வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?
பதில்:
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், இந்தக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள்தான். நெல் விதைத்தால் நெல்லும் விளையும், புல்லும் விளையும், களையும் விளையும் என்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தெரியும். விளைச்சல் காலத்தின் முடிவில், களைகள் அவ்வப்பொழுது களைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. விவசாயிக்கு என்ன தேவையோ அதை அவன் எடுத்துக் கொள்கிறான். நெற்கதிரை அறுத்து, அடித்து, நெல்லை பிரித்து, தனித்து வைத்துக் கொள்கிறான். நெல்லில் இருந்து அரிசி நமக்கு உணவாகிறாது. நெல்லின் உதிரிகள் பறவைகளுக்கு உணவாகிறது. கதிர்கள் விலங்கினங்களுக்கு உணவாகிறது.
அதுபோலவே இந்த உலகில், மனிதன் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வாழ்வில் தேவைகளும் நிறைய இருக்கின்றன. ஒரு தன் உடல்பலம், வலிமை, இவற்றைக்கொண்டு உழைக்கிறார், பலன் பெறுகிறார். சிலர் அதன் அறிவை பயன்படுத்தி, அதன் வழியாக நன்மை பெறுகிறார். இன்னும் சிலர், இவர்கள் செய்வதைப்போல செய்து, அவர்களைப்போல நடித்து, அவர்களைச் சார்ந்து, அவர்களை ஏமாற்றி பிழைக்க தயாராகிறார்.
நமக்கு என்ன தேவை என்றால், யார் உண்மையானவர்? என்று ஆராய்ந்து, பிறகு அந்த நட்பை, பலனை பெறுவதுதான் முக்கியம். சிலவேளை நடிப்பு, உண்மையை விட உயர்ந்ததாகவும் இருக்கும். அந்த ஏமாற்று வித்தையை நாம் அடையாளம் கண்டுகொள்ள பழகவேண்டும்.
இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டாலும், நாம் அவரை திருத்தவோ, தண்டணை வழங்கவோ, பெற்றுத்தரவோ அவசியமில்லை. நாம் அந்த நபரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டால் போதுமானது. திருத்தத்தை காலம் பார்த்துக்கொள்ளும் என்பதால் நாம் வருந்தவேண்டியதில்லை. நீங்கள் அவரிடம் சிக்கி வருந்தாமல் கவனமாக இருந்தால் போதுமே.
இப்படி ஒவ்வொருவரும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், போலியான நபர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு விலகிவிடவேண்டும். அவர்களை அடையாளம் காண பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய அறிவு அவர்கள் வசம் சிக்கிவிடக்கூடாது. உங்களிடம் இருக்கும் பெரும் பொருள், பெரும் பணம் சிக்கிவிடக்கூடாது.
ஆனால், உண்மையானவரையும் போலி என்று கருதிவிடாத, ஒதுக்கித் தள்ளிவிடாது, ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு வேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-