CJ for You: habit

habit

Showing posts with label habit. Show all posts
Showing posts with label habit. Show all posts

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?


தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா,  தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


பதில்: 

இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு  அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.

துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!

மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!

வாழ்க வளமுடன்

-

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.

The spider's action and effects based on unnatural food



யோகத்தில் ஆர்வம்

கடவுளே இல்லை என்ற ஒரு தலைமுறையும் அவர்களின் மூன்று தலைமுறையினரும் நம்மோடு வாழ்ந்து வரும் காலம் இது. அப்படிபட்ட இடத்தில், தன்னையறியவும், இறையுண்மை பெறவும், யோகத்தில் ஆர்வம் எழுமா என்பதே சந்தேகம்தான். அதையும் மீறி யோகத்தில் இணைய விரும்பினால், சரியான குரு யார்? என்றும் சந்தேகம் எழுவது இயல்பு. வேறுவழியே இல்லை அவரவர், தன்னறிவின் துணை குருவையும், அவரின் விளக்க உரைகளை, விளக்கங்களை கேட்டு, பார்த்து, படித்து உண்மை ஆராய்ந்து தாங்களேதான் முடிவுக்கு வர வேண்டும். நான் சொன்னேன் என்பதற்காக, வேதாத்திரியத்தை பிடிப்பதும் சரியல்ல!

யோகத்தில் கட்டுப்பாடுகள்

பொதுவாக உலகில் எந்தவகையில் உள்ள யோக அமைப்பில் இணைந்தாலும் சில கட்டுப்பாடுகள் தரப்படுவதுண்டு. முதலாவதாக உடை, ஒழுக்க பழக்கங்கள், உணவு, தங்கும் விடுதி முறைகள், பிறரோடு பழகும் விதம், காலை எழும் நேரம், பயிற்சி கட்டுப்பாடுகள், இரவு படுக்கை நேரம் என இன்னும் பலவாறாக அமையும். இதற்கு ஒப்புகை அளித்தால் உள்ளே இருக்கலாம், இல்லையேல் அந்த அன்பர், தகுதியில் மீறிவிட்டார் என்று வெளியேற்றப்படுவார்.

உணவு மாற்றம்

யோக சாதனையில் இணைபவர்களுக்கு, அக்காலம் முதல் இக்காலம் வரை இருக்கும் பெரிய பயம், நினைத்ததை சாப்பிட முடியாதே என்பதுதான். ஏதோ இந்தக்காலகட்டத்தில் யோக அமைப்புக்கள் உள்ளன. இல்லை என்றால், 

நீ யோகத்தில் சேர்கிறாயா என்று கேட்டால்‘நான் என்ன பிச்சை எடுத்தா சாப்பிட முடியும்?’ என்று பதில் அளிப்பார்கள்.

யோகிகள் எல்லாருமே பிச்சை எடுக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அது அந்தக்கால கம்பிகட்டும் வேலை என்பதாக தெரிகிறது. சரி அந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம். ஆனாலும், யோகத்தில் இணைந்தால், இந்தந்த உணவு தான் உண்ணவேண்டும் என்ற திட்டம் உண்டு. ஏனென்றால் உடலை தேவையில்லாமல், இயல்பு மீறி ஊக்கிவிக்கக் கூடாது. சில தடகள விளையாட்டு வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யபடுவதை அறிவீர்கள் தானே?! 

உடலை அதன் இயல்பு மீறி பலகாலமாக நாம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்பதே உண்மை. அதனால் நமக்கு பிடித்ததே உணவாகிவிட்டது. உடலுக்கு இது ஏற்குமா? வயிறுக்கு இது ஏற்குமா? செரிமானத்திற்கு இது ஏற்குமா? என்ற கேள்விகள் எழுவதே இல்லை. ஏதேனும் சொன்னால் எதிர்கேள்விக்கு குறைவில்லாமல் கேட்பார்கள். ஊக்குவிக்கும் உணவுகூட பரவாயில்லை தான். ஆனால்!

போதை தரும் உணவுகள்

உடலுக்கு, மனதுக்கு, மூளைக்கு போதை தரும் உணவுகள் முற்றிலும் தவிர்க்கபட வேண்டும் இந்த யோக சாதனைக்கு. ஏன் என்றால், நீங்கள் எதை நோக்கி நகர்கிறீர்களோ அது முற்றிலும் நிகழாது. ஒரு பிறழ்ந்த மயக்கத்தில் நீங்கள் சிக்கி விடுவீர்கள். அப்படி போதை தரும் பொருட்கள் என்னென்ன என்று நான் இங்கே குறிப்பிடுவது தேவையில்லை. அது இக்கட்டுரைக்கு முக்கியமும் அல்ல.

அமெரிக்க நாஸா ஆய்வு

ஒரு போதைப்பொருள் என்னென்ன செய்கிறது? எப்படியெல்லாம் இயக்கங்களை பாதிக்கிறது? மனிதனை மட்டுமா? எல்லா உயிரினங்களையுமா? என்று அமெரிக்க அறிவியல் / விண்வெளி நிறுவனமான நாஸா ஆராச்சி செய்ய முயன்றது. அவர்கள் அவ்வராய்சிக்கு எடுத்துகொண்டது, சிலந்தி பூச்சி. சில வகை ஊக்க / போதை உணவுகள் அதற்கு உணவாகக் கொடுத்து. அதனுடைய செயல், நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்களை, அந்த ஊக்க / போதை உணவுகள் விளைவிக்கின்றன என்று ஆராய்ந்தனர். 

அந்த ஆராய்ச்சியின் முடிவு இங்கே!

அந்த ஆராய்ச்சியில், நாம் சிலந்தி பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டோம். ஆனால் அதன் செயல் / நடவடிக்கை எப்படி இருக்கிறது / இருந்தன என்று பார்க்கலாமா? இதோ...


-

இதன் முடிவுகளை நான் தனியாக, கட்டுரையாக தரவேண்டிய அவசியமின்றி, நீங்களே பார்த்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் கேள்விகள் இருக்குமானால், கேளுங்கள் அல்லது அமெரிக்க நாஸாவிடமே கேட்டுவிடுங்களேன்!

-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: image by https://www.sciencenews.org/ and article idea source from: @WallStreetSilv  (twitter) and NASA (USA)