Why getting allergies and pain on my regular simplified exercise? | CJ

Why getting allergies and pain on my regular simplified exercise?

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-