CJ for You: life partner

life partner

Showing posts with label life partner. Show all posts
Showing posts with label life partner. Show all posts

I don't know why my spouse is at odds with me. Every day there is a problem. There is no peace between us. How will this be solved? Can a third person come and solve it?


வாழ்க வளமுடன் ஐயா. என்னுடைய வாழ்க்கைத்துணை ஏன் என்னோடு முரண்பாடு கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தினமுமே ஒரு பிரச்சனை உண்டாகிறது. எங்கள் இருவருக்குள்ளும் சமாதானம் கிடைப்பதே இல்லை. இது எப்படி தீரும்? மூன்றாம் மனிதர் வந்துதான் தீர்த்துவைக்க முடியுமா? விளக்கம் தருக.


இல்லறம் என்பது நீண்ட கால தொடராக வரும் நிகழ்வு. ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற வகையில் வாழ்க்கைத்துணை அமைவதும் இயற்கையின் உன்னதம். யாருக்கு யார் என்பதும் ரகசியமாகவும் இருக்கிறது. நாமே விரும்பி காதல் கொண்டு, திருமணம் நிகழ்த்தி, இல்லற வாழ்வை தொடங்கினாலும்கூட, அதில் இயற்கையின் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லறமே சமூகத்தின் வளர்ச்சி நிலை என்று இருந்தாலும், சிலருக்கு திருமணம் தள்ளிப்போவதும் உண்டு, நிகழாமல் போய்விடுவதும் உண்டு. இதற்கும், நாம் அறியாத காரணம், நம்மோடு தொக்கி நிற்கிறது.

இல்லறம் என்பதின் நோக்கம், ஒருவரை ஒருவர் காத்துக்கொண்டு, அதன் வழியாக வாரீசுகளை உருவாக்கி, நிறைவாக வாழ்தல் ஆகும். இதில் வாழ்க்கைத்துணை என்பவர், நமக்கு சமமாக எப்போதும் அமைவதே இல்லை. நம்மைவிட உயர்வான, குறைந்த அறிவு, அனுபவ நிலை இதோடு கர்மா என்ற வினைப்பதிவு தாக்கமும், அதற்கான தீர்வும் என்றுதான் அமைவதுண்டு. ஒருவகையில் என்னிடம் இருக்கும் குறைகளை அவர் நிவர்த்தி செய்வார், அவரிடம் இருக்கும் குறைகளை நான் நிவர்த்தி செய்வேன் என்ற வகையில்தான், வாழ்க்கத்துணை அமைகின்றார். வெளிப்படையாக நமக்கு இது தெரியாவிட்டாலும்கூட, உள்ளாக இந்த ஏற்பாடுதான் இயற்கையால் அமைக்கப்படுகிறது.

இந்த ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு, பகிர்வு, சமன் செய்தல் என்பதை அறியாமல், என்னை திருத்துகிறாயா? என்று நாம் கேட்பதும். நீ சொல்லித்தான் நான் திருந்தவேண்டுமா? என்று முரண்படுவதும் அவசியமில்லை. கணவன் மனைவிக்குமான இல்லறத்தில் இன்பம் நிலைத்திருக்க, வேதாத்திரி மகரிஷி தரும் மூன்று முக்கியமான வழிமுறை 1) பொறுமை 2) விட்டுக்கொடுத்தல் 3) தியாகம் என்பவனவாகும். நான் இதையெல்லாம் செய்யமாட்டேன் என்று, கணவன் மனைவி இருவரும் முடிவெடுத்தால்? இல்லறம் எப்படி சிறக்கும்?

இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல, அமைதியாக உட்கார்ந்து, ஏன் இப்படி நாம் சண்டை போடுகிறோம்? கடினமாக பேசிக்கொள்கிறோம் என்றும் விளக்கமாக கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், யார் இதை முதலில் ஆரம்பிப்பது என்றுதான் நாம் தள்ளிவைத்து, சண்டையை தொடர்கின்றோம் அல்லவா? நமக்குள்ளாக இருக்கும் பிரச்சனையை, எளிதில் நாமாகவே தீர்த்துக் கொள்ளமுடியும். மூன்றாம் மனிதர் தேவையில்லை. தேவையில்லாமல், அவருடைய பிரச்சனைவேறு உங்களோடு கலந்து, இன்னும் அதிகமாகலாம். உலக நாடுகளே சமாதானம் நோக்கி நகர்கையில், இரு நபர்கள், இல்லறத்தில் சமாதான தீர்வு காணமுடியாதா? நிச்சயமாக முடியும்.

இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரும்.

உங்களுக்கு வாழ்க்கைத்துணைவரை அமைப்பதில் பெரும்பங்கு யாருக்கு உண்டு?

வாழ்க வளமுடன்.

-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.