Sugumarje, write the notes on daily life. He is well known as a caricature artist, live entertainment artist, writer, poet, yoga master, theology researcher, spiritual teacher, podcaster and youtuber. Founder of SEREVIYO.
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?
உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.
அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.
ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.
நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.
இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?
குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.
எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.
வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் எப்படி இயற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? எப்படி பயன் தருகிறது என்ற விளக்கம் சொல்லுவீர்களா?
இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான, சிறு பெரு ஆலயங்களிலும், கோவிகளிலும், நவக்கிரகங்களுக்கு தனிப்பட்ட சந்நிதியும், ஒன்பது கிரங்கள் இணைந்து இருக்கும் வழிபாட்டு அமைப்பும் இருக்கும். ஆலயம் மற்றும் கோவிலில், முக்கியமான மூலவரை வணங்குவிட்டு, நவக்கிரகங்களை வழிபடுவது வழக்கம். இது இன்னமும் தொடருகின்ற பழக்கமும் ஆகும். எங்கோ இருக்கும் கிரகங்களை, இங்கே, இந்த இடத்தில் இருந்து வழிபடுவது தகுமா? என்றுதான் கேள்வி எழும். ஆனால், மனிதனின் மனதிற்கு எங்கே? ஏது எல்லை? பிரபஞ்சமும் நொடியும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும். பிரபஞ்சத்திற்கு அப்பாலும் மனம் செல்லும் அல்லவா?
அதுதான் இங்கே நிகழ்கிறது. கண்மூடி வணங்கும் நேரத்தில் மனம், அந்தந்த நவக்கிரங்களோடு தொடர்பு கொள்கிறது. அருள் கிடைக்கிறது. இதே தத்துவம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றிய, பஞ்ச பூத நவக்கிரக தவத்திலும் இருக்கிறது. நவக்கிரகங்களுக்கு முன்னதாக, பஞ்ச பூத தன்மைகளையும் இங்கே வணங்கிக் கொள்கிறோம். இத்தவம் செய்வதற்கு தனியே எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலேயே செய்துவரலாம். குருவின் வழிகாட்டுதல் போதுமானது. யோகத்தில் இணைவதும், குண்டலினி தீட்சையும் தேவையில்லை.
எல்லோரும், எவ்வயதிலும் செய்துவரலாம். எளிமையானது, பாதுகாப்பானது, மிகவும் நன்மையானது. ஜோதிட பரிகாரம் என்பதாக, எங்கெங்கோ கோவில், குளம், காடு, மலை, குளம், நதி, கடல் என்று தேடிப்போகாமல், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து அதற்கான நன்மையை பெறலாம். வாழ்விலும் மாற்றத்தை உணரலாம்.
இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்ற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்குக. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் விளக்கத்தை, காதால் கேட்டுக்கொண்டே, வார்த்தைகளில் கவனம் வைத்துக்கொண்டே, தவம் செய்யலாம். பொதுவாக அதிகாலை நேரம் முதலாக மாலை வரை செய்யலாம். இரவு 7, 8 மணிக்கு மேலாக செய்யவேண்டியதில்லை. இத்தவத்தை நீங்களாகவே வார்த்தைகளை சொல்லி செய்யலாம் எனினும், எல்லாவற்றையும் கவனம் வைத்துக்கொள்வது கடினம். எனவே யாராவது சொல்லக்கேட்டு, நீங்கள் தவம் செய்வது சிறப்பாகும். இதோ உங்களுக்காக, தவ செய்முறை பதிவு.
வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவக்கிரக தவம் - Panchabootha Navakraha Thavam by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன் ஐயா, நவக்கிரக தவம் செய்தால், அது எப்படி நன்மை தருகிறது? ஜாதகத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த தவம் ஒருவகையில் பரிகாரமாக செயல்படுமா? உண்மை என்ன? விளக்குக.
மனிதனின் பிறப்பு, அவனுடைய வாழ்வின் நோக்கம், அதிலிருக்கும் கடமை இப்படி எதுவுமே அறிந்துகொள்ளாது, பிறந்தோம் வாழ்ந்தோம் போகப்போகிறோம் என்று வாழும் மனித கூட்டம் ஒருபுறம். இறைவனாவது, இயற்கையாவது, கிரகங்களாவது, ஜாதகமாவது ஒன்றாவது, எல்லாமே நம்ம கையில்தான் என்று, தனித்து எல்லாம் அனுபவித்து வாழும் கூட்டம் ஒருபுறம். இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்தவரின் வளம் பறித்து தான்மட்டுமே வாழும் கூட்டம் இன்னொருபுறம். இப்படியாக பல்வேறு மனிதக்கூட்டம், நம்மோடுதான் வாழ்ந்து வருகிறது.
இந்த கூட்டங்களோடு, மனிதவாழ்வை உயர்த்திட விரும்பிய, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அறிவுரை நாடிச் சென்று, தன்னையும், தன் வழியாக வரும் வாரீசுகளையும் நல்வழிப்படுத்த நினைப்பவர்கள் பலர். இந்த உலகம் இவர்களால்தான், இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையை மறுப்பது என்பது வேறு, எது உண்மை என்று அறிந்து கடைபிடிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் அறியாதவர்களின் வாழ்க்கைதான், இவ்வுலகில் ஏனோதானோ என்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அது குறையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடவும் வாய்ப்பின்றி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
இந்த நிலையில், இப்படியான கேள்வியும், அதை அறிய விரும்பும் ஆர்வமும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த உலகில், நாம் காணும் எல்லா பொருட்களும், உயிர்களும் உருவாகவும், இயங்கிடவும் ஒரு பேராற்றல் துணையாக இருக்கிறது. அதைத்தான் நாம் இறையாற்றல், மெய்ப்பொருள் என்று உயர்வாக சொல்லி வணங்குகிறோம். அந்த ஆற்றல், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள், சூரியன்கள், கோள்கள் இவற்றோடும் கலக்கிறது. பலவேறு தன்மைகள் கொண்ட அந்த ஆற்றல், நாம் வாழும் பூமியை வந்தடைகிறது. அதை நாம் பன்னிரெண்டு ராசிகளாக அமைத்திருக்கிறோம். அந்த ராசிகளை கடக்கும் கோள்களைக் கொண்டு, அதன் தன்மையை, நமக்கு கிடைக்கும் பாதிப்புக்களை, நன்மைகளை அறிந்து கொள்கிறோம். இது அடிப்படை தாக்கம் அல்ல எனினும் நமக்குள்ளாக தூண்டுதல் நிச்சயமாக இருக்கிறது. அதை ஜோதிட கலை வழியாக கணிக்கிறோம்.
இங்கே பரிகாரம் என்றால் அது நம்மை திடப்படுத்திக் கொள்வதுதானே தவிர தப்பிப்பது அல்ல. ஆனால், இவ்வுலகில் பரிகாரம் பலவகைகளில், பொய்யும் புரட்டும் கலந்து ஏமாற்றம் அளிக்கிறது எனலாம். இந்நிலையில்தான், வேதாத்திரிய பஞ்ச பூத நவக்கிரக தவம், பரிகார தவமாக அமைந்துவிடுகிறது. இங்கே நாம், நம்முடைய ஜாதகத்தை நினைப்பதில்லை. நேரடியாக அந்தந்த கிரகங்களை நினைத்து தவம் இருக்கிறோம். அதன் ஆற்றலோடு கலக்கிறோம். நன்மை செய்ய வேண்டுகிறோம். அதனால் இது பரிகாரமாகவே மாறிவிடுகிறது. மனம் ஒன்றி நின்று தவம் செய்வதைத்தவிர, இங்கே எந்தவித செலவும் இல்லை.
இந்த காணொளி வழியாக, இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்க!
நவக்கிரக தவம் செய்வதில் ஏற்படும் நன்மைகள் உண்மையா? எவ்வாறு இத்தவம் உதவுகிறது?!