CJ for You: missing

missing

Showing posts with label missing. Show all posts
Showing posts with label missing. Show all posts

At the end of the Vethathiriya meditation, instead of saying Om Shanti three times, it is a bit difficult to say Amaiti or peace. I don't think there's really peace there. Is it right to change it like this without saying Om Shanti? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவத்தின் முடிவில், ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்லுவதற்குப் பதிலாக, அமைதி என்று சொல்லுவது, சற்று நெருடலாக இருக்கிறது. உண்மையிலேயே அங்கே அமைதி வரவில்லை என்று கருதுகிறேன். ஓம் சாந்தி என்று சொல்லாமல் இப்படி மாற்றுவது சரிதானா? விளக்குக.


நீங்கள் வேதாத்திரி மகரிசியின் காலத்து வேதாத்திரிய அன்பர் என்று கருதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்து கொண்டது 2006ம் ஆண்டில் தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே, ஓம் ஷாந்தி, அமைதியாக மாறிட்டது. இந்த மாற்றத்தற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று நமக்குத் தெரியாது. எனினும், இந்திய அரசும், அரசியலமைப்பும், மக்களும், மதம் சார்ந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே, தனித்த நிலையில் ‘அமைதி’ என்று மற்றம் செய்யப்பட்டது.

இதில் வேதாத்திரி மகரிஷிக்கு ஏற்பு உண்டா? என்றால் இல்லை என்றுதான் கருத இடமிருக்கிறது. காரணம், வேதாத்திரியம் என்பதே எந்த எல்லைக்குள்ளும் சிக்கிடாத தன்மை கொண்டது. ஆண் பெண் என்ற பேதம் கூட அதற்கு இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில், ஓம் ஷாந்தி என்பது மதரீதியாக இருக்கிறது என்பது, புரிந்து கொள்ளாத தன்மை. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் உருவாகாமல இருக்க, மாற்றித்தானே ஆகவேண்டும்? அதனால் மாற்றப்பட்டுவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் ‘அமைதி’ என்று சொன்னால், அந்த வார்த்தை அமைதியை தருவதில்லை என்பது நிஜமே. ஏனென்றால், ஓம் ஷாந்தி என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் கடந்த இரு தசாம்ச ஆண்டுகளாக, வேதாத்திரியம் பழகுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், ‘அமைதி’ என்று சொல்லித்தான் அமைதியை நிலை நாட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஒரே நல்லது என்னவென்றால், இனிமேல் யாரும் ‘ஓம் ஷாந்தி’ என்று சொல்லி தவத்தை முடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தவில்லை. அந்த வகையில் விரும்புவோர் ‘ஓம் ஷாந்தி’ என்றும் சொல்லலாம். ‘அமைதி’ என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட இதே கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே ஒரு அன்பர் கேட்டுள்ளார். அந்த பதிவை இப்பொழுது உங்களுக்காக பகிர்கின்றேன்.  இந்த பதில் வழியாக, நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவரும் என்பது உண்மை. இதோ!

-

கேள்வி: சுவாமிஜி! உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

மகரிஷியின் பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என்ற குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் “ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறுவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

-

வாழ்க வளமுடன்!

How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?


யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


பதில்:

உங்களுக்குத் தோன்றிய இக்கருத்து, யோகத்தில் தங்களை, இணைத்துக் கொண்ட எல்லோருக்குமே தோன்றும் என்பதே உண்மை. நீங்கள் வாய்திறந்து கேட்டுவிட்டீர்கள். பெரும்பாலோர் கேட்கமாட்டார்கள். தங்களுக்குள் சந்தேகத்தோடு இருப்பார்கள். யோகத்தில் ஆர்வம் வருவதும், அதில் தங்களை இணைத்துக்கொள்வதும், குருவின் வழியாக தீட்சை பெற்று, குண்டலினி சக்தியை உயர்த்திக்கொண்டு தியானம் பழகுவதும் மிக எளிதானதல்ல. பலப்பல பிறவிகளின் வழியாக நாம் இழந்த ஒன்றை, இந்தப்பிறவியில் பெரும்பேறாக அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய உண்மையை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.

காரணம் என்ன? இதற்கு முன்னதாக நாம் வாழ்ந்துவந்த நிலைகளிலும், அதில் கிடைத்த அனுபவங்களிலும் மனம் ஒன்றி அனுபவித்துவிட்டோம். அதனால் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதான ஒன்றாக கருதுகிறோம். அவசியமில்லாததோ? என்றும் சந்தேகப்பட்டு விடுகிறோம்.

வல்லூறு என்ற ஒரு பறவை இருக்கிறது. கழுகு என்ற பறவை இனத்தைச் சேர்ந்தாலும் அது கழுகைவிடவும் விட மிக பெரிதாக இருக்கும். கழுகு என்ற இனத்தில்  ‘கருடன்’ என்பது உண்டு, அதுவும் வேறுவகையானதே. இந்த வல்லூறுக்கு மிக நீண்ட இறக்கைகள் இருக்கும். எட்டுஅடி நீளம் கொண்டவை உண்டு என்கிறார்கள். மிக தீர்க்கமான பார்வை, வேகம், தன்னைவிட பெரும் எடையை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்டது. சரி, இதை ஏன் இங்கே சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வாருங்கள், மேலும் பார்க்கலாம்.

அத்தகைய வல்லூறுக் குஞ்சொன்று அடிபட்டு சாலையில் விழுந்துகிடந்தது. அதை பறவைகளின் ஆர்வலர், வனத்துறையிடம் கொடுத்துவிட்டார். அவர்கள், அந்த வல்லூறுக் குஞ்சை கவனமாக மருந்துகள் கொடுத்து, அதன் காயத்தை ஆற்றி, சிதைந்து போயிருந்த சிறகுகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, கூண்டுக்குள் வைத்து காத்துவந்தனர். வேட்டையாடும் பழக்கமுள்ள இனம் இந்த வல்லூறு, ஆனால் கூண்டுக்குள் உணவைக் கொடுத்து வளர்த்தனர். நாளடைவில் அது குணமடைந்துவிட்டது. வளர்ந்தும் விட்டது. அதன் இயல்பில் அவர்களை அலகால் கொத்தவும், தாக்கிடவும் செய்கிறது. இப்போது அதற்கு கூண்டு பொருந்தவில்லை. அவ்வளவு பெரிதாகவும் ஆகிவிட்டது. 

வனக்காவலர்கள் திட்டமிட்டு, அதை மலைக்காடுகளில் விட்டுவிட முடிவு செய்தனர். அடர்ந்த அந்த மலைக்காட்டின் உச்சியில் கொண்டு சென்று, முகத்திலும் கைகளிலும் உறை போட்டுக்கொண்டு கவனமாக, அக்கூண்டை திறந்துவிட்டனர். அந்த வல்லூறு, தன் கூண்டைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. வனக்காவலர்கள் சிறிய மூங்கில் கம்புகளால் வல்லூறை கூண்டுக்கு வெளியே தள்ளுகிறார்கள். அப்படியும் நகரவில்லை. ஆனாலும் தொல்லை தாங்காதவாறு கூண்டுக்கு வெளியே வந்துவிட்டது. அது நடந்து நகர்கிறது. இறக்கைகளை விறிக்கவும் இல்லை, அது பறக்கவும் இல்லை. அதற்குப்பிறகு என்ன நடந்தது? அதை பிறகு சொல்லுகிறேன். இந்த வல்லூறின் நிலைதான் உங்களின் நிலைமை.

கூண்டில் இருந்து பழகியதால் அது கூண்டை விட்டும் நகரவில்லை, பறக்கவும் இல்லை. நீங்களும் இந்த உலக வாழ்க்கையில், மனதைக்கொண்டு வாழ்ந்து பழகிவிட்டு, உண்மையை நோக்கி யோகத்தின் வழியாக பயணிக்க தயங்குகிறீர்கள்.

மனிதனின் இயல்பும், பிறவியின் நோக்கமும் தன்னை அறிவதுதான். அதை விட்டு விலகிவிடலாமா? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை. 

வாழ்க வளமுடன்

-



Why need yoga, we need to life like as others, who free from on yoga in life?


மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.

உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள். 

உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!

மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.

உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.

வாழ்க வளமுடன்.
-

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.

Are you missing yourself into the forest?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகையே மாற்றி அமைக்கும் அறிவியல் உச்சமான காலத்தில் கூட கடவுளை அறிதல் என்பது வேடிக்கை என்கிறார்களே?!


பதில்:

அப்படி சொல்லுபவர்கள் இப்போது மட்டுமா சொல்லுகிறார்கள்? அந்தக்காலம் முதலாகவே அப்படியான வார்த்தைகள் நிலையாக இருக்கின்றன. என்ன ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கட உள் என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் மட்டும் அவர்களுக்கு புரிந்தபாடில்லை. அதுகுறித்த சிந்தனைக்கும் அவர்கள் வருவதே இல்லை.

கடவுள் என்பது, எதையோ யாரையோ குறிக்கும் பெயர் சொல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் Noun அல்ல. அது வினைச்சொல். ஆங்கிலத்தில் சொல்லப்படும் Verb ஆகும். கடந்து உள்ளே செல்க என்ற வார்த்தையின் சுருக்கமே கடவுள். எங்கே கடந்து உள்ளே செல்வது? என்று கேள்வி எழுப்பினால், பதிலாக வருவது, உனக்குள்ளாக! எப்படி நாம் நமக்குள்ளாக செல்லமுடியும் என்றால்? மனதால் செல்லமுடியும். ஆகவே மனதைக்கொண்டு, நமக்குள் கடந்து உள்ளே சென்றால், உண்மை அறியலாம். ஆகவே உண்மையை அறிவதுதான் கடவுள் என்று சொல்லப்பட்டதே தவிர கடவுளை அறிய கடவுள் தேவையில்லை. சரிதானே?!

அந்த உண்மையை பல்வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடுவது உலகில் உண்மை அறிந்தோர்களின் வழக்கம். சித்தர்கள் சுத்தவெளி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் இறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் The God, Supreme Power, Divine, Almighty என்று சொல்லுகிறார்கள். இப்படி உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொடு சமூகமும் தங்களுக்குரிய உண்மையை, ஓவ்வொரு பெயரில் அழைத்து வணங்குகிறார்கள். இதில் இப்படியான கேள்வியை கேட்பவர்கள் எதை விளக்க முயற்சிக்கிறார்கள்? உலக மக்கள் வணங்குவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை. அது குறித்து அவர்களிடம்தான் உண்மையை கேட்க வேண்டும். ஆனாலும் எப்படியாவது விளக்கம் கொடுப்பார்கள்தானே?! 

சரி, கடந்து உள்ளே இருக்கிற உண்மையை ஏன் அறியவேண்டும்? என்றும் ஒரு கேள்வி எழும் அல்லவா? உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டீர்கள் என்று உதாரணம் கொள்ளலாம். வீட்டுக்கு அருகே காடா? காட்டையே அழிச்சிட்டாங்க, எப்படிங்க இருக்கும்? என்று கேட்கக்கூடாது. அது அடர்ந்தகாடு, உள்ளே சென்றால் நிச்சயமாக பாதை மறந்துவிடக்கூடிய அபாயம் கொண்டது. அப்படியான காட்டுக்குள் உங்களை அறியாமல் சென்று மாட்டிக்கொண்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வீடு எங்கே, எப்படி போகவேண்டும் என்று சிந்திப்பீர்கள் தானே? அல்லது இந்தக்காடே எனக்கு போதுமானது, இங்கே நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்று முடிவு செய்து அங்கேயே தங்கிவிடுவீர்களா?

உங்கள் வீடு எது என்று தேடுவதுதானே உண்மை?! அதைத்தான் நாம் கடந்து உள்ளே சென்று தேடுகிறோம். அவர்களுக்கு அந்த அடர்ந்தகாட்டை விட்டு வர விருப்பமில்லை, ஆர்வமில்லை, முயற்சியும் இல்லை. நம்மையும் தடுக்க முயற்சிக்கிறார்களே?! சரி, அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாம் மட்டுமாவது ‘வீடுபேறு’ என்ற சித்தர்கள் சொன்ன வீட்டை அடைவோமே!

வாழ்க வளமுடன்.

- 

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

How long the Master's help we need? After completion anyway we request more!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோக குருவின் உதவி எவ்வளவு காலம் தேவைப்படும்? எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை இருக்கிறதே?!


பதில்:

எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை எழுவது உண்மைதான். என்றாலும் கூட, தன்னை இந்த வான்காந்தத்தில் கலக்க விட்டுக்கொண்ட பிறகு நாம் அப்படி நினைப்பது சரிதானா? என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம். மனதின் இயல்பு என்னவென்றால், இழப்பை பதிவு செய்துகொண்டு அவ்வப்பொழுது வருந்துவதுதான். ஆனால் குண்டலினி யோகம் பயிலும், மனவளக்கலை அன்பராகிய நாம் அதை மாற்றி அமைக்கவும் வேண்டும். 

ஒரு யோக குருவின் உதவி, எல்லாம் கற்கும் வரை தேவைதான். அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். கைபிடித்து அழைத்து வந்து இதுதான் பாதை, என்று காட்டிவிட்டால், பயணம் போகவேண்டியது நாம் தானே? இனி எந்த பயணத்தில் தயக்கம் எதற்கு? நாம் என்ன நினைக்கிறோம் என்றால், இந்த பாதையில் ஏதேனும் குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது? எனக்கு அதெல்லாம் தெரியாதே? என்று நினைக்கிறோம். தன்னையறியும் வழியிலும், இறையுணர்வு பெறும் வழியிலும் எப்படி குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வரலாம் என்று நம்புகிறீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்? இது சரிதானா?

அப்படியே வந்தாலும் கூட, நம்முடைய குரு கைவிட்டுவிட்டாரே என்றா நினைப்பீர்கள்? அதற்கும் வழி இல்லையே? எனவே இது நீங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட சிந்தனைதானே தவிர ஏதும் உண்மையில்லை. முக்கியமாக நம்முடைய குரு, நம் உயிரோடு கலந்துவிட்டதை நீங்கள் மறக்கலாமா?

நம் ஒருவரை மட்டுமே, இறுதிவரை உயர்த்திதர வேண்டும் என்பதும் முறையாகுமா? குருவின் நோக்கமும், செயலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், உய்யவேண்டும் என்பதல்லவா? அதற்கு நாம் தடையாக நினைக்கலாமா? அவரை துணையாக நினைத்துக்கொண்டு, அவரைப் போற்றி வணங்கிக் கொண்டு, பயணித்துகொண்டே இருப்பதுதான் நம்முடை வேலை. அதுதான் நம்முடைய குருவுக்கு முழுமை தருவதாகும், முடிந்தால் நீங்கள் இன்னொருவரையும் உயர்த்துங்கள். வேறு எந்தவித குறையும் வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். உண்மை உணருங்கள்.

வாழ்க வளமுடன்.

Why and What the important of the re-touch?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

இன்றுமுதல் வேதாத்திரிய கேள்வி பதில்களும் பதிவாக வழங்கப்படுகிறது. வாழ்க வளமுடன்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மறுதீட்சை என்பது அவசியம்தானா?


பதில்:

மறுதீட்சை என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். கொடுக்கப்பட்ட தீட்சையை, கற்றுக்கொடுக்கப்பட்ட தீட்சையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக, மறுதீட்சை அவசியமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், எளியமுறை குண்டலினி யோகமான மனவளக்கலையைக் கூட, அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழலில் சிக்கி விடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வேலைப்பளு, குடும்பத்தில் அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வு, பிரச்சனைகள், மனவளக்கலை மன்றத்தை விட்டு தூரமாக விலகி இருத்தல், நீண்ட நோய் தொந்தரவு, ஊர் விட்டு ஊர் மாறிவிடுதல், வெளிநாடு சென்று விடுதல், தவம் செய்யவே நேரம் கிடைக்காமை, விபத்தில் உண்டான காயம், உடல் வலி பிரச்சனை, உடலில் ஏற்றுக்கொண்ட அறுவைசிகிச்சை என்று இருக்கலாம்.

இவர்கள் அனைவரும், முழுமையான யோககல்வி கற்றிருந்தாலும், மறுபடி தவம் செய்ய நினைத்தால், செய்யலாம் என்பது சரிதான். ஆனால் அங்கே ஒரு தடை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாமே?! அந்த தடையினால், குண்டலினி சக்தியின் பாதையிலும் அதன் ஓட்டத்திலும் பிரச்சனை உருவாகலாம். அதனால் ஆக்கினை தவம் செய்தால், மிகச்சரியாக ஆக்கினையில் பொருந்திவர வேண்டுமே? அதுபோல சாந்தி தவம் செய்தால், மூலாதாரத்தில் நிலைபெற வேண்டுமே? அப்படி இல்லையென்றால் அது, பலவித உடல், மன பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 

எனவே, மறுதீட்சை அவசியம்தானா? என்ற கேள்வியை விட்டுவிட்டு, இத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் காலமாக, தவம் செய்யாததால், வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, மனவளக்கலை மன்றத்தை அணுகியோ அல்லது தகுந்த ஆசிரியரைத் தேடியோ, அவரிடம் நேரில், மறுதீட்சை பெறுவது நல்லதுதான்.

தவம் எடுத்துக்கொண்ட எல்லோருமே, மறுதீட்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்று எதிர்கேள்வி கேட்டு உதாசீனம் செய்தால், அதற்கான பலனை அனுபவிக்கவேண்டியது நீங்களேதான்!

மேலும், மறுதீட்சை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெள்வுபடுத்திக் கொள்க. உங்கள் விருப்பத்தில் மறுதீட்சை பெற்றுக் கொள்வது சிறந்த வழி. எனவே அக்கறையின் வழியாகவே இதற்கான பதில் தரப்படுகிறது!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில் என்ற இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!