CJ for You: vettaveli

vettaveli

Showing posts with label vettaveli. Show all posts
Showing posts with label vettaveli. Show all posts

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Do we need these planets and stars when we try to know God in the form of meditation and penance in yoga? So Astrology and horoscopes are not necessary. Our yogic journey is beyond all that. Vedathri Maharshi would have risen accordingly. If that is the case, is your karmic astrological analysis wrong? What is your response to this?


வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?




உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.

அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.

நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.

இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.

எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.

வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன்.
-

What is the meaning of அ and உ in the spiritual by Tamil? Truth Explanation


அ நாவும் உ நாவும் சொல்லுவதென்ன? இதை எப்படி ஆன்மீகத்தில் நுழைந்தது? உண்மை விளக்கம்.


தமிழ் மொழிக்கென்று பலதரப்ப சிறப்பியல்புகள் அக்காலம் முதலாகவே உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மொழி பேசும், ஆய்வாளர்களும், தமிழை சிறப்பித்து போற்றுவதை நாம் காண்கிறோம். சங்க கால இலக்கியங்கள் தமிழிலே கிடைப்பதும், அதை இன்றும் கூட அந்த வடிவத்திலேயே படித்து, விளங்கிக் கொள்வதும் மிக சிறப்பானது ஆகும். தமிழ் மொழியின் காலம், அதன் எழுத்துக்களில் சொல்லப்படுவதுபோல, சந்திர சூரியர் இருக்கும் வரை, என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதியானது.

மனித வாழ்வியலுக்கு தமிழின் பங்கு அளப்பரியது. மெய்யியல் எனப்படும் இறையறிதலுக்கும், இயற்கை உணர்தலுக்கும், பக்தி வழியிலான வழிபாடுகளுக்கும் தமிழ் என்றும் உயர்வு என்பதில் ஐயமில்லை. தற்கான விஞ்ஞான உண்மைகளுக்கு, சமமான நிறைய உண்மைகள் இருந்தபொழுதும், அவை எல்லாம், பக்தி இலக்கியங்கள் என்று, நாம் தான் ஒதுக்கி வைத்திருக்கோம் என்று சிலர் சொல்லுவதையும் மறுப்பதற்கில்லை. சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் தமிழில் பெரும் பங்கை வழங்கினர். அதுபோலவே சைவ, வைணவ என்று பிரிந்திருந்தாலும், தமிழில் இறை உண்மையையும், விளக்கங்களையும் தருவதில் குறைஏதும் வைக்கவில்லை.

அப்படியாக, மெய்யியலில், மெய்ப்பொருள் இறை விளக்கத்தில் வந்து, கலந்து, சராசரி மக்களின் வாழ்வியலில் நின்றதுதான், இந்த அ நாவும் உ நாவும். அ என்பது அருவம் என்ற மாயமான ஒன்றை சொல்லும் குறிப்பாகும். உ என்பது உருவம் என்ற உணர்தல் வகையில் தரப்படும் குறிப்பாகும். அது ஏன் உணர்தலாக? என்றால், அதற்கு வடிவம் இல்லை என்பது விளக்கமாகிறது. இந்த அருவம், உருவம் என்பது எப்படி அர்த்தமாகிறது என்றால், ஒன்றுமில்லாதது, ஒன்றானது என்று சொல்லப்படுகிறது. அருவமே வெட்டவெளியாக, பாழ் ஆக குறிப்பிடப்படுகிறது. ஆதியாக இருந்தது பகவன் என்றாகி முதலாகவும் ஆனது என்ற திருவள்ளுவரை இங்கே நினைவு கூறலாம். விஞ்ஞானத்தில் மேட்டர் என்ற ஒன்றுமில்லாது, எனர்ஜி என்று ஆற்றலாக சொல்லப்படுவது போல. விஞ்ஞானத்திலும், இந்த மேட்டர், எனர்ஜி பிரிக்கமுடியாது என்கிறார்கள். அதுபோலவே அருவமும், உருவமும் பிரிக்கமுடியாது. 

இந்த உண்மையை, மெய்ப்பொருள் உண்மையை, குறிப்பாக அறிந்துணரும்படி,  அ, உ என்று சொன்னதுபோக, அதை மேலும் குறிப்பாக 8, 2 என்றும் குறிப்பிட்டனர். அதாவது தமிழ் எண்களாக. இப்போது அவை, தமிழ் எண்கள் வழக்கொழிந்து போய்விட்டது. உலகில் எல்லோரும் அரேபிய எண்களைத்தான், பயன்படுத்துகிறோம். எனினும் 0 என்பது இந்தியாவின் பங்கு என்று நிலைத்துவிட்டது.

அ என்பது தமிழ் எண்களில் 2 என்றும், உ என்பது தமிழ் எண்களில் 8 என்றும் எழுதப்படுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, குறிப்பிடும் பொழுது, ‘எட்டும் ரெண்டும் அறியா மூடருக்கு, எதைச் சொன்னாலும் விளங்கிவிடுவதில்லை’ என்ற சொல்வழக்கு இருந்தது என்கிறார். அந்த அளவிற்கு இது, சாராரி மக்களின் பேச்சு வழக்கிலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இன்றோ அப்படியில்லை.

இன்றும் கூட சில வயதான, அக்கால வாழ்வியலில் இருந்து மாறாத பெரியவர்கள். ஏதேனும் காகிதத்தில் எழுதும் பொழுது, உ என்று எழுதி தொடங்குவதை காணலாம். சிறுவயதில் நானும், இது என்ன உ? என்று கேட்டிருக்கிறேன். ‘இது பிள்ளையார் சுழி, இப்படி எழுதுவது, கடவுள் வணக்கம் போல’ என்று பதில் தருவார்கள். தமிழ் எழுத்தில் ஆரம்பம் என்றால், அ அல்லவா எழுதவேண்டும், இது என்ன உ? என்று அப்போதே குழம்பியதும் உண்டு. மனவளக்கலையில் இணைந்துகொண்ட பிறகுதான் உண்மை தெரியவந்தது. உ என்பது உருவம். இந்த உருவம், அருவத்தில் இருந்து ஆரம்பித்தது. ஐம்பூத தோற்றங்களால் மலர்ந்தது என்பதும் உண்மையாகிறது. இந்த ஐம்பூத தன்மையின் வெளிப்பாடாகவே, பிள்ளையார் (ஐந்து கரம்) என்றும் நின்றது உண்மைதானே? அருவம், உருவாமாகி, ஐம்பூதங்களாக மாறியது, பிரபஞ்சமாக, சூரியனாக, பூமியாக, சந்திரனாக, இயற்கையாக, தோற்றங்களாக, புல், செடி, மரமாக, ஜீவனாக, மனிதனாக எழுந்து நின்ற எழுச்சியும், பரிணாமமும் இங்கே காட்சியாக நிற்கிறது அல்லவா?

இதுதான் அந்த அ நாவும் உ நாவும் உணர்த்தும் உண்மைகளாகும். இவ்வளவு எளிமையாக, விளக்கமாக, அறிந்து, உணர்தலாக இருந்த வாழ்க்கை, திசை மாறி, எங்கெங்கோ சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறது எனினும், அவ்வப்பொழுது, இதுதான் உன்பாதை என்று இழுத்து வந்து நிறுத்தும் உண்மைகள்தான், நம்மை காக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi


கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?


கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?

பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.

பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.

இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.

மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.

எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.

விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.

இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.

கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,

   கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!

கட -  உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,

   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;

கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக் 

   கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!

கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.

   கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.

மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

How we can understand the Vettaveli and Suthaveli, what mentioned by Tamil Siddhars?


நம்முடைய தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லுகின்ற வெட்டவெளி மற்றும் சுத்தவெளி என்பதை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கம் கிடைக்குமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லுகின்ற வெட்டவெளி மற்றும் சுத்தவெளி என்பதை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கம் கிடைக்குமா?

பதில்:

இயற்கையையும், அதனோடு கலந்து காத்து நிற்கும் ஓர் உயர்ந்த ஆற்றலை அறிந்துகொள்ள ஆராய்ந்த, தமிழ்நாட்டு சித்தர்கள், யோகத்தின் வழியாக பல்லாண்டுகாலம் முயன்று, உண்மையை உணர்ந்து கொண்டார்கள். அந்த வழியில் தான், ‘நான் யார்?’ என்ற உண்மையையும் கண்டுகொண்டார்கள். பஞ்சபூத தத்துவத்தையும், அதில் முதன்மையான ‘ஆகாஷ் என்ற விண்’ என்பதுதான், சித்து என்ற உயிராகவும் ஜீவன்களிடத்தில் இருப்பதையும் அறிந்துகொண்டார்கள். சித்து என்ற உயிரை அறிந்ததால்தான் அவர்கள் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ‘நான் யார்?’ என்ற தத்துவத்தின் முடிவாகவே, பேராற்றலும், பேரறிவுமான தெய்வீகம் என்ற இறையை வெட்டவெளியாக கண்டார்கள். அதுவே சுத்தவெளி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வெட்டவெளி மற்றும் சுத்தவெளி இரண்டையுமே, வெற்று வார்த்தைகளாலும், பேச்சாலும், எழுத்தாலும் புரியவைத்திட முடியாது. அதில் தோல்வியே கிடைக்கும். உணர்வுப்பூர்வமாக இருக்கும் ஒன்றை எடுத்துச்சொல்லுவது என்பது மிக கடினம்.

அப்படி சொல்லமுடியாத என்றால் அது பொய்தானே? என்று பகுத்தறிவுவாதிகள் கேட்பார்கள். பகுத்தறிவும் தகுதியுள்ளவர்கள், உண்மையிலேயே என்ன என்று பகுத்துத்தானே அறியவேண்டும்? அதைவிட்டுவிட்டு, இருப்பதையே இல்லை என்று மறுத்துவிட்டால் அது ‘பகுத்தறிவு நிலை’ ஆகுமா? அத்தகைய பகுத்தறிவு நிலைதான் யோகத்தில் நாம் கற்கிறோம். ஆனால் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்.

ஏன் சொல்லவோ, எழுதவோ முடியாது? என்பதை பார்க்கலாமா? ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள், இப்போது அதன் சுவை என்ன? என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் இரண்டாவதாக காகிதத்தில் எழுதிவிடுங்கள். அடுத்து, கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் மூன்றாவதாக காகித்தில் எழுதிக்கொள்ளுங்கள். இறுதியாக ஒரு அன்னாசிப்பழத்தையும் சாப்பிட்டு விடுங்கள். அதனுடைய சுவையையும் முடிவாக காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். என்ன எழுதியிருப்பீர்கள்? என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இப்பொழுது, அந்த காகிதத்தில் எழுதிய சுவையை வாசித்துப் பாருங்கள். இந்த நான்கு சுவைகளும் ஒன்றா? பலவா? அதை அப்படியே உங்களுக்கு எதிரில் இருக்கும் நபருக்கு, புரியவைத்திட முடியுமா? முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் உணர்ந்த அந்த சுவையை அப்படியே, அதேபோலவே, அந்த நபருக்கு விளக்கம் தந்து உணரவைக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அது உங்களால் முடியுமா? ஒருவேளை உங்களால் மட்டுமே முடியுமா?

பகுத்தறிவுவாதிகள் எப்போதுமே அடையாளம் காட்டும், சயின்ஸ் என்ற விஞ்ஞானிகள், சுத்தவெளி மற்றும் வெட்டவெளியை மட்டுமல்ல, பூமியின் உயரே, குறைந்தபட்சமாக 80 கிலோ மீட்டருக்கு மேலே, ஏதுமில்லை. ஒன்றுமற்ற இருட்டுத்தான் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரை, அது ஒன்றுமில்லை, ஏதுமில்லை என்பதுதான். அதனால் நாமும் அப்படியே நினைத்து ஏற்றுக்கொள்ளலாமா?
இத்தகைய விஞ்ஞானிகள்தான் ‘அணுவை பிளக்கவே முடியாது’ என்றார்கள். பிறகு நடந்தது என்ன? என்றாலும் இன்னமும் அது, அடுத்து நகரமுடியாமல், மூன்று தன்மைகள் கொண்ட குவார்க்குகளோடு நிற்கிறது. 

சரி, வேதாத்திரி மகரிஷி ஒரு கேள்வி கேட்கிறார். ‘இந்த பூமியும், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும் எப்படி மிதக்கின்றன? யார் தாங்கி நிற்கிறார்கள்? மிதக்கும் பொருள் வலு உடையதா? தாங்கும் பொருள் வலு உடையதா?’
இந்த கேள்விக்கு, நீங்களும் பதில் தர முயற்சியுங்கள்.
வாழ்க வளமுடன்
-

What is called by Mahaakash, Boothaakash and Siddhaakash?


மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


பதில்:

மெய்ப்பொருளாக உள்ள, முழுமுதற்பொருளையும், அதன் பரிணாமத்தையும் விளக்கும் வகையில் சித்தர்கள் நமக்குத்தந்த நிலைகள்தான் இந்த மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்பதாகும். இறை, இறையாற்றல், மெய்ப்பொருள், வெட்டவெளி, சுத்தவெளி என்று பலவாறாக உயர்ந்த கருத்தில், மதிப்புத்தந்து அழைக்கக்கூடிய ஒன்றை, முழுமுதற்பொருளை, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், காத்து, அன்பும், கருணையோடும் இருந்துவரக்கூடியைத்தான், கட+உள்=கடவுள் என்று அழைத்து, யோகத்தின் வழியாக அறியவும் முடியும் என்று வகை செய்தனர் சித்தர்கள்.

எவ்வகையிலும் உருவமில்லா மெய்யை, எளியவர்கள் உணரவே கருத்துருவாக இருப்பதை, உருவ வழிபாடாக சிவம் என்பதை சிவனாக அமைத்தார்கள், பின்னாளில் வந்தோர் சிவத்தின் இயக்கத்தை நாராயணன் என்று அமைத்தார்கள். பின்னாளிலும், இந்நாளிலும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகாசம் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது, மெய்ப்பொருளின் பரிணாமத்தில் வந்த காட்சியாக வந்த, எழுந்த முதற்பொருளாகும். இந்த ஆகாசம் வடமொழி சொல்லாகும். தமிழில் இதை விண் என்று அழைக்கிறோம். இப்படி ஆகாசம் என்ற ஒன்றை முந்தைய நிலையை, பரிணாமத்தில் எழுச்சி பெறாமல், மாற்றம் அடையாமல், உள்ளடக்கமாக, மெய்ப்பொருளாகவே இருந்த நிலையைத்தான் சித்தர்கள் ‘மகாகாசம்’ என்று அழைத்தனர். மகா என்றால் மிகப்பெரிய, அளவிட முடியாத, விரித்துச் சொல்லமுடியாத என்று அர்த்தமாகிறது.

அடுத்து வரும் ‘பூதாகாசம்’ என்பது மெப்பொருள், தன்னிறுக்கத்தால், நொறுங்கி, எழுச்சிபெற்று, பரமாணுவாக தோன்றி, அந்த பரமாணுவின் கூட்டாக அமைந்த ஆகாசம் என்ற பொருளாக, முதல் பஞ்சபூத (பௌதீக) தோற்றமாக மலர்ந்ததை சொல்லுவதாகும். இந்த ஆகாசம் என்பதற்கு பிறகுதான், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற மற்ற நான்கான, காற்று, வெப்பம், நீர், மண் என்ற் பஞ்சபூத தோற்றங்களாக வந்தது. இந்த ஐந்தும் கூட்டாகவும், இவற்றில் சில பல கூட்டாக இணைந்து உருவான பிரபஞ்சப் பொருள்கள், இயற்கைப் பொருட்கள் அனைத்தும் ‘பூதாகாசம்’ என்று குறிப்பிடுகின்றனர். பஞ்ச பூதங்களை, அதனால் ஆன ஆகாசம் என்ற தோற்ற முதற்பொருளை உள்ளடக்கியது என்று அர்த்தமாகிறது.

அடுத்ததாக வரும் ‘சித்தாகாசம்’ என்பது உயிராக மாறிய ஆகாசம் என்ற கருத்தில் சொல்லப்படுவதாகும். பூதாகாசத்தின் பரிணாமத்தில் இருந்து, அதன் தன்மாற்றமாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து உணர்வை அறியும் வகையில் அடுத்தாக எழுந்ததே ‘மனம்’ ஆகும், இதை உள்ளடக்கமாக, மனம் என்பதைக் கொண்டு மலர்ந்தது ஜீவன்கள் ஆகும், இவை ஓர் அறிவுமுதல், ஆறறிவு மனிதன் வரை முழுமையடைந்து நிற்பதாகும். மனம் என்பது, ஆகாசத்தின் படர்க்கை நிலையே ஆகும். மனம் அதன் ஆழ்நிலையில் கருமையமாகவும் அமைகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சித்து என்றால் உயிர் என்றும் பொருளாகும். உயிராக மாறிய ஆகாசம் என்ற பொருளில்தான் ‘சித்தாகாசம்’ என்று அழைத்தனர். இந்த சித்து என்று உயிரை உணர்ந்தால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 

வாழ்க வளமுடன்.

How vethathiriyam make understand the God to us?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடவுளை வேதாத்திரியம் எப்படி காண்கிறது என்று விளக்குவீர்களா?

பதில்:
வழக்கமாக நாம் இங்கே குறிப்பிடுவதுண்டு, கட+உள் என்ற செயல்குறிப்புத்தான் கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது. இதைச் சொல்லும்பொழுதே அந்த கடவுள் எப்படி காண்பது என்பதும், எதுவாக இருக்கும் என்ற ஊகமும் கிடைத்துவிடுகிறதுதானே?!
கடவுள் தனியாக இல்லை, நமக்குள்ளாக இருக்கிறதோ? என்ற ஐயப்பாடு எழுந்தால்கூட போதுமானதுதான்.

ஆனால் பெரும்பாலோர் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லை, உயர்ந்த பெரிய கோவில்களிலும், வழிபாடு தளங்களிலும், மலை உச்சிகளில் உள்ள வழிபாட்டு நிலைகளிலும் தான் இருக்கிறது என்பார்கள். தவறில்லை. அவரவர் எப்படி அந்தந்த வயதில், கடவுள் என்ற நிலையை புரிந்து வைத்திருக்கிறார்களோ அதன்படி அவர்கள் அதை புரிந்துகொண்டு, வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதையே பக்தி மார்க்கம் என்று நாம் அழைக்கிறோம். அதாவது சராசரி மனிதருக்கான இறையுணர்தல் பாதை என்றும் சொல்லலாம்.

ஆனால் யோகத்தில் உள்ளவர்கள், பக்தியை கடந்து, அதன் உண்மை என்ன? என்று அறிந்துகொள்ள ஆர்வமும், முயற்சியும், உந்துதலையும் பெற்றவர்கள், தகுந்த குருவை நாடி, அவர் வழியாக குண்டலினி எனும் உயிராற்றல் திணிவு சக்தியை எழுப்பிக்கொண்டு, தவம் இயற்றி உண்மையான இறையை, கடவுளை காண்கிறார்கள்.

வேதாத்திரியம் என்பது, எளியமுறை குண்டலினி யோகமாகும். உலகில் இருக்கும் பலவித யோகங்களின் அடிப்படையில் உள்ள சிரமங்களை எல்லாம் நீக்கி, குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலக மக்களுக்காக வழங்கியதாகும். வேதாத்திரியத்தில் கடந்து உள்ளே சென்றால், இறையை நாம், நமக்குள்ளாக ‘அறிவாக’ காண்கிறோம். அறிவு என்பது இங்கே உயர்ந்த மெய்யறிவு என்று பொருளாகும். வெறுமனே சும்மா, படிப்பினாலும், அனுபவத்தாலும், இயற்கையாகவும் பெறும் மூளை செயல்பாட்டு அறிவு அல்ல. இது உணர்வால் நாம் பெறும் உண்மை அறிவு ஆகும்.

இந்த அறிவு, விவேகம் என்றும் வழங்கப்படும். இந்த விவேகம், வேகம் என்ற ஆற்றலோடு, பிரபஞ்சத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேகம், விவேகம் என்பதையே ‘சித்தர்கள் வெட்டவெளி’ என்று குறிப்பிட்டார்கள். 
வேதாத்திரியத்தின் வழியாக ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த உண்மையை நீங்களும் உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

Difference between the Siddhar kundalini yoga and Vethathiriya.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று விளக்குவீர்களா?


பதில்:

வேதாத்திரியம் தந்த, வேதாத்திரி மகரிஷியைக் கூட சித்தர் என்று அழைப்பது பொருத்தமானதுதான். முதலில் சித்தர்கள் என்றால், சித்து என்ற உயிரை, அதன் இருப்பை, தன்மையை, மதிப்பை, இயக்கத்தை அறிந்து உணர்ந்தவர்கள் என்பதாகும். சித்தர்களே, வெட்டவெளி தத்துவத்தை சிவமாக ஏற்று, அதை குண்டலினி யோகத்தின் வழியாக எப்படி பெறுவது என்ற வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும் வடிவமைத்து தந்தார்கள். விரும்பியோருக்கு பயிற்றுவித்தார்கள். கவி பாடல்களாக எழுதியும் வைத்தார்கள். உலகெங்கும் சென்று அங்காங்கே இருந்த மக்களுக்கும் அதை பக்தி வழியில் வழிபாடகவும் அமைத்துத் தந்தார்கள். பின்னாளில்தான் பக்தியில் குழப்பங்கள் நேர்ந்து, சித்தர்களின் உண்மையான கருத்தும், நோக்கமும் சிதைந்துவிட்டது. 

உங்களுக்குத் தெரியுமா? இன்றைய, இப்போதைய காலகட்டத்திலும் அத்தகைய சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

சித்தர்களின் யோகமுறை கடினமானது. என்றாலும் கூட காலத்தால் அவை எளிமையாக மாற்றம் பெற்றன. உலகெங்கும் அந்த சித்தர்களின் வழியாக வந்தவர்கள், அதை ஆராய்ந்து வந்ததால், இறையாற்றலின் கருணையாலும் அத்தகைய எளிய முறைகள் சாத்தியமாகிற்று. எனினும் அந்தக்கால கடின முறையை இப்போதும் பின்பற்றுபவர்கள் உண்டு.

வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம், அத்தகைய எளியமுறையைத்தான் பின்பற்றுகிறது. சித்தர்கள் தந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, தற்கான விஞ்ஞான வளர்ச்சியில், எது ஏற்றதோ அதைக் கொண்டு, இறைதத்துவத்தை விளக்குகிறது. சித்தர்கள் கண்டு இவ்வுலகுக்கு தந்த காந்தம் என்ற உண்மை விளக்கம், கந்தனாகி பக்தியில் நின்றுவிட்டது. அதே காந்தம், வேதாத்திரியத்தில் வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாகவும் மலர்ந்து விட்ட உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, சித்தர்களின் சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால், பெரும் வித்தியாசம் ஏதுமின்றி, இக்கால மனித அறிவின் வளர்சிக்கு ஏற்றபடி, இறை தத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுப்பது மட்டுமேதான்.

வாழ்க வளமுடன்.