Why I can't understand my mind itself? Please explain!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனதை என்னாலேயே ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? உதவுங்கள்!
பதில்:
உங்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை விடவும், இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். உதராணமாக சொல்லுவதென்றால், ஒரு இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். அது புத்தம் புதிது. அதற்கென்று ஒரு அமைப்பு, இயக்கம், வேகம் உண்டு. அது அந்த தயாரிப்பு நிறுவனமே தெளிவுபடுத்திவிடும். அதற்கென்று தனி கையேடு நூலும் தந்து விளக்கம் தந்துவிடும். ஆனால் நாம் படிக்கிறோமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. நான் காசு கொடுத்து வாங்கிய வாகனம், என்சொல்படிதான் கேட்க வேண்டும் என்பது சரியாகுமா? அந்த வாகனத்துக்குத் தகுந்தபடி நாம் கற்று நம்மை மாற்றிக்கொள்ளுதல் சரியாகுமா?
உங்கள் மனம் உங்களுடையதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை எப்படி இதுநாள் வரை பயன்படுத்தி வந்தீர்கள் என்பதுதான் சந்தேகமும் பிரச்சனையும். ஆனால் அற்புதமாக, வேதாத்திரிய யோகத்தில் இணைந்துவிட்டீர்கள் அல்லவா? அதுவே மிகப்பெரிய விளக்கம் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே கொஞ்சம் தாமதமாகவே மனதை புரிந்துகொள்ள முயற்சித்தாலும் கூட தவறில்லை. இதுவரை மனம் பலதரப்பட்ட கணக்கீடுகளை தன்வயப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் பல ஜென்ம வாசனையை மனம் புதைத்து வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவையும் உடனடியாக மாற்றவும், அவ்வளவு நுண்ணிய / பிரமாண்டமான மனதை புரிந்துகொள்வதும் உடனடியாக சாத்தியமானதா என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.
எனவே, உங்கள் மனதை, உங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தவேண்டாம். இனியாவது புரிந்துகொள்ள முயற்சிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். மனதில் எழும் எண்ணங்களில் கவனமும், விழிப்பும் கொள்க. ஆக்கினை தவமும், துரிய தவமும் நன்கு தொடர்ந்து செய்துவருக. மேலும் அகத்தாய்வு எனும் தற்சோதனையை தினமும் ஒரு மணி நேரம் செய்துவாருங்கள். மூன்று மாதத்திற்குள்ளாக, நீங்கள் உங்கள் மனதை ஓரளவிற்காவது புரிந்துகொள்ளமுடியும். இன்றே பயிற்சியாக தொடங்கிவிடுங்களேன்!
வாழ்க வளமுடன்.