம்’ அதிலிருந்து விலகவில்லை.

வேதாந்தம் என்பது அறிவுக்கு விளக்கம் அளிப்பது என்றால். சித்தாந்தம் அந்த அறிவையே அறிந்துணரத் தருவதாகும். வேதாந்தம் கேட்டு, படித்து, சிந்தித்து ஏற்றுக்கொள்வதாகும். சித்தாந்தமோ உடல், மன, உயிருக்கான பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை, வார்த்தைகளால் விளக்குவதை விடவும், அனுபவமாக பெறுவதுதான் சிறந்தவழி. வெற்று வார்த்தைகளில் வித்தியாசப்படுத்தினால், அதன் தரத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே கவனம்.

இந்த இடத்தில், மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், விளக்கமான கருத்துக்களையும் அறிவோம். ‘தானே அவனாகவும் அவனே தானாகவும், சிவனே சீவனாகவும்,  சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான் தெளிவோடு திருப்தியும் வரும்.  இதை நமது மனவளக்கலை (Simplified  Kundalini Yoga - SKY) மூலம் சாதிக்க முடிகிறது.  தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும் பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும்.'

மேலும், ‘தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது.  முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும்.  அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்’ என்கிறார்.

கூடுதலாக, ‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே. ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும் இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். 

துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல் இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே பக்திமார்க்கம்.’என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-