Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?
இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?
பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.
ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?
ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது.
இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை.
வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.
மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.
வாழ்க வளமுடன்.
-