What is the part of yoga in earing money for life? is it there or not?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு என்ன? அப்படி உள்ளதா இல்லையா?
பதில்:
உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!
பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!
இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!
யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.
வாழ்க வளமுடன்.
-