Is it right to think that we suffer like this because of the sin?
நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:வாழ்க வளமுடன் ஐயா, நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?
பதில்:
ஒரு தெளிவில்லாமல் அப்படி நினைத்துக்கொள்வது தவறு. இப்படி நினைப்பது உங்களை இன்னமும் துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதையும் மறவாதீர்கள். துன்பப்படுவதற்கு காரணம் பாவம் அல்ல. பாவம் புண்ணியம் என்ற புரிதலை விட்டு விலகியும் விடுங்கள். அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். மேலும் நீங்கள் செய்த பாவம் ஒன்றுமே இல்லை. ஆனால் உங்கள் பரம்பரையில், முன்னோர்கள் செய்த கர்ம வினைப்பதிவுகள் தொடர்கிறது என்பது உண்மையே!
மேலும் துன்பப்படுவதற்கு காரணம் பாவமோ, கர்மாவோ அல்ல, அதை புரிந்து கொள்ளாமல் நாம் செயல்படுவதால்தான் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு நெருப்பு எரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது தீபமாகவோ, அடுப்பாகவோ, வேறேதெனும் நெருப்பாகவோ இருக்கலாம். அதை நீங்கள் தொடுவீர்களா? தொட்டுத்தான் பார்ப்போமே? என்றாவது நினைப்பீர்களா? இல்லைதானே? ஏன் தொடமாட்டீர்கள்? விட்டு விலகுவீர்கள்? கடந்து போவீர்கள்?
அந்த நெருப்பு சுடும், சுட்டு பொசுக்கியும் விடும், தொடப்பட்ட விரலை, கையை புண்ணாக்கி விடும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் அந்த அனுபவம் கிடைத்திருக்கும், அப்படியாக நெருப்பில் சிக்கிய, பாதிக்கப்பட்ட நபர் யாரையாவது பார்த்திருப்பீர்கள். ஏதேனும் யாரேனும் சொல்லக்கேட்டுருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அந்த விழிப்புணர்வு இப்போதும், எப்போதும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவுகிறது. நெருப்பு என்பது இப்படிப்பட்டது, இது தரும் விளைவுகள் அத்தகையது. எனவே நெருப்போடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.
அதுப்போலவே, நாம் விரும்பி, எதிர்பார்த்து, தனக்காகவும் ஒரு செயல் செய்து அதன் தவறான விளைவில் துன்பபட்டு வருந்தியதும், பிறருக்கு கேடு விளைவித்து அதன்வழியாக அவருக்கு துன்பம் ஏற்படுத்தியதும், அவருடைய வருத்தமும் நம்முடைய கர்மா என்ற வினைபதிவாக பதிந்து விடுகிறது. காலத்தால் அது தானாக நம்முடைய செயல்களில் வெளிப்படுகிறது. விழிப்புணர்வாக திருத்தி செய்யாவிட்டால், மேலும் துன்பம் உண்டாகிறது.
இப்போது இதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் விளைவில் நல்லது நிகழும்படி ஒன்றைச் செய்தால், உங்களுக்கும் நன்மை, அதனால் பிறரும் நன்மையடைய வாய்ப்பு கிடைத்திடும். இதுதான் கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்க்கும் வழி. என்றாலும் இது மட்டுமே போதாது, முழுமையாக தீர்க்க யோகம் ஒன்றே சிறந்த வழியாகும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் வாழ்க்கையில் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக கர்மா என்ற வினையை தீர்த்து, இன்பவாழ்வுக்கு அஸ்திவாரம் போடலாம்!
வாழ்க வளமுடன்.