Why some of my problems has not a solution? How to fix it?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?
பதில்:
நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.
இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.
அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.
இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.
இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.
வாழ்க வளமுடன்.