Nothing miracle not happen by joining and way of yoga, then way?
யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?
பதில்:
இந்த கேள்விக்கு எதிர்வினையாக, நான் புன்முறுவல் செய்கிறேன். உங்கள் கேள்வியை, அதனுள் இருக்கும் ஏக்கத்தை வரவேற்கிறேன். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதையும், அதனால் எழுந்த ஏமாற்றமும் கலந்திருப்பதை அறிகிறேன்.
உங்கள் கேள்வியின் வழியாக, நீங்கள் மிகப்பெரும் உண்மையை, பிரமாண்டத்தை, ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை, மாயாஜாலத்தை அறியாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் பயணிக்கிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் பயணம் எத்தகையது என்று உங்களுக்கே புரியாமலும் இருக்கிறீர்கள். நேரிலே நாம் பார்த்துக் கொள்ளாததால் அந்த நிலையை என்னாலும் சொல்ல முடியவில்லை, எனினும் யூகிக்க முடியும்.
சரி, இப்போது உங்கள் அளவிற்கு நானும் இறங்கி நிற்கிறேன். உங்களுக்கு என்ன அதிசயம் நடக்கவேண்டும்?
நினைத்த உடனே அந்தப்பொருள் உங்கள் கைகளில் தோன்றவேண்டுமா? ஒரு மலர் வேண்டுமென்றால், மலர் வேண்டும். பணம் வேண்டும் என்றால் பணம் வேண்டும். யாராவது வந்து உங்கள் கைகளில் திணித்துவிட்டு,
‘இதை உங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், திருப்பித் தரவேண்டாம்’ என்று சொல்லவேண்டுமா?
‘உங்களைப்போல ஒரு நல்ல மனிதர், உயர்ந்த மனிதர், என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’ என்று யாராவது பாராட்ட வேண்டுமா?
’உங்களை என் வாழ்க்கத்துணைவராக பெற்றது என் பாக்கியம்’ என்று வாழ்க்கைத்துணைவர் போற்றி வணங்க வேண்டுமா?
‘அப்பா, என் வாழ்வில் நீங்கள் பெரும் அதிசயம், உறுதுணை, நன்றி’ என்று பிள்ளைகள் பாராட்ட வேண்டுமா?
எனக்கு இருக்கும் நோய், துன்பம், பிரச்சனை உடனே தீரவேண்டும், அதுபோல மற்றவர்களின் நோய், துன்பம், பிரச்சனை என் மூலமாக தீர வேண்டும், அதன் வழியே உலகப்புகழ் பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
ஊரும், உலகமும் உங்களுக்கு மட்டுமே உதவவேண்டும், போற்றவேண்டும், மரியாதை செலுத்தவேண்டும், வணங்கவும் வேண்டும் என்கிறீர்களா?
கோடிக்கணக்கான சொத்தும், எண்ணற்ற வைரம், தங்க கட்டிகளும், ஆபரணங்களும், நிலமும், வீடும், தோட்டமும், காரும், ஹெலிகாப்டரும், விமானமும், தனித்தீவும் வேண்டும் என்கிறீர்களா? இல்லை இந்த பூமி போல வேறேதும் உங்களுக்கென்று வேண்டுமா?
இப்படி எல்லாம் நடக்கவேண்டும், அதற்கு இந்த இறையாற்றல் உதவவேண்டும், அதற்காகவே நான் யோகத்தில் இணைந்துகொண்டேன். வேறெதும் எனக்கு தேவையில்லை என்று எதிர்பார்ப்போடுதான் நீங்கள் இங்கே, இந்த உலகில், இந்தப்பிறவியில் வாழ்கிறீர்களா?
போதுமா?
இப்போது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள், பதில் தெரியவில்லை என்றால் சிந்தித்து பதிலை திரட்டுங்கள். கேட்கலாமா?
இந்த உலகில் எப்படி பிறந்தீர்கள்?
அதில் உங்கள் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும், விருப்பமும் என்ன?
வேறு எதற்காக பிறந்தீர்கள்?
பிறப்பதற்கு முன்னால் எங்கிருந்தீர்கள்?
பிறந்தபொழுது ஒரு முழம் இருந்த நீங்கள் இன்று கிட்டதட்ட ஆறு அடிக்கு வளர்ந்தது எப்படி?
நீங்கள் பிறந்தது, தவழ்ந்தது, நடக்கமுயற்சித்த மூன்று வயதுக்கு முன்னதான நினைவுகளை ஏன் சொல்லமுடியவில்லை?
உங்கள் தாத்தா, பாட்டி, அவர்களின் தாத்தா, பாட்டி இப்போது எங்கே?!
இதற்கு முன் பேரரசர்களும், மன்னர்களும், கோடீஸ்வர்களும், பெரும் உலக பணக்கார்களும் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? அவ்வளவு பெரிய நாட்டையும், பொன்னும், பொருளும், பணமும், தன் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டுதான் போனார்களா?
வாழும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னவாக மாறப்போகிறீர்கள்? எங்கே போவீர்கள்?
இந்த அதிசயத்தை, மாயாஜாலத்தை நிகழ்த்துவது யார்? இதைவிட பெரிய அதிசயம், மாயாஜாலம் உங்களுக்கு வேண்டுமா?
சிந்தித்துப்பார்த்து விடை தேடுங்கள், விடை கிடைக்கவில்லை என்றால் ‘யோகத்தின்’ வழியாக முயற்சியுங்கள்.
உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வதுதான் யோகமா? என்று குறுக்கு கேள்வி கேட்காமல் மேலே கேட்டவற்றிற்கு முதலில் சிந்தனை செய்யுங்கள். அதிலே இந்த கேள்விக்கான விடையும் இருக்கிறது!
வாழ்க வளமுடன்.