CJ for You: fulfillment

fulfillment

Showing posts with label fulfillment. Show all posts
Showing posts with label fulfillment. Show all posts

Is it good for us, living in this materialistic world, to move towards fulfillment in making money? Is it good to stand in fulfillment? Explain which and why.


வாழ்க வளமுடன் ஐயா, இந்த பொருள்முதல்வாத உலகில் வாழ்கின்ற நாம், பணம் சம்பாதிப்பதில், நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது என்பதும், ஏன் என்பதும் விளக்கம் தருக.

        மனிதர்களாகிய நாம், எப்போதும் குறை என்ற நிலையிலேயே இருப்போம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் கொடு என்று கேட்குமே, அந்தக் குழந்தைபோலவே, நாம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குறையை நிறையாக்க, ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிறை கிடைத்தபாடில்லை. இப்படியாக, குறை என்பது என்ன? நிறை என்பது என்ன? நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது, ஏன் என்பதும் விளக்கம் தெரிந்து கொள்வோமா? .

ஒரு மனிதனுக்கு நிறை என்பது எதன் அடிப்படையில் என்று பிரித்தால், இந்த வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும், ஒரு கடற்கரையில் எத்தனை மணல்துளிகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும் நீண்டுகொண்டே இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் இருப்பதாக சமீபத்திய, மக்கள் தொகை கணக்கு சொல்லப்படுகிறது. இந்த நூற்றி நாற்பது கோடி மக்களுக்கும், பல நூறு குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள், பயணித்துக்கொண்டே இருப்பார்கள். எதுவரை? அதை பிறகு பார்க்கலாம்.

எனவே எதுவெல்லாம் நிறை? என்று பட்டியலிட்டால், இந்த கட்டுரையையும், உங்களுக்கான  பதிலையும் இன்றைக்கு தரமுடியாது. என்றைக்கு தருவேன் என்று என்னாலும் உறுதிபட சொல்லமுடியாது. ஆனால் நிறை என்பது என்ன? குறை என்பது என்ன? என்ற விளக்கம் ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு முக்கியமான விசயத்தையும், இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழில், ஒரு சிந்தனையும், தத்துவ உண்மையையும் ஒருவர் தந்தால், அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவரெல்லாம் இப்படி சொல்லுமளவுக்கு பெரிய ஆளா? என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்தியா கடந்த, மற்ற மொழியில், யாரேனும் ஒற்றைவரியை சொன்னால், ஆகா, ஓஹோ என்பார்கள். எல்லோருக்கும் பகிர்வார்கள்.

இந்தியா நாடும், நம் தமிழகமும் ஆயிரக்கணக்கான, மெய்யான உண்மைகளை பொதிந்து வைத்திருக்கிறது. அந்த சிந்தனையாளர்களும், சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் சொன்னதை படிக்கவும், பொருள் உண்மை அறியவும், தனிமனிடனுடைய வாழ்நாள் போதாது. ஆனால் நாம்தான் அதையெல்லாம், தொட்டுப்பார்ப்பதும் இல்லை, கண்ணால் பார்ப்பதும் இல்லை. கிட்டப்பார்வை குறையுள்ளவருக்கு, அருகில் இருப்பது தெரியாது என்பதுபோல, நாம் தூரப்பார்வைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிறை என்றால் என்ன? குறை என்றால் என்ன? இந்த இரண்டுக்குமே பொதுவான விடை எங்கே இருக்கிறது தெரியுமா? ஒவ்வொருவருடைய மனதில் இருக்கிறது. ஆங்கிலத்தில், முன்னோர் சொன்னதை, வழிமொழிந்து மட்டுமே நகர்வார்கள். சொந்த அறிவுக்கும், சிந்தனைக்கும் அங்கே இடமில்லை. அதை தமிழில், அதே போல, ‘இன்னொருவனின் முன்னெடுப்பில்’ சொன்னால், ‘நீ ஏன் அவர் புகழ்பாடுகிறாய்?’ அவரை வைத்து பிழைக்கிறாயா?’ என்று கேட்பார்கள். ‘சொந்த புத்தி இல்லையா?’ என்று கூடுதலாகவும் கேள்வி கேட்பார்கள். சரி, சொந்த புத்தியில் சொல்ல ஆரம்பித்தால், சொல்லுபவரின், சொல்லையும், கருத்தையும் விட்டுவிட்டு, சொல்லுபவரை, ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் நம் மக்களின் நடைமுறை வழக்கமும், பழக்கமும். இதனாலேயே, விளக்கமான கட்டுரை எழுதவே தயக்கமாகவும் இருக்கிறது. ஆனால், எனக்குப்பின் இச்சமூகத்திற்கு தரக்கூடிய பதிவுகள் தேவை என்பதால், ஒவ்வொருவரும், தங்கள் அனுபவத்தை, விளக்கத்தை, உண்மையை, பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான், நாம் பல சங்ககால கல்வெட்டு எழுத்துக்களையும், ஓலைச்சுவடிகளையும் பெற்றோம்.

தமிழகத்தின் வாழ்வியல் சொல்லும், சங்க கால படைப்புக்கள், தன் அனுபவத்தின்படியே வந்தவை. இவர் இப்படிச் சொன்னார் என்று எவருமே தொகுப்பாக தந்ததில்லை. அதுபோலவே, என்னுடைய எழுத்துகளும் அமைகின்றன. என்றாலும் தேவைப்படும்பொழுது, முன்மொழிவு, வேதாத்திரியம் தான். 

இந்த நிறை, குறை கேள்விக்கு, கூடுதல் உண்மையை, வேதாத்திரி மகரிஷி இப்படிச் சொல்லுகிறார். ‘மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.’

இந்த நிலையில், நிறையும், குறையும் எங்கே? எதனிடத்தில்? எப்படி? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த நிறையும், குறையும் எங்கே சம நிலை அடைகிறது? எங்கே மறைகிறது? முழுமை அடைகிறது? என்ற கேள்வியை முன்வைத்தால், அது ‘மெய்ப்பொருள் உண்மையை அறியும்பொழுது’ என்பதுதான் பதிலாகும்.

ஆனால், வாழ்கின்ற, இந்த பொருள்முதல்வாத உலகில், குறைதான் இருக்கும் என்பது உறுதி, அதுவரை, நிறைவை நோக்கி நகர்கின்ற வாழ்க்கைதான் சரியானது. நிறைவில் நின்றால், மற்றொரு குறையில் சிக்கி இருப்பதை உணர்வீர்கள். ஆனால், எது நிறை? என்ற கேள்வியோடு நகருங்கள். அனுபவம், காலம், அதைத்தரும் இயற்கை ஆகிய மூன்றும், உங்களை வழிநடத்தும்.

வாழ்க வளமுடன்

-

Why can't I achieve economic fulfillment? Let me know the any solutions!


தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


பதில்: 

இப்போதைய வாழ்க்கைச் சூழலில், நம் எல்லோருக்குமே எழக்கூடிய கேள்வி என்பதில் ஐயமில்லை. வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு,  வாழ்த்திக்கொண்டும் வருகிறேன் என்பது சிறப்பு. சிலர், அதனால் இப்படி ஆகிற்று என்று வெட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு, சரியாக விளங்கிக்கொள்ளாமை ஆகும். எல்லாவற்றை விட்டுவிடு, அப்போதுதான் யோகம் சிறக்கும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்களாகவே தவறான முடிவில் இருந்திருக்கலாம்தானே? வேதாத்திரியம், இல்லறத்திலேயே நல்லறம் என்பதைத்தான் வழியுறுத்துகிறது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். அதற்கு உதாரணம் யார்? என்றால், நம்முடைய குரு மகான் வேதாத்திரி மகரிஷியே ஆகும். அவரும் நம்மைப்போலவே வாழ்ந்து, தன் வாழ்வின் நிறைவில், நமக்கெல்லாம் யோகத்தை பரப்பிட, வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். ‘தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை’ என்று தனிநபர், சுயதொழில், சார்பு தொழில், வியாபாரம் செய்பவர்தான் இப்படியான நிலையில் இருப்பார். நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம். அரசு வேலைகள், தனியார் தொழில், வியாபார, வேலை நிறுவனம் என்றால், இந்த கேள்வியும், குழப்பமும் தேவை இருக்காது என்பது பொதுவான கருத்து. எனினும், அவர்களுக்கும் கூட, சூழ்நிலை காரணமாக, பொருளாதார நிறைவு கிடைப்பதில்லை.

இதற்கு என்னவழி? இங்கே ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என விரும்புகிறேன். 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...

மனிதராக இந்த உலகில் பிறப்பது கடின வாய்ப்பானது என்று ஆரம்பித்து, உடல்குறையின்றி, கண்பார்வை பாதிப்பாகவும், செவி குறைபாடு கொண்டும் பிறக்காமல் இருப்பதும் கடினம். இதையும் நீங்கி பிறந்துவிட்டாலும் கூட, ஞானமும் கல்வியும் தகுந்த காலத்தில் கிடைப்பதும், அதை கற்றுத்தேர்வதும் கடினம் என்று ஔவையார் தொடர்கிறார்.

இப்படி, உங்களுக்கு தகுந்த காலத்தில், இந்த உலகில் கல்வி நிச்சயமாக கிடைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உலகம் முழுவதுமே, கல்வியை தொழில்சார்ந்து அமைத்துக்கொண்டு விட்டது. அந்தக்காலம் போல, பிறவித்திறமை, அடிப்படைத்திறமை என்பதற்கெல்லாம், வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மை கல்வியில் நிறைவு செய்துகொள்வது அவசியம். ஐயா, எனக்கு அப்படியான கல்வி இல்லையே? என்றால், மக்களின் தேவையறிந்து சேவையோ, வேலையோ, தொழிலோ, வியாபாரமோ செய்து பொருளாதார நிலையை பெறலாம். இது அன்றாட பிழைப்பைச் சார்ந்த நிலையாக இருக்கும். நீங்கள் இன்று உழைத்தால், அது உங்களுக்கான வருமானம் தரும் என்பது உறுதி. ஆனால் நிறுவனம் சார்ந்த வேலை என்றால், அந்த கவலை இன்றி, மாதம் முழுவதும் உழைத்தால், சம்பளம் உறுதியானது. இந்த வித்தியாசம் உணர்ந்து கொள்க.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பிறரை எதிர்பார்த்தல், தான் செய்யவேண்டிய கடமையை செய்யாதிருத்தல், அதை உணர்ந்தும் கூட செய்யாதிருத்தல்’ ஆகிய மூன்றுமே, வாழ்வில் துன்பம் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார். மேலும் போட்டி மிகுந்த இவ்வுலகில், தனிமனித பொருளாதார நிறைவு உடனடியாக கிடைக்க வழியேதும் இல்லை. உங்களால் முடிந்த அளவில், தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, மக்களின் தேவை அறிந்து, சேவையாகவும், உதவியாகவும் இருக்கக்கூடிய தொழில், வேலை, வியாபாரம் என்பது முக்கியம். அப்போதுதான் அம்மக்கள் உங்களுக்கும் உதவி, உங்களின் உழைப்புக்கும் மதிப்புத்தந்து, உங்களை பொருளாதாரத்தில் உயர்த்திட துணை நிற்பார்கள்.

வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு வாழ்த்துவது பலனளிக்கிறதா? என்றும் சிலர் நினைப்பார்கள். ஆம் நிச்சயமாக பலன் தருகிறது. உங்களைச் சூழ்ந்து இருக்கும் தேவையற்ற குழப்பம், கவலை, துன்பம் இவற்றை நீக்கி, இன்னமும் உற்சாகமாக செயல்பட உங்களுக்கு உதவுகிறது. உங்களைச் சூழ்ந்து நல்ல அலைகள் இருக்கச் செய்கிறது. அதன் வழியாக மக்களின் நட்பை பெற வழி கிடைக்கிறது. உங்களின் உயர்வுக்கு துணையாகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தே போதுமானது. மேலும் உங்களுக்கு வாய்ப்பிருந்தால், சர்வ வஸ்ய தனாஆகர்ஷண சங்கபம் வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்று பூஜையாக செய்து வரலாம் என்பது என்னுடைய பரிந்துரையாகும். இதற்கான இணைப்பையும் இங்கே தருகிறேன்.

https://www.youtube.com/watch?v=kEe1HiHyjsg&list=PLQQJZk6S322n6isludZDiMAAWLiErCYAl&pp=iAQB

வாழ்க வளமுடன்.

-

Why there is scarcity always and no fulfillment in our earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், பற்றாக்குறையாகவே, நிறைவே இல்லாமலேயே இருக்கிறதே ஏன்?


பதில்:

நம்முடைய பாரம்பரியமான இந்தியநாட்டில் இதற்கு நீண்டகாலமாலவே பதில் இருக்கிறது. இந்தியாவை இந்த உலக நாடுகள் ஆன்மீக நாடாகவும், ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் நினைக்கின்றன. ஓவ்வொருவரும், இந்தியா வந்தால், ஏதேனும் ஒரு உண்மையான ஞானி, மகான், சாது, யோகி  தங்களுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் நாம்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை உதாசீனம் செய்து வந்திருக்கிறோம். இன்றும் உதாசீனம் செய்துவருகிறோம். அது என்ன பதில்?

உலகில் பிறந்த மனிதரின் நோக்கம், பொய்யான, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், தன்னுடைய உண்மையை தேடுவது ஆகும். ஆனால் இதைச்சொன்னால் ‘இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இது ஏமாற்று வேலை’ என்று முடிவுகட்டிட ஒரு தலைவர் வருவார். அவரின் அரைகுறையான சொல்லைக்கேட்டு பின்னால் செல்ல பெரும்மக்களும் தயாராவார்கள். இது ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருமே உண்மை எது? என்று ஆராய்ந்து பார்க்க தயாரில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமூகவாழ்வில், ஒருவர் தவறு செய்தால், அந்த சமூகமே குற்றவாளி என்று மொத்தமாக முடிவு கட்டிடத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆன்மீகத்தில் இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு மொத்தமான் ஆன்மீகமே பொய் என்றால் எப்படி?!

ஏன் ஆன்மீகத்தில் ஏமாற்றுபேர்வழிகள் உருவாகின்றனர்?! உலக வாழ்வில் தன்னையும் இயற்கையையும் உணர்ந்தவரையும், மெய்ப்பொருள் உண்மையை அறிந்தவரையும் நாம் ஞானி, மகான் என்று அழைக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். கைகூப்பி வணங்கிடவும் செய்கிறோம் அல்லவே? இதைப்பார்க்கிற ஒரு ‘திருடனுக்கும்’ நாமும் இப்படி ஆகிவிடலாமே, மக்கள் என்னையும் வணங்கி, பொன்னும் பொருளும் தந்து காப்பார்களே! என்று நினைத்து ஒரு ஞானி, மகான் போல வேடம் தரித்துக் கொள்கிறான். இந்தமாதிரியான கபட வேடதாரிகள் தான் ஆன்மீகத்தை கெடுக்கிறார்கள். இவர்களால்தான் உண்மை சிதைகிறது!

உங்கள் வாழ்வில் பற்றாக்குறை இருப்பதும், நிறைவே இல்லாத மன நிலையும் இருக்கிறது என்றால், உங்களுடைய மனதின் தேடல் அது அல்ல! நீங்கள் தேடி அடைவதை அது விரும்புவதும் இல்லை. மனம் அதனுடைய இயல்பில், தன்னுடைய மூலத்தை அடைய விரும்புகிறது. ஆனால் அந்த மனதிற்கு உங்களிடம் கேட்கத்தெரியவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், இதுவா, அதுவா, என்று மனதை திருப்திப்படுத்த எல்லாவற்றையும் பெற முயற்சிக்கிறீர்கள். போராடுகிறீர்கள். மனமும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்தபிறகு மனம் ‘நான் கேட்டது இது இல்லையே?!’ என்று சொல்லிவிடுகிறது. இதுதான் தினமும் உங்களுக்கு நிழந்துகொண்டே இருக்கிறது. அப்படியானால் இதற்கு ஒரு தீர்வு என்ன? ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள். ‘உண்மையாக இந்த மனம் விரும்புவது என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கு விடை கண்டுபிடியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-