What is the way I can live without suffering?
வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?
பதில்:
இந்த உலகில் வாழும் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், இன்பமான வாழ்வுதான் கிடைக்கிறது. அதுதான் இயற்கையின் திட்டமாகவும் இருக்கிறது. ஏன் இங்கே இயற்கையை குறிப்பிடுகின்றோம்? இயற்கையின் வழியாக வந்த, பரிணாமத்தில் வந்தது தான் இந்த உலகம், அந்த உலகில் பரிணாமத்தால் உயிர்கள் உண்டானது. தாவரம் முதலான ஓரறறிவு முதல் ஐயறறிவு விலங்கினங்கள் வரை. அதன் பின்னும் அதன் தொடர்ச்சியாகத்தான் ஆறாம் அறிவாக மனிதனும் பரிணாமம் அடைந்தான். மனிதனின் பரிணாமத்தில் இயற்கையும் முழுமையை பெற்று நிறைந்தது. அதனால்தான் ஆறாம் அறிவுக்கு மேலான ஒன்று இல்லை, இவ்வுலகில்.
இப்படி வந்த உயிரினங்களில், மனிதன் மட்டுமே துன்பம் அடைகிறான் என்ற கருத்து நம் எல்லோருக்கும் உண்டு. முதலில் துன்பம் என்பது என்ன? என்று சிந்தித்தால், அதில் பலவகை வந்து நிற்கும். உதாரணமாக, உடலில் காயம், வலி, நோய், என துன்பம் வரலாம். மனதில் எழும் குழப்பாமான சிந்தனைகள், விரும்பத்தாகத நிகழ்வுகள், ஏமாற்றங்கள் வழியாக துன்பம் வரலாம். உங்களுக்கு என்ன வகையான துன்பம் என்பதை நீங்கள் தெளிவாகவும் சொல்லவில்லை. நீங்களே ஒரு நாள், தனியாக உட்கார்ந்து, என்ன வகையான துன்பம் எனக்கு இருக்கிறது? இது எதனால் வந்தது? என்றும் யோசித்துப்பார்த்து, வரிசையாக அதை எழுதுவைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதை படித்துப்பார்த்தால், சில உங்களுடைய எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமாக இருக்கும். சில உங்களுடைய தவறான செயல்களால் உருவானதாக இருக்கும், சில அளவு முறை மீறியதால் வந்த விளைவாக இருக்கும். சில இயற்கையை மீறிய செயலுக்கான தண்டனையாக இருக்கும். சில மற்றவர்களுக்கு செய்த செயல்களால் கிடைத்த எதிர்விளைவுகளாக இருக்கும். சில ஏற்கனவே உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருவதாகவும் இருக்கும். இதில் கிடைத்திருப்பது எல்லாமே துன்பம்தான், நாம் புரிந்து கொள்ளாதவரை.
இந்த துன்பங்களின் உண்மை நிலையறிந்து, திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொண்டால், இருக்கும் துன்பத்தில் இருந்து தீர்வு காணலாம், அதை விட்டு விலகலாம், அந்த துன்பங்கள் இனியும் எழாத வகையில் நம்மை பாதுகாத்தும் கொள்ளலாம். இதற்கு, வேதாத்திரியத்தில் அகத்தாய்வு, தற்சோதனை எனும் பயிற்சிகள் உதவும். துன்பத்திற்கு தீர்வும், வழியும் உங்களிடமே இருக்கிறது, அதை தேடிக்கண்டடைவதே உங்களுக்கான நோக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!
வாழ்க வளமுடன்.
-