Living on the earth where money is God, do we need to go through yoga and suffer?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பணம் தான் கடவுள் என்ற சூழலில் வாழும் நமக்கு யோகத்தின் வழியாக செல்வதும், கஷ்டப்படுவதும் தேவையா?!
பதில்:
யோகம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாத கேள்வி இது என்று சொல்லலாம். தவறில்லை. ஆனால் இனியாவது உண்மையை புரிந்துகொள்ளுங்கள். உங்களைப் போலவே நிறைய அன்பர்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது உங்களை, யோகத்திற்கு வாருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்களா? என்று தெரியவில்லை. அப்படி அழைத்தாலும் உடனே ஒருவர் யோகத்திற்கு வந்துவிடுவதும் இல்லைதானே?!
இப்போதைய வாழும் சூழலில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு யோகத்திற்கு வந்துவிடவேண்டும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள் என்று தெரியவில்லையே?! அது யாராக இருக்கும்?
வாழும் உலகில், பணம், பொருள், செல்வம் நிச்சயமாக தேவை. அது தனிமனிதனாக இருந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், அவர் /அவர்களுடைய வாழும் காலம் முழுவதும் தேவைதான். அதில் ஒரு நிறைவு வருகின்றவரை, பொருளீட்டி சம்பாதித்துத்தான் ஆகவேண்டும். யாரும் உங்களுக்கு தானாக (தானமாகவும்) தரமாட்டார்கள், யாரை நம்பியும் அவர்கள் இந்த உலகில் வாழவும் முடியாது. அப்படியான சூழலில் ஏன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யோகத்தில் இணையவேண்டியது என்று நினைக்கிறீர்கள்?. அப்படி, சம்பாத்தியம், வேலை, வியாபாரம், தொழில், குடும்பம், இன்பம், மகிழ்ச்சி, விருப்பம் இப்படி எல்லாவற்றையும் இழந்துதான் யோகத்திற்கு வரவேண்டும் என்று ஏன் / எதற்காக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லையே?! நீங்களாக அப்படி புரிந்துகொண்டீர்களா? வேறு யாரும் அப்படியான அறிவுரை சொல்லி வழி காட்டினார்களா?!
தற்போதைய உலக வாழ்க்கையில் பணம் மிக அவசியமே, ஆனால் அதற்காக அதை கடவுள் என்ற உயர்ந்த மரியாதையை தராதீர்கள். அது தவறு. பணம் குறித்த புரிதலில் நீங்கள் இல்லை என்று நிச்சயமாக சொல்லலாம். ஆனாலும் உலகமக்களில் பெரும்பாலோர் இப்படி பணம் குறித்த மயக்கத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அடுத்தாக யோகத்திற்கு வந்தால் கஷ்டப்பட என்ன இருக்கிறது? யார் அப்படி கஷ்டப்பட்டார்கள்? வீட்டை துறந்து, பெற்றோரை விலக்கி, வாழ்க்கைத்துணையை, குழந்தைகளை, நண்பர்களை, உற்றாரை எல்லாம் விட்டுவிலகி, இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும் விட்டு காட்டுக்கு போய், துறவறம் பூண்டு, ஆடை இழந்து, ஏதெனும் குகையில், மரத்தடியில், ஜடாமுடி, தாடியோடு, பசிமறந்து இன்றைய காலத்தில் யார் அப்படியான யோகத்தில் இருக்கிறார்கள்? உங்களை அப்படி யாரும் போய்விடச் சொன்னார்களா?
உண்மையாக நீங்கள், பணம் மற்றும் யோகம் இந்த இரண்டுக்குமான உண்மையை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் தெரிகிறது. அதை உங்கள் ஆசிரியரிடம் கலந்து பேசி விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். அதுதான் மிகச்சிறந்த வழியாகும்!
குறிப்பு: இப்படியான பதிலை படித்துவிட்டு, மாற்றத்தை விரும்பிடாத ‘பழமைவாதிகள்' சிலர், அப்படியானால் பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்து என்பதுபோல இவர் பதில் சொல்லுகிறாரே, இவரெல்லாம் யோகியா? என்று கேட்பார்கள். இந்த பழமைவாதிகள்தான் உங்களையும் குழப்பியிருப்பார்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற அந்த ‘பழமைவாதிகளை’ விட்டு விலகுங்கள்!
வாழ்க வளமுடன்.
-