CJ for You: wages

wages

Showing posts with label wages. Show all posts
Showing posts with label wages. Show all posts

Why can't I achieve economic fulfillment? Let me know the any solutions!


தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


பதில்: 

இப்போதைய வாழ்க்கைச் சூழலில், நம் எல்லோருக்குமே எழக்கூடிய கேள்வி என்பதில் ஐயமில்லை. வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு,  வாழ்த்திக்கொண்டும் வருகிறேன் என்பது சிறப்பு. சிலர், அதனால் இப்படி ஆகிற்று என்று வெட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு, சரியாக விளங்கிக்கொள்ளாமை ஆகும். எல்லாவற்றை விட்டுவிடு, அப்போதுதான் யோகம் சிறக்கும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்களாகவே தவறான முடிவில் இருந்திருக்கலாம்தானே? வேதாத்திரியம், இல்லறத்திலேயே நல்லறம் என்பதைத்தான் வழியுறுத்துகிறது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். அதற்கு உதாரணம் யார்? என்றால், நம்முடைய குரு மகான் வேதாத்திரி மகரிஷியே ஆகும். அவரும் நம்மைப்போலவே வாழ்ந்து, தன் வாழ்வின் நிறைவில், நமக்கெல்லாம் யோகத்தை பரப்பிட, வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். ‘தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை’ என்று தனிநபர், சுயதொழில், சார்பு தொழில், வியாபாரம் செய்பவர்தான் இப்படியான நிலையில் இருப்பார். நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம். அரசு வேலைகள், தனியார் தொழில், வியாபார, வேலை நிறுவனம் என்றால், இந்த கேள்வியும், குழப்பமும் தேவை இருக்காது என்பது பொதுவான கருத்து. எனினும், அவர்களுக்கும் கூட, சூழ்நிலை காரணமாக, பொருளாதார நிறைவு கிடைப்பதில்லை.

இதற்கு என்னவழி? இங்கே ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என விரும்புகிறேன். 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...

மனிதராக இந்த உலகில் பிறப்பது கடின வாய்ப்பானது என்று ஆரம்பித்து, உடல்குறையின்றி, கண்பார்வை பாதிப்பாகவும், செவி குறைபாடு கொண்டும் பிறக்காமல் இருப்பதும் கடினம். இதையும் நீங்கி பிறந்துவிட்டாலும் கூட, ஞானமும் கல்வியும் தகுந்த காலத்தில் கிடைப்பதும், அதை கற்றுத்தேர்வதும் கடினம் என்று ஔவையார் தொடர்கிறார்.

இப்படி, உங்களுக்கு தகுந்த காலத்தில், இந்த உலகில் கல்வி நிச்சயமாக கிடைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உலகம் முழுவதுமே, கல்வியை தொழில்சார்ந்து அமைத்துக்கொண்டு விட்டது. அந்தக்காலம் போல, பிறவித்திறமை, அடிப்படைத்திறமை என்பதற்கெல்லாம், வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மை கல்வியில் நிறைவு செய்துகொள்வது அவசியம். ஐயா, எனக்கு அப்படியான கல்வி இல்லையே? என்றால், மக்களின் தேவையறிந்து சேவையோ, வேலையோ, தொழிலோ, வியாபாரமோ செய்து பொருளாதார நிலையை பெறலாம். இது அன்றாட பிழைப்பைச் சார்ந்த நிலையாக இருக்கும். நீங்கள் இன்று உழைத்தால், அது உங்களுக்கான வருமானம் தரும் என்பது உறுதி. ஆனால் நிறுவனம் சார்ந்த வேலை என்றால், அந்த கவலை இன்றி, மாதம் முழுவதும் உழைத்தால், சம்பளம் உறுதியானது. இந்த வித்தியாசம் உணர்ந்து கொள்க.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பிறரை எதிர்பார்த்தல், தான் செய்யவேண்டிய கடமையை செய்யாதிருத்தல், அதை உணர்ந்தும் கூட செய்யாதிருத்தல்’ ஆகிய மூன்றுமே, வாழ்வில் துன்பம் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார். மேலும் போட்டி மிகுந்த இவ்வுலகில், தனிமனித பொருளாதார நிறைவு உடனடியாக கிடைக்க வழியேதும் இல்லை. உங்களால் முடிந்த அளவில், தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, மக்களின் தேவை அறிந்து, சேவையாகவும், உதவியாகவும் இருக்கக்கூடிய தொழில், வேலை, வியாபாரம் என்பது முக்கியம். அப்போதுதான் அம்மக்கள் உங்களுக்கும் உதவி, உங்களின் உழைப்புக்கும் மதிப்புத்தந்து, உங்களை பொருளாதாரத்தில் உயர்த்திட துணை நிற்பார்கள்.

வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு வாழ்த்துவது பலனளிக்கிறதா? என்றும் சிலர் நினைப்பார்கள். ஆம் நிச்சயமாக பலன் தருகிறது. உங்களைச் சூழ்ந்து இருக்கும் தேவையற்ற குழப்பம், கவலை, துன்பம் இவற்றை நீக்கி, இன்னமும் உற்சாகமாக செயல்பட உங்களுக்கு உதவுகிறது. உங்களைச் சூழ்ந்து நல்ல அலைகள் இருக்கச் செய்கிறது. அதன் வழியாக மக்களின் நட்பை பெற வழி கிடைக்கிறது. உங்களின் உயர்வுக்கு துணையாகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தே போதுமானது. மேலும் உங்களுக்கு வாய்ப்பிருந்தால், சர்வ வஸ்ய தனாஆகர்ஷண சங்கபம் வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்று பூஜையாக செய்து வரலாம் என்பது என்னுடைய பரிந்துரையாகும். இதற்கான இணைப்பையும் இங்கே தருகிறேன்.

https://www.youtube.com/watch?v=kEe1HiHyjsg&list=PLQQJZk6S322n6isludZDiMAAWLiErCYAl&pp=iAQB

வாழ்க வளமுடன்.

-

Can you explain how we get wealth through yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு பணமும் பொருளும் எப்போது கிடைக்கும் என்பதை யோகத்தில் அறிந்துகொள்ள முடியுமா?


பதில்: 

உங்களுக்கு பணமும் பொருளும் மட்டுமல்ல, எல்லா செல்வ வளங்களும் கிடைக்கவேண்டும் என்பதுதானே உண்மை. இந்த பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும்,  இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையானது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. எப்போது கிடைக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டுமல்ல. நிறைவாக தொடர்ந்து கிடைப்பதையும் நாம் யோகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இது ஒன்றும் மாயாஜால வித்தை என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக நடக்கக்கூடியதுதான். அதை எப்படி என்று பார்க்கலாமா?!

இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! அதெப்படி யோகத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும்? என்று ஒரு கேள்வியை நீங்கள் இப்பொழுது முன்வைத்தால், யோகத்தின் வழியாக கிடைக்காது என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதாவது இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் இங்கே என்னிடம் கேட்ட கேள்வியே தப்பாகவும் மாறிவிடுகிறது அல்லவா?!

ஆனால், யோகத்தில் அறிந்துகொள்ள முடியும், பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும் கிடைக்க, அதற்கு துணையாக யோகமும் உதவி செய்யும் என்பது உண்மையே! அது குறித்த விளக்கத்தை, இங்கே ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் காணலாம்!

-

அதற்கான இணைப்புச்சுட்டி இதோ: பிரபஞ்ச இயற்கை ஆற்றல் உங்களுக்கு பணம் பொருள் செல்வவளம் தருமா?

-

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.