Home » Posts filed under birth ambition and duty
I have a passion for yoga. However, I haven't gotten into that yet. For, as far as I can see, there is only lies and distortions about yoga here. That's why I'm not interested in learning. Can you tell me which is the best way of yoga? Maybe I should just pass it on? What will happen to me?
February 12, 2025 Sugumarje
ஐயா. எனக்கு யோகம் குறித்த ஆர்வம் உண்டு. எனினும் அதில் நான் இன்னும் இறங்கிடவில்லை. ஏனென்றால், நான் பார்த்தவரையில், இங்கே யோகம் குறித்து பொய்யும் புரட்டும்தான் இருக்கிறது. அதனாலேயே கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை. நல்ல சிறந்த யோகவழி எது என்று சொல்லுவீர்களா? ஒருவேளை அப்படியே நான் கடந்துபோய்விடுவது நல்லதா? எனக்கு என்ன பாதிப்பு வரும்? விளக்கம் தருக.
இந்த கேள்வி கேட்டதற்காக உங்களை பாராட்டுகிறேன். உங்களைப்போலவே பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர் சொல்லக்கேட்டு, பக்தி கடந்த யோகத்தில் ஆர்வம் வருவதுண்டு. அந்த பெரியவர்களே அதை தேடமுடியாமல், கைவிட்டுப்போனதை, உங்களுக்கு கடத்திவிட்டார்கள். நீங்களும் அவர்கள் சொன்ன அதே போன்ற, எதிர்பார்ப்பில், இப்போதும் யோகத்தை தேடுகிறீர்கள். அவர்கள் சொன்ன யோகம் எப்படிப்பட்டதென்று ஓரளவில் என்னால் யூகிக்க முடியும். எனினும் அதை இங்கே விளக்கிட வேண்டியதில்லை.
ஒரு ஆப்பிள் என்ன சுவை தரும் என்பதைக்கொண்டு, ஒரு கூடை ஆப்பிளையும் தீர்மானிக்க முடியாது. அதில் அதிக இனிப்பும் இருக்கலாம், புளிப்பு, கசப்பு சுவை கொண்டதும் இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒரு கூடை ஆப்பிளையும் ருசி பார்த்திடவும் முடியாது. அது காலவிரயம் என்பதோடு, வயிற்றுக்கும் கெடுதல். அதுபோலவே, யோகம் பல்வேறு நிலைகளில், பல்வேறு மகான்கள், ஞானிகள், யோகிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் பாதைகள் வேறு. இதில் எது சிறந்தது என்று நான் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதாத்திரியத்தில் இருப்பதால், அதை கடைபிடிப்பதால், அதுவே சிறந்தது என்றும் சொல்லிவிட மாட்டேன். என்னளவில் அது சிறப்பு அவ்வளவுதான். நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அதில் கொஞ்சகாலம், பயணிக்கவும் வேண்டும். பிறகுதான் அது சரியான பாதையா? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். நானே உங்கள் கையைப்பிடித்து, ‘வேதாத்திரியத்திற்கு வாருங்கள்’ என்று அழைப்பது முறையல்ல.
யோகசாதனை அமைப்புக்கள், வேதாத்திரியத்திற்கு முன்பாக பல இருந்தன, வேதாத்திரியத்திற்கு பின்பாகவும் பல இருக்கின்றன. இதுதான் காலத்தின் நியதி. உங்கள் விருப்பம், தேர்வு, அதில் கிடைக்கும் அனுபவம் ஆகியன மட்டுமே, சிறந்தது எது என்று தீர்மானிக்கும். எனவே என்னிடம் கேட்கவேண்டாம். நான் சொல்லவும் தயாரில்லை.
யோகம் குறித்த விளக்கங்களில் பொய்யும் புரட்டும் தருகிறார்கள் என்றால் அவர்கள் அதில், ஆழ்ந்து போகவில்லை என்பதுதான் குறை. ஏதோ நூல்களில் படித்ததையும், சினிமாவில் பார்த்ததையும், புராண கதைகளை கேட்டும், பிறர் சொல்லக்கேட்டும் இவர்களாகவே, இட்டுக்கட்டும் கதைகள் உண்டு. ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்ற ரீதியில் புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களையும், இவர்கள் கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நல்லது. இவர்களைப்பார்த்து, உங்களுக்கு சூடு வைத்துக்கொள்ள தேவையில்லை. உண்மை எது என்று தேடுங்கள். ஆர்வத்தை இதனால் தொலைக்காதீர்கள்.
ஏதோ சிறிதளவாவது யோகம் என்பதை அறிந்த நீங்கள், இந்த பிறப்பை வீண் செய்வதில் அர்த்தமில்லை. பிறவியின் நோக்கமும், கடமையும் தீராமல், உங்கள் பிறவி முழுமை அடைவதில்லை. வாழும் காலம் போதுமானது. அதை தேடுதலில் வீணாக்காமல், விருப்பமான ஏதோ ஒரு யோகசாதனையில் இணைந்துகொள்க. கற்றுக்கொண்டு பயன்பெறுக. அது உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், தெரிந்த அளவில் உள்ள அனுபவத்தால், மிகச்சிறந்த இன்னொரு யோக சாதனையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். இதில் எந்த இழப்பும் இல்லை. இழப்பின் வழியாக, மிகச் சிறந்ததை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வேதாத்திரியாவையும் ஒருகை பார்த்துவிடுங்களேன். சரியா?
கூடுதலாக இந்த காணொளி பதிவு உங்களுக்கு உதவலாம்.
யோகம் குறித்த பதிவுகளை நான் தவிர்ப்பது ஏன்? Why do I avoid the any posts on yoga?
வாழ்க வளமுடன்
-
Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?
February 05, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.
இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும்.
இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?
பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?
நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே?
இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.
உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்
உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக
பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல்
பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்
அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்
அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய
கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான
கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்.
குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
வாழ்க வளமுடன்.
-
What is so special about Thai Amavasya and Aadi Amavasya? Are all new moons the same? Why do our people say something miraculous? Will you explain the truth?
January 28, 2025 Sugumarje
தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் அப்படி என்ன சிறப்பு? எல்லா அமாவாசையும் ஒன்றுதானே? நம் மக்கள் எதற்கெடுத்தாலும் ஏதேனும் அதிசயமாக சொல்லிக்கொள்வது ஏன்? உண்மை விளக்குவீர்களா?
இப்படி அடிக்கடி, வருடத்திற்கு இருமுறை சொன்னாலாவது நீங்கள் ஆன்மீகத்திற்குள் வருவீர்களா? என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உண்மையாக வழிபாடு யாருக்கு வேண்டும் தெரியுமா? பக்தி, யோகம், இவைகளை பொதுவாக சொல்லும் ஆன்மீகம் ஆகியவற்றில், முற்றிலும் ஈடுபாடு இன்றி, எதிர்புறமாக, பொருளியல் உலகில் ஓடுபவர்களுக்குத்தான் தேவை. இதென்னய்யா? பொருளியல் உலகை விட்டுவிட்டா ஆன்மீகத்திற்கு வரமுடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
எல்லா நேரங்களிலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? பிறந்தது முதல், வாழ்நாளின் முடிவுக்காலம் வரை பொருள் அவசியமே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தேவையை நிறைசெய்யும் வகையில், அன்றாடம் அதற்கென நேரத்தை செலவழித்துவிட்டு, நமக்காக, நம் உடலுக்காக, மனதிற்காக, உயிருக்காக, நம்முடைய முன்னோர்களுக்காக, வரக்கூடிய சந்ததியினருக்காகவும், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கித் தரலாம் அல்லவா? அதற்கும் வழியில்லை என்றால் எப்படி?
இந்த உலகிற்கு நாம் எதற்கு வந்தோம்? என்ற ஒரு கேள்விக்கான் சிந்தனையே இல்லாமல், ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைவோம் என்பது மட்டுமேதான் நம் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? என்று என்றைக்காவது, உங்களுக்குள்ளாக கேட்டதுண்டா? நிஜமாகவே அப்படி ஒன்று இருக்கிறதா? ஆம் இருக்கிறது. ஒன்றல்ல மூன்று. அதென்னாய்யா அந்த மூன்று?
உங்கள் பிறவியின் நோக்கமும், பிறவியின் கடமையும் நிறைவேற்றிக் கொள்ளுதல், மெய்ப்பொருள் உண்மையை அறிதல் ஆகிய மூன்று ஆகும். ‘ஏங்க, இதெலாம் ஆகிற வேலையா? இதை தெரிந்து கொள்வது அவசியமா என்ன? எல்லோருமா தெரிஞ்சிகிட்டு போய் சேர்ந்தாங்க? அப்படி தெரிஞ்சிகிட்டு என்னதான்யா ஆகப்போக்குது? இதைச்சொல்லி உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆகனுமோ? என்கிட்ட அவ்வளவு பணமும் இல்லையே.’ என்று மறுபடி நீங்கள் சொல்லுவீர்கள் தானே?!
எனக்கு என் முன்னோர்கள் சொல்லிச்சென்ற வழிமுறைகளை, நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். அவர்கள் என்னிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை, நானும் உங்களிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை, இது ஒரு உண்மையை, வழி வழியாக கடத்துதல். எரியும் அகல் விளக்கு கொண்டு, நெருப்பு அணைந்திடாமல், இன்னொடு அகல்விளக்கை ஒளியேற்றி வைப்பது போலவே ஆகும். ஆனால் நீங்களோ ‘எனக்கு ஒளியும் வேண்டாம். அதுவும் வேண்டாம்’ என்றால், எனக்கொன்றும் குறையில்லை. அது உங்கள் விருப்பமே!
தை அமாவாசை என்பது, புத்துயிர் பெற்ற சூரியனின் நகர்வைக் கொண்டும், அந்த சூரியனோடு கலக்கும் சந்திரனையும் கருத்தில் கொண்டு, வணங்கிக் கொள்வதாகும்.
ஆடி அமாவாசை என்பது, இதுவரை நமக்கு புத்துயிர் தந்த சூரியன், தன்னை புதுப்பிக்க நகர்வதை வாழ்த்துவதும், அதனோடு கலந்து நிற்கும் சந்தினையும் கருத்தில் கொண்டு வணங்கிக் கொள்வதாகும்.
இந்த வழிபாட்டின் உண்மை, அமாவாசை என்பது புனிதம் தரும் நாள், அந்தநாளில், சூரியனும், சந்திரனும் இணைந்த வகையிலான ஆற்றல் பூமிக்கு வருகிறது. அந்த ஆற்றல், நம்முடைய பிறப்பின் நோக்கத்தையும், கடமையையும் எளிமையாக்கும். மெய்ப்பொருள் உண்மையை உணர்வதற்கான வழிகளை உண்டாக்கும். நம் முன்னோர்களுக்கு செய்யும் வணக்கமும், வழிபாடும் நம் வாழ்வை வளமாக்கும்.
பதிவின் நீளம் கருதி சுருக்கமாக தந்திருக்கிறேன். மேலும் உண்மை அறிவதென்றால், காத்திருங்கள். அடுத்த பதிவுலும் தொடரலாம்.
வாழ்க வளமுடன்.
-
adi / amavasai / amavasya / at river and sea / birth ambition and duty / body mind and life / forefathers / generation / health and wealth / holy day / ritual worship / special / thai / truth



