கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.
பதில்:
உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல், பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!
எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.
தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.
நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம். வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.
சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.
வாழ்க வளமுடன்
-