CJ for You: thirumoolar

thirumoolar

Showing posts with label thirumoolar. Show all posts
Showing posts with label thirumoolar. Show all posts

Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

What is the truth of Jeevathma Paramathma and how to surrender? Please explain in yoga!


ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதையும் யோகத்தில் விளக்க முடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதையும் யோகத்தில் விளக்க முடியுமா?



பதில்:
மிகப்பெரும் இறை தத்துவ மேதைகள் காலம் காலமாக சொல்லிவரும் விளக்கம் ஆகும். பக்தி மார்க்கத்தின் மூலம், வைஷ்ணவத்தின் வழியாக, முழுமையை மக்களுக்கு, எளிமையாக அளித்த, விசிஷ்டாத்துவத்தின் உண்மையை அருளிச்செய்த மகான் இராமானுஜனாச்சாரியார், ஜீவாத்மா, பரமாத்மா என்பதையும், இந்த ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்ற உண்மையையும் விளக்கித்தந்தார். பெரும்பாலான எல்லா வைஷ்ணவ பெரியோர்களும், ஆழ்வார்களும் பாடல்கள் வழியாக விளக்கியும் உள்ளார்கள். அதை இங்கே விளக்கமாக காண்பது கடினமே. அப்படி விளக்கினாலும் முழுமையாக புரிந்து கொள்வதும் கடினமே.

ஏனென்றால், உணர்வு பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டியதை, எழுத்தாலும் வார்த்தைகளாலும் புரியவைக்க முடியாது. அந்த விளக்கமும் முழுமையாக உங்களை வந்தடையாது. ஒரு மலர் மலர்ந்து நறுமணம் வீசுகிறது என்று எழுதினால், அந்த பூவும், அதன் நறுமணமும் எப்படி உங்களுக்கு உணர்வாக கிடைக்கும்? உலகில் சாதாரணமாக நாம் காண்கின்ற பூவும், நுகர்கின்ற நறுமணமும் கூட இங்கே வார்த்தையால் விளக்கிட முடியவில்லை அல்லவா? அப்படியான நிலையில், இந்த கேள்விக்கான பதிலை விளக்கிவிடுவதும் கடினம்.

என்றாலும், அதில் சொல்லப்படும் உண்மை என்ன என்று பார்க்கலாம். ஜீவாத்மா என்பது, நாம் தான். ஒரு ஜீவன், மனிதன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடுத்துவந்த, ஆறறிவான மனிதனுக்கு மட்டுமே ஆத்மா என்பது சிறப்புத்தகுதி பெறுகிறது. மனிதன் ஒரு ஜீவன் என்பதால், ஜீவாத்மா. ஒரு மனிதனாவன், உடல், மனம், உயிர் என்பதைக் கடந்து ஆத்மா என்ற நிலையிலும் இருக்கிறான். அத்தகைய ஆத்மாவின் களங்களை போக்க வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்துள்ளான் என்பது கருத்து. அந்த களங்கள் என்பது என்ன? கர்மா என்ற வினைப்பதிவுகள் தான்.

இங்கே பரமாத்மா என்பது, இறையாற்றலை குறிக்கிறது. பரம் என்றால் முதன்மையான, முழுமையான, வேறெதும் ஈடாக சொல்ல இயலாத தனித்த ஒன்று என அர்த்தமாகிறது. அத்தகைய பரமாத்மாவோடு, ஜீவாத்மாவை ஒன்றிடச் செய்வதுதான் பிறவிக்கடன் என்பதே இதன் உண்மையாகிறது. இங்கே ஜீவன், ஆத்மா, பரமாத்மா என்ற மூன்று நிலைகள் உள்ளன.
சித்தர்கள் துவைதம், விசிஷ்டாத்துவைதம் என்பதையெல்லாம் கடந்து அத்வைதம் என்ற நிலையில் தங்களை நிறுத்திக்கொண்டார்கள்.

ஆதிசங்கரரும் அத்வைதத்தில் பெரும்பங்கு ஆற்றியவரே எனினும் பாமர்களுக்காக பக்தியிலும் பல பகிர்வுகளை தந்திருக்கிறார். சித்தர்களின் வழியான யோகத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதும் வேறெரு வகையாக விளக்கமளித்து பின்பற்றப்பட்டு வருகிறது.

நீங்கள் யோகத்தில் இணைந்து, தகுந்த குருவின் வழியாகவே இந்த உண்மைகளை புரிந்துகொள்ள முடியும். 

வாழ்க வளமுடன்
-

How the thinking of the Guru in mind will helps?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குருவின் நினைவு எந்த அளவுக்கு நம்மை உயர்த்திடும் என்று விளக்குவீர்களா?!


பதில்: 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 

தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!

என்று திருமந்திரம் தந்த, மகான் திருமூலர் குறிப்பிடுகின்றார். தனக்கு யோக தீட்சை தந்த குருவை மட்டுமின்றி, எந்த ஒரு குருவையும் நாம் நினைத்து உயரலாம். அதை இங்கே வரிசைப்படுத்தி சொல்வதிலேயே நமக்கு புரிந்துவிடும். ஒரு குருவை பார்ப்பதும், அவர் அருகில் இருப்பதும் ஒருவகை. குருவின் பெயரையே மந்திரமாக, வாழ்த்தாக சொல்லி மகிழ்வது ஒருவகை. குருவின் சொற்பொழிவை, வார்த்தைகளை கேட்டு உணர்வது ஒருவகை. குருவையே நினைவில் நிறுத்தி, அவரை மனக்கண்ணால் கண்டு மகிழ்வதும், சிந்திப்பதும் உயர்வான வகை என்று திருமூலர் தன் கவியில் விளக்குகிறார்.

மனம் எப்போதும், ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டே இருக்கக்கூடியது. அது தானாகவும் நிகழும், நாமே விரும்பியும் சிலவற்றை பற்றிக் கொள்வோம். அந்த வகையில்,  குருவை நாம் நினைத்து சிந்தித்தால், நிச்சயமான உயர்வு உண்டு என்பதே உண்மை ஆகும்!

வாழ்க வளமுடன்.