CJ for You: fulfil

fulfil

Showing posts with label fulfil. Show all posts
Showing posts with label fulfil. Show all posts

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

Needing of money is only the reason of barrier on yoga journey, correct?


பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!

பதில்:

நாம் வாழ்கின்ற இந்த உலகவாழ்க்கையில், பணத்தேவை என்பது மிக அவசியமானதே. மேலும் ‘மனிதர்களுக்கு மட்டுமான வாழ்வில்’ என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ மனிதன் இந்த பணம் என்கின்ற அமைப்பிற்குள் சிக்கிவிட்டான். மனிதன் மட்டுமல்ல மனிதமும் சிக்கிவிட்டது. பொருள்முதல்வாத உலகம் எங்கும் நிரம்பிவிட்டது. மனிதர்கள் எல்லோரும் உழைத்து வருமானம் ஈட்டி, பொருள் பெற்று வாழ்தல் அவசியம் என்பதும், அதன்வழியாக மனிதர்களின் தரமும் நிர்ணயிக்கப்படுவதும் நிலைத்துவிட்டது. அதில் நாமும் வெற்றி பெறவேண்டியது அவசியமே.

பணத்தேவையை பூர்த்தி செய்யாமல், நாம் இந்த உலகில் வாழ்வும் முடியாது.
சில அடிப்படை விசயங்களை பெறவும் பணம் அவசியமாகிறது. முக்கியமாக, ஒரு மனிதன் சும்மா, வெறுமனே இருக்கக்கூடாது. அவன் உழைக்கவேண்டும், தன்னுடைய உழைப்பை, உலகுக்கு, சமூகத்திற்கு, பிறமனிதர்களுக்கு தரவேண்டும், அதற்கு அந்த மனிதன் சன்மானம், வெகுமதி பெற்றுக்கொள்ளலாம் என்பது உலம் ஏற்றுக்கொண்ட ஒரு நியதி. குழந்தைகளும், வயோதிகர்களும் மட்டுமே விதிவிலக்கு. சிலவேளைகளில் அவர்களும் சிக்கிக் கொண்டு துன்புறுகின்றனர். துன்புறுத்தவும்படுகின்றனர்.

இந்த பணத்தேவை, தனிமனிதனுக்கும் அவசியம், குடும்பம் என்ற சமூக நிலையில் வாழ்பவருக்கும் அவசியம். கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால், தனித்தனி நபர்களும், இந்த பணத்தேவையை நிவர்த்தி செய்ய உழைக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் ‘யோகம்’ என்பதும் அவசியமாகிறது. ஆனால் பணத்தேவை யோகத்திற்கு தடையா? என்ற கேள்வியும், யோகத்திற்கு பணம் தடையா? என்பதும் அவசியமற்ற கேள்விகளாகும். எப்படி என்பதையும் பார்க்கலாம்.

சராசரியாக ஒரு குடும்பத்தின் தேவை, இன்றைய காலத்தில் இந்திய ரூபாய் 20000/- (இருபதாயிரம்) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த வருமானம் குறைவு, யோகத்தில் பயணிக்க முடியாது என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது பற்றாக்குறை என்றால், கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பொழுது இந்த தொகையை ரூபாய் 40000/- (நாற்பதாயிரம்) என்று வைத்துக்கொண்டால், யோகத்திற்கு தடையில்லைதானே? ஆனால் யோகத்திற்கு வந்துவிடுவார்களா? இல்லையே.

அப்படியானால், மாதத்திற்கு 80000/- (எண்பதாயிரம்) வருமானம் ஈட்டுபவர்கள் யோகத்தில் இணைந்திருக்கிறார்களா? அதுவும் இல்லையே. எவ்வளவு வருமானமும் ஈட்டினாலும்கூட குறைவு மனப்பான்மையில் அவர்கள் சிக்கியிருந்தால், யோகம் அவர்களுக்கு கசக்கும். எனவே, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்பதெல்லாம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல ‘சப்பைக்கட்டு’. நீங்களும் இந்த உண்மையை ஆராய்ந்து பார்த்து விளக்கம் பெறமுடியும். 

உங்களுடைய தேவை என்ன? குடும்பத்தின் தேவை என்ன? வருமானம் எந்தெந்த வகையில் ஈட்டமுடிகிறது? எவ்வளவு வருகிறது? அதன் செலவும், அளவும், முறையும் என்ன? வருங்கால தேவை என்ன? அதற்கான சேமிப்பு எவ்வளவு? என்பதெல்லாம் ஆராய்ந்து கணித்துப்பாருங்கள். யோகத்தில் நீங்கள் முழுமனதோடு இணைந்து பயணிக்கலாம் என்பதே முடிவாகும்!

வாழ்க வளமுடன்.
-

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.