What is the meaning of yoga instead of enjoying the earth life?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?
பதில்:
நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.
ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?
நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.
மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.
வாழ்க வளமுடன்.