Why there is scarcity always and no fulfillment in our earth life?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், பற்றாக்குறையாகவே, நிறைவே இல்லாமலேயே இருக்கிறதே ஏன்?
பதில்:
நம்முடைய பாரம்பரியமான இந்தியநாட்டில் இதற்கு நீண்டகாலமாலவே பதில் இருக்கிறது. இந்தியாவை இந்த உலக நாடுகள் ஆன்மீக நாடாகவும், ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் நினைக்கின்றன. ஓவ்வொருவரும், இந்தியா வந்தால், ஏதேனும் ஒரு உண்மையான ஞானி, மகான், சாது, யோகி தங்களுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் நாம்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை உதாசீனம் செய்து வந்திருக்கிறோம். இன்றும் உதாசீனம் செய்துவருகிறோம். அது என்ன பதில்?
உலகில் பிறந்த மனிதரின் நோக்கம், பொய்யான, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், தன்னுடைய உண்மையை தேடுவது ஆகும். ஆனால் இதைச்சொன்னால் ‘இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இது ஏமாற்று வேலை’ என்று முடிவுகட்டிட ஒரு தலைவர் வருவார். அவரின் அரைகுறையான சொல்லைக்கேட்டு பின்னால் செல்ல பெரும்மக்களும் தயாராவார்கள். இது ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருமே உண்மை எது? என்று ஆராய்ந்து பார்க்க தயாரில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமூகவாழ்வில், ஒருவர் தவறு செய்தால், அந்த சமூகமே குற்றவாளி என்று மொத்தமாக முடிவு கட்டிடத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆன்மீகத்தில் இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு மொத்தமான் ஆன்மீகமே பொய் என்றால் எப்படி?!
ஏன் ஆன்மீகத்தில் ஏமாற்றுபேர்வழிகள் உருவாகின்றனர்?! உலக வாழ்வில் தன்னையும் இயற்கையையும் உணர்ந்தவரையும், மெய்ப்பொருள் உண்மையை அறிந்தவரையும் நாம் ஞானி, மகான் என்று அழைக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். கைகூப்பி வணங்கிடவும் செய்கிறோம் அல்லவே? இதைப்பார்க்கிற ஒரு ‘திருடனுக்கும்’ நாமும் இப்படி ஆகிவிடலாமே, மக்கள் என்னையும் வணங்கி, பொன்னும் பொருளும் தந்து காப்பார்களே! என்று நினைத்து ஒரு ஞானி, மகான் போல வேடம் தரித்துக் கொள்கிறான். இந்தமாதிரியான கபட வேடதாரிகள் தான் ஆன்மீகத்தை கெடுக்கிறார்கள். இவர்களால்தான் உண்மை சிதைகிறது!
உங்கள் வாழ்வில் பற்றாக்குறை இருப்பதும், நிறைவே இல்லாத மன நிலையும் இருக்கிறது என்றால், உங்களுடைய மனதின் தேடல் அது அல்ல! நீங்கள் தேடி அடைவதை அது விரும்புவதும் இல்லை. மனம் அதனுடைய இயல்பில், தன்னுடைய மூலத்தை அடைய விரும்புகிறது. ஆனால் அந்த மனதிற்கு உங்களிடம் கேட்கத்தெரியவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், இதுவா, அதுவா, என்று மனதை திருப்திப்படுத்த எல்லாவற்றையும் பெற முயற்சிக்கிறீர்கள். போராடுகிறீர்கள். மனமும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்தபிறகு மனம் ‘நான் கேட்டது இது இல்லையே?!’ என்று சொல்லிவிடுகிறது. இதுதான் தினமும் உங்களுக்கு நிழந்துகொண்டே இருக்கிறது. அப்படியானால் இதற்கு ஒரு தீர்வு என்ன? ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள். ‘உண்மையாக இந்த மனம் விரும்புவது என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கு விடை கண்டுபிடியுங்கள்.
வாழ்க வளமுடன்.
-