What is your reply someone corner you on your past post?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் ஜோதிடர் என்றால் அதை பார்க்க வேண்டியதுதானே? எதற்காக வேதாத்திரியத்தை அதனோடு இணைக்கிறீர்கள்? மகரிஷி ஜாதகம் குறித்து தனியாக சொல்லியிருக்கிறாரா? இல்லையே, அதற்குத்தான் நவக்கிரக தவம் இருக்கிறதே? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்த அன்பருக்கு உங்கள் பதில் என்ன?
பதில்:
ஆம், கடந்த என்னுடை சோதிட ஆராய்ச்சி பதிவில் அப்படியான பின்னூட்ட கேள்வி வந்தது. கேள்வி கேட்ட அந்த அன்பர், பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் என்பதும் அறிந்து கொண்டேன். மேலும் அவர் பக்தி மார்க்கத்தில் செல்லுபவராகவும் இருக்கிறார். ஒரு வேகமான, தன்முனைப்பான நபர் என்பதும் தெரியவருகிறது. சரி இப்பொழுது கேள்விக்கு வரலாம்.
இந்த அன்பர், வேதாத்திரியத்தில் இருக்கிறாரா? வந்து விலகிவிட்டாரா? தொடர்கிறாரா? என்பது தெரியவே இல்லை. இதுவரை நம்முடைய வேதாத்திரிய யோகா காணொளி தளத்தில் என்னென்ன பதிவுகள் கண்டார்? விளங்கிக் கொண்டார்? கருத்து விளக்கம் தருபவர் யார்? அவர் பின்னணி என்ன? இதுவரை அவர் குறித்து புரிந்து கொண்டது என்ன? இந்த சேவை ஏற்கனவே கொடுத்திருக்கிறாரா? எத்தனை ஆண்டுகளாக இந்த காணொளி தளத்தை நடத்திவருகிறார்? என்றெல்லாம் அவர் தெரிந்து கொண்டாரா என்பதும் அறியமுடியவில்லை. இதற்கு முன்பாக அந்த பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் பின்னூட்டம் இட்டதாகவும் அறியமுடியவில்லை.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி, கிரகங்கள் கோள்கள் என்பன குறித்து நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். அவைகளின் காந்த அலை இயக்கம், கோள்களின் அன்மை, சேய்மை தூரம், அவற்றின் இரசாயன இயக்க, மன இயக்க தூண்டுதல் என்றும் விளக்கி இருக்கிறார். ஜாதகம் எப்படி கணிக்கிறார்கள், அதில் இருக்கிற உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லியுள்ளார். அதில் போலியான கருத்துக்கள் உள்ளதை சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளார். பஞ்சபூத நவக்கிர தவ தத்துவ விளக்கம் கேட்டோர் சில உண்மைகளை அறியமுடியும்.
முக்கியமாக, என் 18 வயதிலேயே வேதாத்திரிய தீட்சை பெற்று 21 வயதில் அருள்நிதி பட்டத்தை வேதாத்திரி மகரிஷியின் கைகளால் பெற்றுக்கொண்டவன். அதற்குப் பிறகு ஆர்வத்தின் வழியாக, ஜோதிடம் பட்டய வகுப்பில் கற்றுத்தேர்ந்தவன். ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை. மேலும் என்னுடைய இந்த சோதிட ஆராய்ச்சி, வருங்காலம் குறித்த தகவல்களை தருவதல்ல. ஏற்கனவே இருக்கிற, கர்மா என்ற வினைப்பதிவுகள் குறித்தான ஒரு ஆய்வு. அதை எப்படி வேதாத்திரிய வழியில், தவமும் தற்சோதனை அகத்தாய்வும் கொண்டு தீர்க்கலாம்? என்ற ஒரு விளக்கமே ஆகும். இதை நான் சும்மா பிறருக்கு தரமுடியுமா? அதற்காக சேவை கட்டணம் சொன்னேன். அதையும் கிண்டலடித்து விட்டார்கள். இவர்கள் விரித்திருக்கின்ற கைகளில் எவ்வளவு சும்மா கொடுத்தாலும் பத்தாது என்று என் நண்பர் சொல்லுவார். அது உண்மையே!
முக்கியமாக, பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் நபர், அது போன்ற கருத்து பின்னூட்டம் போடுகின்ற பலர், பகல் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று வாதிடுகிறார்கள். இருக்கிறது ஐயா, அது சூரியனின் ஒளியில் மறைந்திருக்கிறது என்று நான் சொன்னால், அவர்கள் ‘அப்போ நான் என்ன குருடா? என் கண்ணால் பார்ப்பது பொய்யா? நான் நிஜமாக பார்ப்பதை சொல்லுகிறேனே?! அதை நீ ஏற்காமல், நீ சொன்னால் மட்டும் நான் ஏற்றுக்கொள்வேனா? அவ்வளோ பெரிய முட்டாளா நான்?’ என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளை புரியவைப்பது?! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
இந்த கேள்வி பதிலுக்குக் கூட, ‘நான் அப்படியெல்லாம் இல்லை, நீதான் குழப்புகிறாய்’ என்றும் பின்னூட்டம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன்.