What is the meaning of அ and உ in the spiritual by Tamil? Truth Explanation
அ நாவும் உ நாவும் சொல்லுவதென்ன? இதை எப்படி ஆன்மீகத்தில் நுழைந்தது? உண்மை விளக்கம்.
தமிழ் மொழிக்கென்று பலதரப்ப சிறப்பியல்புகள் அக்காலம் முதலாகவே உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மொழி பேசும், ஆய்வாளர்களும், தமிழை சிறப்பித்து போற்றுவதை நாம் காண்கிறோம். சங்க கால இலக்கியங்கள் தமிழிலே கிடைப்பதும், அதை இன்றும் கூட அந்த வடிவத்திலேயே படித்து, விளங்கிக் கொள்வதும் மிக சிறப்பானது ஆகும். தமிழ் மொழியின் காலம், அதன் எழுத்துக்களில் சொல்லப்படுவதுபோல, சந்திர சூரியர் இருக்கும் வரை, என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதியானது.
மனித வாழ்வியலுக்கு தமிழின் பங்கு அளப்பரியது. மெய்யியல் எனப்படும் இறையறிதலுக்கும், இயற்கை உணர்தலுக்கும், பக்தி வழியிலான வழிபாடுகளுக்கும் தமிழ் என்றும் உயர்வு என்பதில் ஐயமில்லை. தற்கான விஞ்ஞான உண்மைகளுக்கு, சமமான நிறைய உண்மைகள் இருந்தபொழுதும், அவை எல்லாம், பக்தி இலக்கியங்கள் என்று, நாம் தான் ஒதுக்கி வைத்திருக்கோம் என்று சிலர் சொல்லுவதையும் மறுப்பதற்கில்லை. சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் தமிழில் பெரும் பங்கை வழங்கினர். அதுபோலவே சைவ, வைணவ என்று பிரிந்திருந்தாலும், தமிழில் இறை உண்மையையும், விளக்கங்களையும் தருவதில் குறைஏதும் வைக்கவில்லை.
அப்படியாக, மெய்யியலில், மெய்ப்பொருள் இறை விளக்கத்தில் வந்து, கலந்து, சராசரி மக்களின் வாழ்வியலில் நின்றதுதான், இந்த அ நாவும் உ நாவும். அ என்பது அருவம் என்ற மாயமான ஒன்றை சொல்லும் குறிப்பாகும். உ என்பது உருவம் என்ற உணர்தல் வகையில் தரப்படும் குறிப்பாகும். அது ஏன் உணர்தலாக? என்றால், அதற்கு வடிவம் இல்லை என்பது விளக்கமாகிறது. இந்த அருவம், உருவம் என்பது எப்படி அர்த்தமாகிறது என்றால், ஒன்றுமில்லாதது, ஒன்றானது என்று சொல்லப்படுகிறது. அருவமே வெட்டவெளியாக, பாழ் ஆக குறிப்பிடப்படுகிறது. ஆதியாக இருந்தது பகவன் என்றாகி முதலாகவும் ஆனது என்ற திருவள்ளுவரை இங்கே நினைவு கூறலாம். விஞ்ஞானத்தில் மேட்டர் என்ற ஒன்றுமில்லாது, எனர்ஜி என்று ஆற்றலாக சொல்லப்படுவது போல. விஞ்ஞானத்திலும், இந்த மேட்டர், எனர்ஜி பிரிக்கமுடியாது என்கிறார்கள். அதுபோலவே அருவமும், உருவமும் பிரிக்கமுடியாது.
இந்த உண்மையை, மெய்ப்பொருள் உண்மையை, குறிப்பாக அறிந்துணரும்படி, அ, உ என்று சொன்னதுபோக, அதை மேலும் குறிப்பாக 8, 2 என்றும் குறிப்பிட்டனர். அதாவது தமிழ் எண்களாக. இப்போது அவை, தமிழ் எண்கள் வழக்கொழிந்து போய்விட்டது. உலகில் எல்லோரும் அரேபிய எண்களைத்தான், பயன்படுத்துகிறோம். எனினும் 0 என்பது இந்தியாவின் பங்கு என்று நிலைத்துவிட்டது.
அ என்பது தமிழ் எண்களில் 2 என்றும், உ என்பது தமிழ் எண்களில் 8 என்றும் எழுதப்படுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, குறிப்பிடும் பொழுது, ‘எட்டும் ரெண்டும் அறியா மூடருக்கு, எதைச் சொன்னாலும் விளங்கிவிடுவதில்லை’ என்ற சொல்வழக்கு இருந்தது என்கிறார். அந்த அளவிற்கு இது, சாராரி மக்களின் பேச்சு வழக்கிலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இன்றோ அப்படியில்லை.
இன்றும் கூட சில வயதான, அக்கால வாழ்வியலில் இருந்து மாறாத பெரியவர்கள். ஏதேனும் காகிதத்தில் எழுதும் பொழுது, உ என்று எழுதி தொடங்குவதை காணலாம். சிறுவயதில் நானும், இது என்ன உ? என்று கேட்டிருக்கிறேன். ‘இது பிள்ளையார் சுழி, இப்படி எழுதுவது, கடவுள் வணக்கம் போல’ என்று பதில் தருவார்கள். தமிழ் எழுத்தில் ஆரம்பம் என்றால், அ அல்லவா எழுதவேண்டும், இது என்ன உ? என்று அப்போதே குழம்பியதும் உண்டு. மனவளக்கலையில் இணைந்துகொண்ட பிறகுதான் உண்மை தெரியவந்தது. உ என்பது உருவம். இந்த உருவம், அருவத்தில் இருந்து ஆரம்பித்தது. ஐம்பூத தோற்றங்களால் மலர்ந்தது என்பதும் உண்மையாகிறது. இந்த ஐம்பூத தன்மையின் வெளிப்பாடாகவே, பிள்ளையார் (ஐந்து கரம்) என்றும் நின்றது உண்மைதானே? அருவம், உருவாமாகி, ஐம்பூதங்களாக மாறியது, பிரபஞ்சமாக, சூரியனாக, பூமியாக, சந்திரனாக, இயற்கையாக, தோற்றங்களாக, புல், செடி, மரமாக, ஜீவனாக, மனிதனாக எழுந்து நின்ற எழுச்சியும், பரிணாமமும் இங்கே காட்சியாக நிற்கிறது அல்லவா?
இதுதான் அந்த அ நாவும் உ நாவும் உணர்த்தும் உண்மைகளாகும். இவ்வளவு எளிமையாக, விளக்கமாக, அறிந்து, உணர்தலாக இருந்த வாழ்க்கை, திசை மாறி, எங்கெங்கோ சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறது எனினும், அவ்வப்பொழுது, இதுதான் உன்பாதை என்று இழுத்து வந்து நிறுத்தும் உண்மைகள்தான், நம்மை காக்கிறது.
வாழ்க வளமுடன்.
-