To whom does Vethathiriyam give importance to living people? Why?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?
பதில்:
குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.
எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.
உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.
இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!
ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!
ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.
வாழ்க வளமுடன்.