How to deal with cheaters in our everyday life?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, முதுகில் குத்துபவர்களையும், காலைவாரி விடுபவர்களையும் எப்படி சமாளிப்பது?
பதில்:
யோகத்தின் பாதையில் செல்லுகிறவர்களுக்கும் இப்படியான சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். ஏனென்றால் ஏதேனும் ஒருவகையில், நாம் உலகில்போக்கில் போகத்தானே வேண்டியுள்ளது. அந்த வகையில், நாம் என்றோ செய்த ஒரு தவறு, அதாவது நமக்கு சரியாக இருந்து பிறருக்கு அதில் விளைந்த துன்பம் என்றும் புரிந்துகொள்ளலாம். நான் அப்படி எதுவுமே செய்யவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் கூட, உங்கள் தாய், தந்தையரோ, அவர்களுக்கு முன்னோர்களோ செய்திருக்கலாம். அது உங்கள் வழியாக தீர்க்கவும் இப்படியாக நிகழலாம். இதுவெல்லாம் காலத்தின் கணக்கு என்பதால் நாம் ஏதும் முன்கூட்டி அறியவோ, தீர்க்கவோ முடியாது. அதை ஏற்று அனுபவித்தே தீர்க்க முடியும்!
முக்கியமாக இந்த புரிதல் வந்துவிட்டால், நாம் எந்தவகையிலும் நம்மை வருத்திக் கொள்ளாமல், இந்த அளவில் என்னுடைய வினைப்பயன் ஒன்று கழிந்துவிடுகிறது, என்ற நினைவில் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி அதை கடந்துவிடலாம். நடந்ததை எண்ணியும், இப்படியாகிவிட்டதே என்ற மன வருத்தமும் ஏற்படுத்த தேவையில்லை. அந்த நபர்களை நினைத்து திட்டவோ, சாபமிடவோ, பழிவாங்கிடவோ தேவையும் இல்லை. நல்ல புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால் அவர்களை வாழ்த்திடவும் செய்யலாம்.
உங்கள் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், இனிமேலும் நிகழாத விழிப்புணர்வோடு நீங்கள் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், உடனடியா தொடர்புடைய அந்த நபரிடம், விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு அவரால் வேறெதும் துன்பம் நிகழாமல் செய்துவிடலாம். குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல ‘விளைவறிந்த விழிப்புநிலை’ என்ற அளவில் உங்கள் கடமைகளை, வேலைகளை, தொழிலை, வியாபாரத்தை செய்துவாருங்கள். நன்மை அடைக!
வாழ்க வளமுடன்.
-