CJ for You: introspection

introspection

Showing posts with label introspection. Show all posts
Showing posts with label introspection. Show all posts

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-

Leave the mind as it is. Let it be what it is within. How then can one be without a mind? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, மனதை அப்படியே விட்டுவிடுங்கள். அது அகத்தில் எப்படி இருக்கிறதோ இருக்கட்டும் என்கிறார்கள். அப்படியென்றால் மனம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? விளக்குக.



வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.

பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.

மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.

மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.

மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும்.  எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.

மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?

-

வாழ்க வளமுடன்
-

Sir, the burden of my anxiety seems to be increasing every day. Due to this, I could not concentrate on any work. Is there a solution to this?


ஐயா, ஒவ்வொரு நாளும் என் கவலையின் சுமை கூடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு தீர்வு உண்டா? எந்தெந்த வகையில் என் கவலையை போக்கமுடியும்? எனக்கு விளக்கம் தருக.

கவலை என்பது மனிதர்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நீங்களும் நானும் இன்னும் பலரும் அந்த வரிசையில்தான் இருக்கிறோம் எனலாம். எனினும் இந்த கவலை என்பது, நிஜமாகவே மனிதனின் அடிப்படை குணமா? என்று கேட்டால் அதற்கு பதில், ஆமாம் என்று சொல்லுவதற்கில்லை. மகிழ்ச்சி, பயம், நிறைவு, சினம் என்ற இயற்கை குணங்களோடு, கவலை,  ஏக்கம் என்று சில கலந்துவிட்டது. நாமும் அதை விட்டுவிடுவதாக இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே கவலை வந்துவிட்டது. aவர்களும் நமக்கு போட்டியாக கவலையை எடுத்துகொண்டுவிட்டார்கள். நமக்கு பெரிய பெரிய என்றால், அவர்களுக்கு அவர்களளவில் சிறிய சிறிய என்பதாக இருக்கிறது. இந்த கவலை குறித்து வேதாத்திரி மகரிஷி, தனியாக பாடமே அமைத்துவிட்டார். அதுதான் தற்சோதனை எனும் அகத்தாய்வில் ‘கவலை ஒழித்தல்’ என்று வைத்திருக்கிறார். கவனியுங்கள். கவலையை தீர்த்தல் அல்ல, ஒழித்தல் ஆகும்.

இந்த கவலை குறித்து எந்த ஆன்மீக, யோக பெரியோர்களும் தனியாக சொன்னதில்லை. இறையிடம், மெய்ப்பொருளிடம் முறையிடு. தீரும் என்றுதான் சொல்லுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியோ அதை, அந்த கவலையை ஆராய்ந்து அலசிப்பார் என்கிறார். அதை வகைப்படுத்தி புரிந்து கொண்டு, விளக்கம் பெற்று கவலையை ஒழித்துவிடு என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் கவலை எத்தகையது என்பதை, உங்கள் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால் எதனால் அது ஆரம்பமாகிற்று? என்பதை தனியாக நீங்கள் மட்டுமே அறிவீர்கள். எனினும். அந்த கவலையை தீர்க்க, இல்லையில்லை ஒழிக்க வழி உண்டு. மனவளக்கலையில், நீங்கள் கவலை ஒழித்தலை பாடமாகவும் படிக்கமுடியும். கட்டுரையாகவும் படிக்கமுடியும். உங்களிடம் உள்ள மனவளக்கலை புத்தகம், பாகம் ஒன்றில், இருக்கும் ‘கவலை ஒழித்தல்’ தலைப்பிலான பதிவை படித்துப்பாருங்கள். கூடுதலாக. இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

மன ஆற்றலை, நம்பிக்கையை அகற்றும் கவலை தேவையா? 

வாழ்க வளமுடன்.

-

How to control the unwanted thoughts that arise in the mind?


மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும்.  இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 

இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன்,  இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. 

அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும்.  அப்போது மனம் தூய்மையாக இருக்கும்.  மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.

மனம் வெளுக்க மருந்து உண்டு:

வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.

எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.  அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள்.  பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும். 

மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்.

-

I want to share my grievances with someone. How to solve this?


என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


பதில்:

உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய கேள்விதான். என்றாலும் கூட இதை தீர்க்க எளியவழி உண்டு. உங்களின் வயது சொல்லவில்லை, எனினும் எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. பருவ வயதினரும், நடுத்தர வயதினரும், வயது முதிந்தோர்க்கும் என்றவகையில், அவரவர்களுக்கான அளவில் மனக்குமறல்கள் உண்டு. முதலில் மனக்குமறல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். 

‘தான் நினைத்ததை, தான் விருப்பத்தை, தன்னுடைய நிலையை, தன்னுடைய திட்டத்தை, எதிர்பார்ப்பை சொல்லமுடியாமல், தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளுதல்’ என்பதுதான் மனக்குமறலாக நாம் கருதமுடிகிறது. இதன் அளவு அன்றாடம் கூடிக்கொண்டே போக, தன்னுடைய எந்தக்கருத்தும் செயல்படாது என்ற எண்ணமும் கூடி, மன அழுத்தம் அதிகமாகிவிடும். அந்த மன அழுத்தம், தான் வாழ்கின்ற வாழ்க்கையையே, அர்த்தமில்லாதாக மாற்றி, இனி ஒன்றுமில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது. அந்த நிலையில்தான், யாரிடமாவது இதை சொன்னாலாவது ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பிறரிடம் சொல்ல துடிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருமே இத்தகைய மன அழுத்தத்தில் இருப்பதால், ‘ஏற்கனவே என்கிட்ட நிறைய இருக்கு, நான் வேறே உன் மனக்குமறலை கேட்டு வாங்கிக்கனுமா?’ என்ற சிந்தனையில் தவிர்த்து விடுவார்கள். நகர்ந்துபோய்விடுவார்கள்.

இத்தகைய மன அழுத்தம் காரணமாகவே, போதைப்பொருட்களை நாடுவதும், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவிடும். பொது கவனத்தில் இருந்து விலகி, தனிமையும் கூடி, மன அழுத்தம் தாங்காமல், இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை என்ற அளவில், தற்கொலை முடிவுக்கும் வந்துவிடுவதுதான் சோகம்.

உண்மைத்தெளிவு வந்துவிட்டால், இதற்கெல்லாம் அவசியமில்லை. முக்கியமாக, ஒரு ஆறுதலாக யாராவது இருந்தால் நல்லது என்ற நிலை சிறப்பு. ஆனால் அது யார்? இந்த கேள்வி உங்கள் முன் நின்றால், நீங்கள் உங்கள் குருவை தேர்ந்தெடுங்கள். நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நம்முடைய குரு மட்டுமே என்பது உறுதியான உண்மை. யோகத்தில் இருக்கின்ற நமக்கு, குருவின் அக்கறையும், அணுசரனையும் உண்டு. எனவே மிக எளிமையாக, உங்களுக்கு ஆறுதல் தர குரு தயாராக இருக்கிறார்.

எப்போதுமே, உங்களுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை கேட்கத்தான் வெளியிலே யாருமே தயாராக இல்லையே?! அதனால் குருவை மட்டுமே நாடுங்கள். தினமும் தவம் செய்து, அகத்தாய்வின் வழியாக, தற்சோதனையில் உங்களை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் மனக்குமறல்களை பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிடாமல் எழுதுங்கள். ஒருவாரம், பத்து நாட்கள், ஒருமாதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே கொட்டி, பட்டியலில் கொண்டுவாருங்கள்.

மீண்டும் தவமும் அகத்தாய்வும் செய்து, எதனால்? ஏன்? எப்படி இதை கடக்கலாம்? அவசியமானதா? அவசியமற்றதா? விட்டு விலகவேண்டியாதா? என்று கேள்விகள் கேட்டு பகுதி பகுதியாக பிரித்து அலசுங்கள். உண்மை விளக்கம் பெறுங்கள். உங்கள் குரு, ஆசிரியரிடம் தொடர்பில் இருங்கள். அவர்களின் ஆலோசனையை கேட்டு மாற்றம் பெறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். மன உறுதியோடு, இன்றே இந்த மாற்றத்தை துவங்கி வெற்றி காணுங்கள்.

வாழ்க வளமுடன்

-

Why no mind peace when we worship in temple too? What can be done?


மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


பதில்:

இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை.  என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.

உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.

எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.

அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.

மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.

வாழ்க வளமுடன்.

-

Why have a depression? Any best solution for it?


மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?

பதில்:

நாம் இந்த உலகில், மனதின் வழியாகவே வாழ்கிறோம். உலக இன்ப துன்பம் அடங்கிய எல்லாவற்றிற்கும் வாசல், நம்முடைய மனமே. நாம் வெளியே போவதற்கும், நமக்குள் ஏதேனும் வருவதற்கும் மனமே வாசலாக இருக்கிறது. நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில், ஒவ்வொரு நாளும், உலக முன்னேற்றமும் புதிதுபுதிதாக வந்துகொண்டே, வளர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, நாம் எப்போதும் ஒரே நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதும் உண்மை. 

ஒரு தலைமுறை என்று எடுத்துக்கொண்டாலும் அது தொடர்கிறது. சராசரியான பார்வைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானல், தாத்தாவுக்கு அப்பா திறமைசாலி, அப்பாவுக்கு மகன் திறமைசாலி, மகனுக்கு பேரன் திறமைசாலி, பேரனுக்கு அவனுடைய மகன் திறமைசாலி என்று தொடராக மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மனிதனும், அவனுடைய மனமும் அப்படியேதான் இருக்கிறது. இது, இந்த நிலை மாறிட வேண்டும் என்றுதான், யோகம் உருவானது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தி துணையானது. இந்த இரண்டிலுமே பலப்பல பொய்கள் கலந்து, மனிதர்களுக்கு நீண்டகாலமாக, எளிதில் நெருங்க முடியாதபடி தூரமாகிவிட்டது.

எனினும் அவ்வப்பொழுது மகான்கள், ஞானிகள் தோன்றி, உருவாகி, மக்களுக்கான மாற்றத்தை, மனதிற்கான மாற்றத்தை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் நோக்கமும் அதுதான். உலக சமாதானம் என்ற திட்டத்தை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் ஓரே ஆட்சியில் அமைந்து, உலக மக்கள் நலவாழ்வுக்கு, திட்டத்தை தந்து அதை பலவாறாக தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர் எடுத்துக்கொடுத்த பணி இன்னும், நம்மைப்போன்ற வேதாத்திரியர்களால் தொடர்கிறது.

என்றாலும், இப்போது உங்களுக்கும், உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும், மனம் பாரமாக இருக்கிறதே?! அதை எப்படி சரி செய்வது? தீர்ப்பது? அதையும் யோசிக்கலாம். இந்த மன பாரம் என்பதை, இக்காலத்தில் மன நல மருத்துவர்கள், மன அழுத்தம் என்று சொல்லுகிறார்கள். பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல்வேறு நினைவுகளின் தாக்குதலும், அதை நினைத்து வருந்துவதும் இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தமும் இருக்கும் என்பதே உண்மை. இதை தீர்ப்பதற்கு, மன நல மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

மனதை இயல்பாக வைத்திருங்கள். நேற்று நடந்ததை, எப்போதோ முடிந்த ஒன்றை நினைக்காதீர்கள். மனதில் எழும் எண்ணங்களை பின்பற்றாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையில் இருக்காதீர்கள், பாடல், இசை, நாடகம், சினிமா என்று நேரத்தை திசை திருப்புங்கள், பிடித்ததை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு, சில சத்து மாத்திரைகளையும், தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளையும், தந்து அக்கறையோடு கவனிப்பார்கள். (பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறதே தவிர, மனநல மருத்துவர்களை குறை சொல்லுவதாக கருதவேண்டாம்)

வேதாத்திரியும், இப்படியான அறிவுரைகளும், மருந்துகளும் தருவதில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, மனதை புரிந்து கொள்க என்று, தவம் இயற்றச் சொல்லுகிறது.  மனதையும், அதில் எழுகின்ற எண்ணங்களையும் அறிந்து, புரிந்து, ஆராய்ச்சி செய்து, ஒழுங்குசெய்து கொள்ள அகத்தாய்வு எனும் பயிற்சியை தருகிறது. இந்த தற்சோதனை வழியாக, மனம் தன்னைத்தானே விரிந்து நோக்கிட வழி பிறக்கிறது, தேவையில்லாததை தானே திருத்திக்கொள்ள பழகுகிறது.

மேலும் எண்ணம் ஆராய்தலை முடித்து, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அடுத்த இரு நிலை பயிற்சிகளையும் தந்து, நான் யார்? என்று ஆராயவும் சொல்லுகிறது வேதாத்திரியம்.

உங்களுடைய மன பாரத்திற்கும், மன அழுத்தத்திற்கும் முழுமையான, தெளிவான, சிறப்பான மருந்து ‘வேதாத்திரிய அகத்தாய்வு எனும் தற்சோதனை’ எனும் பயிற்சிதான் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்.
-

How do I know that I have made progress in my penance?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய தவத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை எப்படி அறிவது?!


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கை என்ற வரிசையில், முதலில் தவம் இருக்கவேண்டியது முக்கியம். ஒரு நாளை தொடங்கினால் அதில் தவம் இல்லை என்பதற்கே இடமில்லை. தவம் செய்து முடிக்காமல், அந்த நாள் தொடராது என்ற முடிவில் நீங்கள் இருக்கவேண்டும். அந்த நிலைக்கு இயல்பாக நீங்கள் வர வேண்டும். கட்டாயத்திற்காகவோ, சூழலுக்காகவோ, யாரோ ஒருவருடைய வற்புறுத்தலுக்காகவோ செய்யக்கூடாது. முக்கியமாக அவசர நோக்கமும் கூடாதுதான். வழக்கமான கடமையாக அதை ஏற்று, இயல்பாக செய்துமுடிக்க பழக்கிக்கொள்வதே சிறப்பாகும். இதுதான் உங்களுடைய தவ பயணத்தில் சிறப்பான முதல் முன்னேற்றமாகும்.

இன்றைக்கு தவம் செய்யாமல் விட்டுவிட்டேனே என்ற வருத்தம் ஏற்படும்படியான கடமையும், ஆர்வமும் இருத்தல் நன்று. ஒரு பொதுவான, இயற்கையான முன்னேற்றம் என்பதை, அடையாளமிட்டு சொல்ல முடிந்தால், உங்களுக்குள் ஒரு உற்சாகம் எப்போதும் இருப்பதை உணரலாம். இதன் காரணம் என்னவென்றால், வழக்கமாக, அதாவது, தவம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, பலவிதங்களில் பலவித எண்ணங்கள் வழியாக அலைபாய்ந்து கொண்டே இருந்த மனம், கொஞ்சமாவது அமைதியாக இருப்பதை உணரலாம். இந்த நிலை, உங்களுக்கு கிடைத்த இரண்டாவது முன்னேற்றம் என்று சொல்லலாம்.

இது எப்படி அமைகிறது என்றால், தவத்தின் வழியாக மனம், சிறிது சிறிதாக தன் விரிந்த இயக்கத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருந்த இயக்கத்தில் இருந்தும் ஒடுங்குகிறது. அதன் வழியாக உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கிறது எனலாம். இந்த இரண்டு முன்னேற்றங்களை நீங்கள் உறுதி செய்துகொண்டால், அதற்குப்பிறகு நானோ, வேறு யாரோ எடுத்துச் சொல்லும் முன்பாகவே, நீங்களே அந்த முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் உங்களால், இந்த இரண்டு முன்னேற்றங்களையும் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் மாற்றுவழி கண்டாகவேண்டும். தினமும் ஒருவேளை தவம், வாய்ப்பு இருந்தால் காலையும் மாலையும் தவம் என்பதை தொடர்வேண்டும். வாரம் ஒருநாள் அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவர வேண்டும். இதனோடு, வழக்கமான தினசரி எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்ப யோகபயிற்சியும் செய்துவந்தால், உங்கள் தவம் நன்கு சிறக்க உதவிடும். ஏனென்றால், நன்கு தவம் முழுவதும், இயல்பாக உட்கார்ந்து தவம் செய்யவும், நல்ல உணர்வு கிடைக்கவும் துணையாக இருக்கும். மேலும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் வேதாத்திரிய ஆசிரியரோடு கலந்துரையாடுங்கள். 

வாழ்க வளமுடன்.

Why I can't understand my mind itself? Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனதை என்னாலேயே ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? உதவுங்கள்!


பதில்:

உங்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை விடவும், இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். உதராணமாக சொல்லுவதென்றால், ஒரு இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். அது புத்தம் புதிது. அதற்கென்று ஒரு அமைப்பு, இயக்கம், வேகம் உண்டு. அது அந்த தயாரிப்பு நிறுவனமே தெளிவுபடுத்திவிடும். அதற்கென்று தனி கையேடு நூலும் தந்து விளக்கம் தந்துவிடும். ஆனால் நாம் படிக்கிறோமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. நான் காசு கொடுத்து வாங்கிய வாகனம், என்சொல்படிதான் கேட்க வேண்டும் என்பது சரியாகுமா? அந்த வாகனத்துக்குத் தகுந்தபடி நாம் கற்று நம்மை மாற்றிக்கொள்ளுதல் சரியாகுமா?

உங்கள் மனம் உங்களுடையதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை எப்படி இதுநாள் வரை பயன்படுத்தி வந்தீர்கள் என்பதுதான் சந்தேகமும் பிரச்சனையும். ஆனால் அற்புதமாக, வேதாத்திரிய யோகத்தில் இணைந்துவிட்டீர்கள் அல்லவா? அதுவே மிகப்பெரிய விளக்கம் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே கொஞ்சம் தாமதமாகவே மனதை புரிந்துகொள்ள முயற்சித்தாலும் கூட தவறில்லை. இதுவரை மனம் பலதரப்பட்ட கணக்கீடுகளை தன்வயப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் பல ஜென்ம வாசனையை மனம் புதைத்து வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவையும் உடனடியாக மாற்றவும், அவ்வளவு நுண்ணிய / பிரமாண்டமான மனதை புரிந்துகொள்வதும் உடனடியாக சாத்தியமானதா என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

எனவே, உங்கள் மனதை, உங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தவேண்டாம். இனியாவது புரிந்துகொள்ள முயற்சிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். மனதில் எழும் எண்ணங்களில் கவனமும், விழிப்பும் கொள்க. ஆக்கினை தவமும், துரிய தவமும் நன்கு தொடர்ந்து செய்துவருக. மேலும் அகத்தாய்வு எனும் தற்சோதனையை தினமும் ஒரு மணி நேரம் செய்துவாருங்கள்.  மூன்று மாதத்திற்குள்ளாக, நீங்கள் உங்கள் மனதை ஓரளவிற்காவது புரிந்துகொள்ளமுடியும். இன்றே பயிற்சியாக தொடங்கிவிடுங்களேன்!

வாழ்க வளமுடன்.

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

Why always mislead with Karma? Being with positive is good in life! Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதானே? அப்போது ஏன் கர்மா குறித்து அடிக்கடி சொல்லி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள்?


பதில்:

ஆங்கிலத்தில் Positive x Negative என்பதை ‘மெய்மை x பொய்மை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யாரோ, நேர்மறை x எதிர்மறை என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். இனி அதை மாற்றிடவும் வழியில்லை. இனி உங்கள் கேள்விக்கு வரலாம், வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது நீங்களே அனுபவித்தீர்களா? என்பதையும் சொல்லி விடுங்கள்.

தான் எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு, அதாவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு, அதன்படி வாழ்வதாக இருந்தால், உங்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும், மற்றவர்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம் ஆகிறது. இதில் கிடைப்பது, நடப்பது எல்லாமே ‘இன்னும் வேண்டும்’ என்ற நிலையில்தான் இருக்கும். அதாவது பற்றாக்குறை என்ற அளவில்தான் இருக்கும். எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் இன்னும் வேண்டும் என்ற தேவை அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை. ஏனென்றால் இங்கே முழுமையற்ற நிலைதான் நிகழ்கிறது, கிடைக்கிறது எனலாம்.

ஆனால் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து, மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். அது அவர்களின் வழக்கம். உங்களை பயமுறுத்தி அதன்வழியாக தங்களை நிலைநிறுத்திட முயற்சிக்கிறார்கள். நாம், வேதாத்திரியத்தில், கர்மா என்ற வினைப்பதிவு குறித்து விளக்கம் மட்டுமே தருகிறோம். புரிந்து கொண்டு, உங்களின் எண்ணம், சொல், செயல் வழியாக திருத்தம் பெறுக என்றுதான் வழிகாட்டுகிறோம். ஆனால் வேதாத்திரியமும் பத்தோடு பதினொன்று என்பதாக நீங்கள் நினைத்து ஒதுக்குகிறீர்கள். நல்லது அது உங்கள் உரிமையும், விருப்பமும் ஆகும்.

வாழ்கின்ற மனிதன், தனக்குள்ளாக, ஏற்கனவே வாழ்ந்த அவனின் முன்னோர்களின் வினைப்பதிவுகளை பெற்றிருக்கிறான். அவனின் எண்ணம், சொல், செயலில் அது விளைவாக வருகிறது. அது ஏன் எனக்கு வருகிறது? என்று கேட்கமுடியாது. காரணம், மனிதன் தனியாக உருவாகி, வந்துவிடவில்லை அல்லவா? இதை, இந்த வினைப்பதிவுகளை மிகச்சாதாரணமாக, நேர்மறை எண்ணம் கொண்ட வாழ்வால் மாற்றிவிட, தீர்த்துவிட முடியாது என்பதே உண்மை. முதலில் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்தான உண்மை விளக்கங்களை பெற்றுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்,

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன். 

How many meditation can practice per day and which one is best?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்? எந்த தவம் அதிகம் செய்யவேண்டும்? அது எப்படி உதவும் என்று சொல்லுங்கள்!


பதில்:

ஒரே மூச்சாக மூன்று கேள்விகளை அடுக்கி வீட்டீர்கள். நல்லதுதான். மனவளக்கலை வழியாக கற்றுக்கொண்ட தவங்கள் அனைத்துமே தொடர்ந்து செய்து வரலாம். எனினும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், காலை, நண்பகல், மாலை என்று மூன்று நேர தவம் போதுமானது. இரவு நேரம் / படுக்கைக்கு முன்னதாக தவம் என்பதை ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யத்தேவையில்லை.

பிரம்மஞானி / அகத்தாய்வு நிலைகள் முடித்தவர்கள் / அருள்நிதி / ஆசிரியர்கள் இரவில் தவம் செய்யலாம். அதுவும் ஆராய்ச்சி அடிப்படையில் துரியதவம் மிகச் சரியானது. துரியாதீதம் என்ற உயர்நிலை தவம் இரவில் செய்வதை தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்து. மற்றபடி பொதுவாகவே துரியதவம் எல்லோருக்குமே அற்புதமானது. துரியதவம் நன்கு ஆழ்ந்து கற்றுத்தேர்வது உதவும், துரியாதீத நிலைக்கு தானாகவே அது உங்களை உயர்த்திதரும் என்பதும் உண்மை.

அதுப்போல தவ ஆற்றல் கூடினால் சாந்திதவம் கட்டாயமாக செய்தாக வேண்டும். அதற்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவும் அவசியமில்லை. 

ஆரம்பகாலத்தில் ஆக்கினையில் நல்ல தேர்ச்சியும், பிறகு துரியத்தில் நல்ல தேர்ச்சியும் இருந்தால்தான், துரியாதீதத்தின் பயன்களை நன்கு பெறவும் முடியும்.

அதுபோலவே இறைநிலைதவமும் மிகசிறப்பு வாய்ந்தது. மற்றபடி, நித்யானந்த தவம் தினமும் செய்துவரலாம். வேறுபல சிறப்பு தவமும் செய்துவரலாம். ஆனாலும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், அடிக்கடி தவம் செய்வதில் ஆர்வம் வந்தாலும் தவிர்ப்பது நல்லது, மூன்று தவம் போதுமானதே. இதில் கூட்டுத்தவம் கணக்கில் சேர்க்கவில்லை.

வாழ்க வளமுடன்.