CJ for You: self realization

self realization

Showing posts with label self realization. Show all posts
Showing posts with label self realization. Show all posts

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம்.  வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

Does the man born in this world really have a purpose?


இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


பதில்:

இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகிற ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மனிதன் என்றால் ஆண் என்பதாக மட்டும் நினைக்கக்கூடாது. பெண்ணுக்கும் அத்தகைய நோக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆணைவிட பெண்ணுக்குத்தான் அந்த நோக்கம் இயற்கையாக அமைந்திருக்கிறது எனலாம். பெண் ஏற்கனவே இந்த இயற்கையோடு வாழ்பவளும், இயற்கையின் முழு இயல்பை தன்னகத்தே பெற்றவளும்கூட பெண் தான்.

ஒரு நோக்கம் என்பதை, பொதுவாக இக்காலத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பேரும் புகழும் பெறவேண்டும், குறையாத வளமும், நிறைவான பணமும் வேண்டும் என்று சொல்லுவார்கள்.  ஒரு மனிதர் எந்தெந்த நிலையில் வாழ்ந்து பழகுகிறாரோ அந்ததந்த அளவில் நோக்கம் மாறும். அரசியலில் இருப்பவர் கட்சிக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தலைவராக விரும்புவார். அலுவலத்தில் இருப்பவர், அந்த நிறுவனத்திற்கே தலைவராக விரும்புவார். நிறுவனம் வழி, தொழில், வியாபாரம் செய்பவர் உலகின் முன்னோடி நிறுவனமாக தன்னுடையது மட்டுமே இருக்கவேண்டும் என்று உயர விரும்புவார். இப்படி பலப்பல உண்டு.

ஆனால் இதெல்லாம் நிச்சயமானதுதானா? இதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது உண்மையிலேயே என்ன? பாராட்டும் புகழும் திருப்தியும் என்பது போதுமானதுதானா? ஒரு நொடியில், ஒரு நாளில் யாராவது வேறு ஒருவர், உங்கள்விட ஒரு படி முன்னேறினால் உங்கள் நிலை என்னவாகும்?! மேலும் தீடீரென்று உயர்த்தில் இருப்பவர், மறுநாள் இல்லை என்ற நிலை என்பதுதான் உலகில் நாம் பார்க்கிறோம். இதுநாள் வரை அவருடைய போராட்டம்  என்னவாயிற்று? என்ன நிறைவான பலனை அடைந்தார்? நிஜமாகவே அவருக்கு என்ன கிடைத்தது? நிச்சயமாக அவர் நோக்கம், விருப்பம் நிறைவேற்றம் அடைந்ததா? குறையோடு போய்ச்சேர்ந்தாரா? திருப்தியாக இருந்தாரா? என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?! யோசித்துப்பாருங்கள்!

ஆனால் இதெல்லாம் உலக வாழ்க்கை இயல்புதான், பொருள்முதல்வாத உலகில், நாம் உழைப்பதும் அதனால் பொருள்வளம் பெறுவதும் தேவையே. அதை விட்டு விலகமுடியாது. குரு மகான் வேதாத்திரியும் கூட இதையெல்லாம் விட்டுவிடு என்று சொன்னதே இல்லை. ஆனால் போதும் என்ற நிறைவான மன நிலைக்கு, வாழும் பொழுதே வந்துவிடு என்று சொல்லுகிறார். அந்த அளவிற்கு மேல், தேவைப்படும் பிறருக்கு பகிர்ந்தளித்து உதவுக என்று வலியுறுத்துகிறார்.

உண்மையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பின் நோக்கம், தன்னை அறிவதுதான். இந்த இயற்கை அதைத்தான் நமக்கு உள்நோக்கமாக அமைத்திருக்கிறது. அதுதான் மனதில் இருக்கிறது, வெளியேவும் பிரகாசிக்கிறது. ஆனால் வளரும் காலத்தில் அது பலவகைகளில் சிக்கி மறந்துவிட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என்ற ஒன்றை செய்தால், பிறகு உங்கள் மனமே ‘நான் கேட்டது இது இல்லையே’ என்று சொல்லிவிடும். இப்படி ஓவ்வொன்றாக எதை நீங்கள் விரும்பினாலும் அதில், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் திருப்தி ஏற்படுவதே இல்லை. உண்மைதானே? இல்லை நான் பொய்யாக சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

நம்முடைய மனம் மிகப்பெரிய பேராற்றலின் ஒரு சிறுபகுதி. அதை வாழ்க்கையில் சிறிய சந்தோசங்களில் அடைப்பதில் முழுமை பெறுவதில்லை. மனதின் நோக்கம், தன்னையறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. மனம்+இதன்=மனிதன் என்பதால், மனிதனாகிய நமக்கும் தன்னையறிவதுதான் நோக்கம். அதற்காகவேதான் பிறப்பும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்

-

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

What about the Summa Eru on the Self-Realization?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் இயற்றாமல், வழிபாடும் செய்யாமல், மனதை புரிந்துகொண்டு, நாம் சும்மா இருந்தாலே இறையுணர்வு பெறலாம் என்று சொல்லுகிறார்களே?


பதில்:

ஆமாம் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இங்குமட்டுமல்ல, உலகெங்கும் அப்படி மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இது வேதாந்த கருத்தின் அடிப்படை எனலாம். இதில் எந்தக்குறையும் இல்லை. ஆனால் இதை நீங்கள் கடைபிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும், இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படியேதான் இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். ஏதோ பேச்சளவில், செயலளவில், நீங்கள் விழிப்பாக இருப்பதாக தோன்றுமே தவிர வேறெந்த மாற்றமும், அனுபவமும் தரப்போவதில்லை, பெறப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் அருகில் இருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கும் புரிதலுக்கும் இடையே ஒரு தடையும் இருக்கிறது. அத்தடையை நீங்கள் காண்பதே இல்லை.

இதன்வழியே மனமும், உடலும், அடிப்படை குணாதசியங்களும் மாற்றம் பெறுவது மிக கடினம். ஒரு வெளித்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவேண்டுமானால் நம்பலாம். உடலும் தன்னை நோய் திருத்தம், தாக்கம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றுவிடுவதில்லை.

மேலும் இதன் வழியாக நீங்கள் ஒரு குழப்பத்திலிருந்து, விடுபட்டுவிட்டேன் என்று நம்புகிறீர்கள் அல்லது பழகிக் கொள்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறவில்லை. உங்கள் கர்மா என்ற வினைப்பதிவு, உங்கள் எண்ணம், சொல், செயல் திருத்தம் பெறவில்லை. விளைவுகளும் உங்களுக்கு சாதகமாக எழப்போவதில்லை. ஆனால் நீங்கள் இறையுணர்வு பெற்றுவிட்டதாகவும், இறையுணர்வில் இருப்பதாகவும் நம்புகிறீர்கள். உங்களைப்பொறுத்தவரை அது சரிதான். இங்கே எந்த வாதத்திற்கும் இடமில்லை. ஏனென்றால் புரிதலில் குழப்பமும், நிலைமாறுதலும் அமைந்திருக்கிறதே?!

உங்கள் கையில் இருக்கும், மாதுளம்பழம் நன்கு சிவந்து அழகாக இருக்கிறது. எப்படியும் உள்ளே இருக்கும் விதைகள் சுவையாக இருக்கும், நல்ல இனிப்பைத்தரும். பிழிந்தால் நன்கு பழச்சாறாகவும் கிடைக்கும், இந்த மரம் எந்த விதையின் அடிப்படை கொண்டது தெரியுமா? இதன் தாய் மரம், இந்த நாட்டைச் சார்ந்தது, அந்த நாட்டின் மண் எப்படி வளம் கொண்டது தெரியுமா? என்று இப்படி பலவாறாக சொல்லி மகிழலாம், பிறருக்கும் புரியவைக்கலாம். ஆனால் அந்த மாதுளம்பழத்தை, வெட்டி பிரித்து, அதன் விதைகளை தனியே பிரித்தெடுத்து, சாப்பிட்டுப் பார்த்தால்தானே உண்மைச்சுவை அறியமுடியும்?! ஆனால், ‘என்னய்யா பெரிய மாதுளம்பழம்? நான் சாப்பிடாத மாதுளம்பழமா? இதுவரைக்கும் எத்தனையோ பழம் சாப்பிட்டிருக்கேன். அதுபோலத்தான் இதுவும் இருக்கும்’ என்று பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?

குண்டலினி யோகம் என்பது குருவால், நான் யார்? என்ற கேள்வியில் ஆரம்பித்து, உணர்ந்து அனுபவித்து, தன்னை அறிவதும், இறையுணர்வு பெறுவதுமாகும்! அந்த நிலையில்தான் ரமணமகரிஷி சொல்லிச்சென்ற ‘சும்மா இரு’ என்பது உண்மையாகும்!

வாழ்க வளமுடன்.