CJ for You: sixth sense

sixth sense

Showing posts with label sixth sense. Show all posts
Showing posts with label sixth sense. Show all posts

There is no compulsion to change through yoga. Why?


யோகத்தின் வழியான, மாற்றத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏன்?


இந்த உலகில் பிறந்து வாழும் நாம், யாருடைய பிள்ளை, யாருடைய வாரீசு, யாருடைய வம்சாவழி என்பதெல்லாம் தெரியும். அதை நாம் வளரும் பொழுதே தெரிந்தும் கொண்டு, அதை இறுக பற்றிக்கொண்டும் விடுகிறோம். நாம் வீடு, ஊர், நாடு என்பதையும்கூட விரிவாக, நுண்ணிய தகவல்களோடு அறிந்து கொள்கிறோம். சமூகம், உலகம் என்ற செயல்பாடுகளையும், அதன் பாரம்பரியம், வரலாறு, முன்னேற்றம் என்பதையும் தெளிவாகவே நாம் புரிந்தும் கொள்கிறோம். கல்வியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆனால், மனிதனாக இருக்கிற நாம், பரிணாமத்தின் எழுச்சியில் வந்த, ஆறறிவான ஜீவன் என்பதை ஒரு விளக்கமாக பெற்றுக்கொண்டாலும், ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக்கொண்டதில்லை. நீ யார்? என்று மற்றவர்களை தயங்காமல் கேட்கும் நாம், நமக்குள்ளாக கேட்டுக்கொள்வதே இல்லை. அது குறித்த அக்கறையும் நமக்கில்லை. நம்மைச்சார்ந்த குடும்ப உறவுகள் யாரும்கூட சொல்லித்தரவும் இல்லை. ஆனால், ஏதோ ஒருவகையில், நண்பர்களோ, யாரோகூட, இப்படியாக ‘நான் யார்?’ என்ற கேள்வி இருக்கிறது. அதை கேட்டுப் பார்க்கவேண்டும். இதற்கு பக்தி கடந்த யோகம் உதவும் என்று சொல்லி இருப்பார்கள். உங்கள் சூழ்நிலைகளும் இப்படியான கேள்வியை உருவாக்கிடவும் வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு, இப்படியாக ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்தானா? என்றும் நினைப்பார்கள். ஆறாம் அறிவு ஜீவன் என்று தன்னை உயர்வாக சொல்லிக்கொள்கின்ற மனிதன், அந்த ஆறாம் அறிவை, அதன் பயனை, அற்புதத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது, அதை தவறவிடலாமா? மறுத்து ஒதுக்கித் தள்ளலாமா? எனினும் இவர்களை எல்லாம், வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, யோகத்தின் வழியாக, நீங்கள் உண்மை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லமுடியாது. இதெல்லாம் தானாக வருவதும், தனக்குள்ளாக மலரும், சிந்தனையும் ஆகும். சட்டமோ, விதியோ ஏற்படுத்தி, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியான அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இல்லை.

இப்போது, உள் ஆர்வத்தோடும், மற்றவர்கள் சொல்லி, ஏதோ தவிர்க்கமுடியாத கட்டாயத்திலும், விருப்பத்திலும் யோகத்தில் இணைந்து கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழும் அல்லவா? இந்த கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களே பதில் தருகிறார். எப்படி என்று பார்க்கலாமா?

வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம்மிடம் இப்படியாக விளக்குகிறார். மனவளக்கலை மன்றத்திற்கு வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள்.

இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.

ஆனால், மனவளக்கலை மன்றம் மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது.

மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள் என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும்.

அதே போல, மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.

ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும். 

ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.

ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' (Simplified Kundalini Yoga) செய்கிறது.

உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது. அதை அனுபவத்தினால்தான் தெரிந்து கொள்ளவும் முடியும்.  எனவே, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, பிறவியின் நோக்கமும், கடமையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

-

How can we understand that God and Brahmmam are? Does it really matter? Is it necessary to accept that? truth explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பதும் பிரம்மம் என்பதும் எப்படி விளங்கிக் கொள்வது? உண்மையாகவே இருக்கிறதா? அப்படி ஏற்றுக்கொள்வது அவசியம் தானா? உண்மை விளக்கம் தருக.


        உங்கள் அடிப்படை சந்தேகத்தை விளக்கக்கூடிய கேள்வி என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவக்கூடிய விளக்கமும் கிடைக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே இந்த கேள்வியின் அடிப்படையில், விரிவாக விளக்கம் தந்துள்ளேன். அதை, இங்கே தேடிப்பார்த்து படித்து அறியலாம். இன்று கூடுதலாக, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கித்தருகிறார் என்றும் பார்க்கலாம்.

இறைநிலை உணர்ந்த அறிவு, வாழும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். அது அவசியமும் கூட. காரணம், அதில் அவனுடைய பரிணாம எழுச்சியின் உண்மை மறைந்திருக்கிறது. மற்ற ஜீவன்களில் இருந்து, எந்த வகையில் அவன், ஆறாம் அறிவின் உன்னதத்தை பெற்றிருக்கிறான் என்ற காரணம் உள்ளடங்கி இருக்கிறது. அது அவனுடைய பிறவிக்கடமையாகவும், பிறவியின் நோக்கமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், உதாசீனப்படுத்தி விலகிக் கொண்டாலும், யாருக்கும் ஏதும் இழப்பு இல்லை. ஆனால், பிறந்த அந்த மனிதனின், பிறப்பு ‘வீணாகி விடுகிறது’. எனவே, அறிந்து உணராமல் மடிந்துவிடுவது, அவனுக்கே இழப்பாகிறது. அந்த இழப்பு, அவனுடைய வாரீசுகளுக்கும் தொடர்ந்தால் என்னாவது? 

இந்த நிலையில், ஒரு மனிதன் அவனின், பிறவி நோக்கமும், பிறவிக்கடமையும் தெரிந்து கொண்டால் என்னவாகும்? ‘நான் யார்?’ என்று தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கக்கூடிய அந்த ‘முழுமை இன்பம்’ அனுபவமாக மட்டுமே கிடைக்கக்கூடியது. ஒருபோதும் வார்த்தைகளால், எழுத்துக்களால் விளக்கித்தர முடியாது. எனினும், வேதாத்திரி மகரிஷி அதுகுறித்த விளக்கத்தை, உங்கள் அளவிற்கு தருவதை, இதோ காணலாம்.

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனித பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவேதான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.

இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் தூள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், ‘பிரம்மம்’ எனும் தெய்வீகப் பேரற்றாலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்’ என்ற வகையில் உண்மை விளக்கமளிக்கிறார், வேதாத்திரி மகரிசி.

இந்த உண்மைகளை, தன் வாழ்நாளில் அறிந்து உணர்வதற்காகவே பிறவியெடுக்கிறான். ஆனால் பிறந்த பிறகும், வாழும் நிலையிலும், அதை மறந்துவிடுகிறான். எல்லாவற்றையும் மறுத்தும் விடுகிறான். அதோடு மடிந்தும் விடுகிறான்.

வாழ்க வளமுடன்.

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

Sixth and below!


ஆறும் அதற்கு கீழும்!



பதுங்குதல்

பெரும்பாலும் என் வீட்டில் சிறு பூச்சி, சிறிய வகை சிலந்தி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி மற்றும் தூசி தொந்தரவுகள் உண்டு. இந்த வீட்டின் மனிதர்கள் எப்போதடா விளக்கை நிறுத்திவிட்டு படுப்பார்கள் என்று காத்திருந்து வெளியே நடமாடுவது போல இருக்கும். நான் முன்பு குடியிருந்த வீட்டில், பாம்பு எல்லாம் சாதாரணம். பகலில் கூட வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக வெளியே பார்த்தால், பாம்பு தென்படுகிறது என்று என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சொல்லியிருக்கிறார். 

ஒருமுறை கூட நான் அப்படி பார்த்ததில்லை. இத்தகைய உயிரிங்களின் போக்கு, இரவில்தான் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதாவது மனிதர்களின் அசைவு, உடல் அதிர்வு, குரல் அதிர்வு, ஒலி ஒளி தாக்குதல், வெப்பம் குளுமை பாதிப்பு இதெல்லாம் குறைந்த பிறகு அல்லது நின்றுவிட்ட பிறகு தான், தன் இரை தேடி வெளியே கிளம்புகின்றன. ஆம் அந்த உயிரினக்களுக்கு உணவின் பொருட்டுத்தான் வீட்டிலும் தங்குகின்றன. அதுவரை மற்றெல்லா பொழுதுகளும் பதுங்கியே இருக்கின்றன.

உதாரணமாக, ஏதேனும் சிறு பூச்சியை நீங்கள் விரட்டி அடிக்க முயற்சித்தால் அவை உடனடியாக ஏதேனும் ஒரு இருட்டுப்பகுதியை நோக்கி பறக்கும் அல்லது ஓடும். ஏனென்றால் அப்போதைக்கு அவைகளுக்கு பாதுகாப்பு அந்த இருட்டு இடங்களே! சிலவேளை தரையில் ஓடும் பூச்சி, பல்லி இவற்றை விரட்டினால், அவை உங்களை நோக்கிவரும் போது, உங்கள் உள்ளங்காலுக்கு அடிப்பகுதியில் கூட தங்குவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால் அங்கேயும் இருட்டு இருக்கிறதே! நீங்கள் ஐயய்யோ என்று அலறி, காலை உதறி ஓடுவது எனக்கு காட்சியாகிறது. 


வாழ்விடம்

இந்த உயிரினங்கள் எல்லாமே ஏன் மனிதர் வாழும் இடங்களில் இருக்கிறது? இருங்க, இருங்க! நீங்களும் நானும்தான், அத்தகைய உயிரினங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு இங்கே இடமில்லை என்று விரட்டியும் விட்டு, அந்த உயிரினங்களுக்கு நவீன வாழ்வியல் மூலமாக, தொந்தரவுகளையும் கொடுக்கிறோம். 

அந்த சிறு உயிரினங்களுக்கான உணவுச் சங்கிலியையும் அறுத்த பெருமை நமக்கு உண்டு. கூடவே நம்முடைய சோம்பேறி தனத்தாலும், சுத்தத்தில் அக்கறை இன்மையாலும் வெளியே இருக்கக்கூடிய உயிரினங்களை நாமே வருக, வருக என்று வரவேற்கவும் செய்கிறோம்.


விட்டு விலகி விட்டோம்

எங்கள் வீட்டில் சில பாம்புகள் வரும் என்று சொன்னேன் அல்லவா? அவை ஒருபோதும் வீட்டிற்குள் வந்ததில்லை. ஒரு நேரம் வாசல்படி ஏறிவந்த பாம்பு, யாரோ வருகிறார்கள் என்று தெரிந்தவுடனே, வெளிவாசல் வழியே படி இறங்கி ஓடி மறைந்துவிட்டது. ஆனால் குளியலறையிலும், வீட்டு சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வந்துவிட்ட பாம்பை அடிக்காமல், விரட்டி இருக்கிறோம். பாம்பை கொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு விசம் இருக்கலாம் ஆனால், சிறு அதிர்வு இருந்தாலே மிக விரைவாக ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது. லாவகமாக அதை விரட்டி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு பழக்கம் இல்லை என்பதுதான் பொதுவான விசயம். 

எப்படி விவசாயத்தை விட்டு மிக நீண்ட பாதையில் விலகிவிட்டோமோ, அதுபோலவே பிற உயிரினங்களோடு கூடிய தடுப்பு, விலக்கல், பாதுகாப்பு இவற்றிலும் விலகிவிட்டோம். காலம் கடந்து செல்லச்செல்ல, இத்தகைய உயிரினங்கள் குறித்த தகவல்களைச் சொல்லும் பெருசுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமான குறிப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி சொல்லிக்கொண்டே, அந்த ஏட்டுச்சுரைக்காயை கறிக்கு உயயோகப்படுத்த பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.


வாழ்தல் கேள்விக்குறி?!

ஒரு சுண்டெலியைப்போல உங்களால் வேகமாக திட்டமிட முடியுமா? ஒரு எறும்புபோல எங்கோ மறைந்த சர்க்கரையை தேடி எடுக்க முடியுமா? கரப்பான் பூச்சியைப்போல எந்த சூழலிலும் வாழ்ந்து பழக உங்களால் முடியுமா? என்று பலப்பல கேள்விகளை வரிசையாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் ஆறறவு பெற்ற மனித உயிரினம் அல்லவா? இருக்கட்டும்.

ஆனால், இந்த உயிரினங்களும், பிறக்கின்றன, வளர்கின்றன, இணையோடு கூடி களிக்கின்றன. முட்டைகள், குஞ்சுகள், குட்டிகள் இடுகின்றன. தேவையான நேரத்தில் உணவு தேடி தின்கின்றன. அமைதியாகின்றன, காலத்தில் இறந்தும் போகின்றன. நாம் ஆறறவு என்று நமக்கு தற்பெருமை இருக்கிறது, ஆனால் எங்கேயோ வாழ்க்கையை தொலைத்துவிட்ட யோசனை உள்ளுக்குள் எழுகிறதா இல்லையா?

யோசிப்பதற்குக்கூட நமக்கு நிறைய நேரம் இல்லைதான். ஆனால் கொஞ்சம் முயற்சிக்கலாம்.

 

Mind Perfection is Human


மனம் + இதன் = மனிதன்


அனைத்தும் பணிகளிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்றாலும், உங்கள் பார்வையில் மிகவும் கடினமான அல்லது சவாலான பணி எது? ஏன்?

கடினமான, சவாலான பணி என்றால், “ஒரு மனிதனை மனிதத்தன்மையோடு” இருக்கத் தூண்டுவதுதான். மனிதன் என்ற போர்வையில் இருக்கும் “பல்லுயிர் மிருங்கங்கள்” என்பதாகத்தான், பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறான். மனிதன் மனம்+இதன் ஆக வேண்டும் என்றுதான், அவ்வப்பொழுது சித்தர்கள், ஞானிகளும், மகான்களும் தோன்றி வழிநடத்துகிறார்கள். 


ஏதோ ஒரு கவிதை இப்படி சொல்லும்...


எங்கள் பள்ளிகள்

கல்லூரிகள்

எத்தனையோ பட்டதாரிகளை

எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை

எத்தனையோ பொறியியலாளார்களை

எத்தனையோ தொழிநுட்பர்களை

எத்தனையோ சாதனையாளர்களை

எத்தனையோ திறமைசாலிகளை

உருவாக்கி தந்திருக்கிறது

எப்போது ஒரு மனிதனை

உருவாக்கித்தரும்?!


ஒரு மனிதன் பிறப்பிலேயே, இயற்கையோடு ஒன்றிய (அந்த ஒன்றியமல்ல)  திறமைகளை பெற்றிருந்த போதிலும், அவை எல்லாம் சிதைக்கப்பட்டு, மடை மாற்றப்பட்டு  குறிப்பிட்ட துறைக்கென வளர்த்தெடுக்கும் நிலை தான் இங்கே. எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்பில் இருக்கும்பொழுது, மனிதன் தன்னை எல்லா பிறப்பிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு, ஆறாவது நிலை அறிவானவன் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, சக மனிதனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் ஒன்றாக வாழும் பொழுது, இரண்டு மனிதர்கள், கணவன் மனைவி கூட ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ முடியவில்லையே?! 

எனவே என்னைபொறுத்தவரை, மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் கடினமான, சவாலன பணி ஆகும்!

-----

நன்றி கோரா தமிழ்

Thanks to Image by: theexplanation.com