Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?
யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?
பதில்:
சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின், தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.
உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது, அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.
எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.
இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’
எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும்.
வாழ்க வளமுடன்
-