Upadesh Mantra from the Guru!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குருவால் கிடைத்த உபதேச மந்திரம் சொன்னால் இறையுண்மை அறியமுடியுமா?.
பதில்:
இந்த உலகில், இறையுண்மை எனும் மெய்ப்பொருள் உண்மை அறிய, பக்தி வழி, வேதாந்த வழி மற்றும் யோகவழி உண்டு. பக்தியைக்கூட வேதாந்தமாக சொல்லுவோரும் உண்டு. இந்த வேதாந்தம், யோகம் இரண்டுமே ஒரே நோக்கம் கொண்டது. ஆனால் பாதைகள் வேறு ஆகும். இரண்டு பாதைகளுமே குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும், அது பயணாளியின் நம்பிக்கை, ஆர்வம், முயற்சி, செயல்பாடு, ஆராய்ச்சி, அர்பணிப்பு என்ற வகை நிர்ணயம் செய்யமுடியும். ஒரு மனிதரால் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ? அதை ஏற்று பயணிக்கலாம். எதை விரும்புகிறாரோ அதை விரும்பியும் பெற்று பயணிக்கலாம். எது சரியானது என்று தீர்மானிக்கிறாரோ அதன்படி அவ்வழியே செல்லலாம். அந்த வகையில் குறை நிறை என்றெல்லாம் சொல்லமுடிவதில்லை. என்றாலும் கூட வேதாந்தம் என்பது அருகில் கொண்டுபோய் நிறுத்தும் என்றுதான் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதை அடைவது என்பது யோகத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் உலகில் மாற்றுக்கருத்துகள் உண்டு!
ஒரு உபதேச மந்திரம் என்பது ஒரு குருவால், பக்தி வழியிலும் கிடைக்கலாம். வேதாந்த வழியிலும் கிடைக்கலாம். இந்த உபதேச மந்திரம் குருவால், அந்த புதிய, ஆரம்ப சாதகருக்கு, சீடருக்கு தனியாக, ரகசியமாக, பிறருக்குத் தெரியாமல், அறியாமல், காதுவழியாக சொல்லப்படுவது ஆகும். இந்த உபதேச மந்திரத்தை மனதிற்குள்ளாகவே சொல்லுவதும் உண்டு. தவ நிலையில் அமர்ந்து ஒலிக்குறிப்பாக சொல்லுவதும் உண்டு. இந்த வழியை, பதஞ்சலி முனிவர் தன்னுடைய அஷ்டாங்க யோகத்தில் ‘பிரத்தியகாரா’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி உபதேச மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால் மனம் லயப்பட்டு, ‘தாரணா’ என்ற நிலைக்கு உயரும். தன் வழியாக ‘தியானம்’ கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!
எனவே உங்களுக்கு அப்படியான ஒரு உபதேச மந்திரம் கிடைத்தால், தாராளமாக உள்வாங்கி சொல்லிவரலாம். எத்தனை முறை, எவ்வளவு காலம் என்ற கணக்குகள் இதில் அடங்காது. உங்கள் மனம் அதில் லயிக்கும் காலம் வரை சொல்லிக்கொண்டே வரலாம். அந்த நிலையின் ஏதோ ஒருநாள் இறையுண்மையை நீங்கள் உணரலாம்.
திருவண்ணாமலையில், வாழ்ந்து வந்து வாழ்ந்து, முக்தியடைந்த, யோகி ராம் சுரத்குமார் அவர்கள், தன்னுடைய குருவான சுவாமி பப்பா ராம்தாஸ் என்பவரிடம் இருந்து, உபதேச மந்திரம் கிடைக்கப்பெற்றார். அதுதான் பின்னாளில் அவர் சொன்ன,
‘ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்! ஓம்!’ என்பதாகும்!
வாழ்க வளமுடன்.