Hope we can understand the secret of the beyond universe by science. Correct?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நவீன அறிவியல் வழியாக மனிதனின் மூலத்தை, பிரபஞ்சதிற்கு அப்பால் உள்ள ரகசியத்தை அறிந்துகொள்ள முடியாதா?
பதில்:
நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவரா? நீண்டநாள் வேதாத்திரிய சாதகரா என்று தெரியவில்லை. எனினும் விளக்கமாகவே சொல்லுகிறேன். குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ற பாமர மக்களின் தத்துவஞானி, தன்னுடை மெய்ப்பொருள் விளக்கத்தை விஞ்ஞானப் பார்வையில்தான்தான் விளக்கிச் சொல்லுகிறார். சந்தேகம் இருந்தால், அவரின் மனவளக்கலை நூலின் மூன்று பாகங்களும் உடனடியாக படியுங்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் காணொளி பதிவுகளை கேளுங்கள். உங்களுக்கே அது புரியவரும்!
நீங்கள் சொல்லும் நவீன அறிவியல், இன்னமும் சூரிய மண்டலத்தையே கடக்கவில்லையே?! சரி, அது ஏன் அறிவியல் என்று சொல்லாமல் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது என்றால், அணு, அண்டம், விண், விண்வெளி குறித்த ஆராய்ச்சியை விண்ஞானம் என்று தானே சொல்லமுடியும்? ஆனால் ஏதோ அறிவியல் என்று தவறாக தமிழ்ப்படுத்தி விட்டார்கள் என்றே கருத்து நிலவுகிறது! இங்கே நாமும் விஞ்ஞானம் என்றே சொல்லிப்பழகுவோம்.
‘முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்
மொழிவதற்கு வார்த்தையின்றி முட்டிமோதி நின்றனர்
இந்தநாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை
இயங்கிடும் மின்சாரம்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தலாம்’
என்று தன்னுடைய ஞானக்களஞ்சியம் கவி வழியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தத்துவமாக மெய்ப்பொருளை குறிப்பிடும் பொழுது, மொழியால், வார்த்தையால், விளக்கத்தால் அங்கே ஓர் முழுமை கிடைப்பது கடினம். உள்ளதை உள்ளவாறு அறிய நீண்டகாலமும் எடுத்துக்கொள்ளும். அதனால்தான், அந்தக்கால கடினமான யோகத்தின் வழியாக உயிரின் உண்மையையும், இறையுண்மையையும் கண்டறிந்த சித்தர்கள், எளிய மக்களுக்காக பக்தியை உருவாக்கினார்கள். அதாவது வார்த்தையின்றி, விளக்கமின்றி, வணங்கும் கருத்தின் வழியாக நாளடைவில் உண்மை அறியலாம் என்ற வகையில் அதை அமைத்தார்கள். ஆனால் தற்காலத்தில் அதன் நோக்கம் திசைமாறிவிட்டது.
அப்படியானால், விஞ்ஞான விளக்கம் மெய்ப்பொருளை, இறையுண்மையை சொல்லிவிடுமென்றால், யோகமே தேவையில்லையே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்ப்பீர்கள் தானே? அதற்கும் பதில் உண்டு. ஒரு உண்மையை 1) அறிந்து கொள்ளுதல் 2) புரிந்துகொள்ளுதல் 3) உணர்ந்துகொள்ளுதல் என்ற மூன்று வழியாக நமக்குள் எடுத்துக்கொள்ளலாம். விஞ்ஞானம் இந்த முதல் இரண்டுக்கு மட்டுமே உதவுகிறது. உதவ முடியும். அதுதான் அதனுடைய எல்லை. அதற்குமேல் விஞ்ஞானம் நகராது. அப்படியெல்லாம் இல்லீங்க, அறிவியலால் என்னென்ன உண்மையகள் அப்பட்டமாக தெரியவருகிறது என்று நீங்கள் அறிவீர்களா? என்று நீங்களே சொல்லலாம். அப்படியானால், உங்களால் முடியுமானால் கூட நகர்த்திப்பாருங்கள். (இதை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நீங்கள் என்றால் நீங்கள் அல்ல. எதைச் சொன்னாலும் எடக்குமுடக்காக எதிர்கேள்வி கேட்பதற்கு சிலர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக!)
இன்னொரு விளக்கத்தையும் சொல்லி முடிக்கிறேன், கன்னியாகுமரி என்ற ஊர், இந்தியாவின் தென் கோடியில், தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கிறது. அந்த ஊரில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை NH52 வழியாக, நம் நாட்டின் தலைநகர் டெல்லி வரை செல்லலாம். அங்கே டெல்லி என்ற ஒரு கைகாட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அது டெல்லி அல்ல. அந்த சாலை வழியாக 2860 கிலோமீட்டர் நகர்ந்தால்தான் டெல்லி என்ற நகரம் கிடைக்கிறது. அதுபோல விஞ்ஞானம் வழியாக மெய்ப்பொருள் நிலையை அறியலாம், புரிந்தும் கொள்ளலாம். ஆனால் தத்துவத்தின் வழியாக மட்டுமே உணரமுடியும்!
கடைசியாக, விஞ்ஞானமில்லா மெய்ஞானம் நொண்டி, மெய்ஞானமில்லா விஞ்ஞானம் குருடு என்ற பழமொழியும் நம்மிடையே உண்டு.
வாழ்க வளமுடன்.