Why the changes are low level within people based on yoga even it is simplified?
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?
பதில்:
யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.
அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.
எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.
தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.
பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள். யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.
வாழ்க வளமுடன்
-