Someone told to me, the vasiyoga is the best way. Please explain!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?
பதில்:
சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.
சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?
சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா?
ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!
வாழ்க வளமுடன்.
-