Why is difficult as following the Vethathiriyam? Only easy to Maharishi.
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தை கடைபிடிக்க கடினமாக இருக்கிறது. மகரிஷி தனியாள் என்பதால் அவருக்கு சுலபம் தானே?!
பதில்:
இப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தவிதமான கேள்வியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மூலமாக எதிர்கொண்டுள்ளார். அதை அவரே சொல்லியும் உள்ளார் என்பதுதான் சிறப்பு. ஒரு தத்துவ விளக்கம், வெளிநாட்டில் நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒருவர், உங்கள் கேள்வி போலவே கேட்டுள்ளார்.
‘சுவாமிஜி, நீங்கள் ஒரு துறவி. அதனால் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது உங்களுக்கு சுலபமானது. ஆனால் நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்கு மிக கடினம், முடியாததும் கூட’ என்று கேட்கிறார்.
‘நான் துறவி என்று சொல்லவில்லையே, நீங்கள் நினைப்பதுபோல் நான் துறவியும் அல்ல. நானும் உங்களைப்போல இல்லறத்தில் வாழ்ந்து நிறைவு கண்டு, பிறகு யோகத்தில் என்னை இணைத்துக்கொண்டு பயணிக்கிறேன். மேலும் ஒன்று அல்ல இரண்டு மனைவிகள்’ என்று மகரிஷி பதில் தந்திருக்கிறார்.
இப்போது கேள்வி கேட்டவர் எப்படியான வியப்புக்கு உள்ளாவார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மேலும் நான் விளக்கமாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.
சரி, நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா? நீங்கள் வேதாத்திரியத்தை இதற்கு மேலும் தொடரவேண்டாம். சற்று நிறுத்தி வைத்துவிடுங்கள்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய, என் வாழ்க்கை விளக்கம் என்ற தலைப்பிலான நூலை வாங்கி படியுங்கள். முழுவதும் படித்து முடித்துவிட்டு, இரண்டு மூன்று நாள் சிந்தனை செய்யுங்கள். இந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியமும், நான் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளும் தேவைதானா? இதை தொடரலாமா? விட்டுவிடலாமா? வேறு என்ன செய்யலாம்? என்று கேள்விகள் கேட்டு அதற்குறிய பதிலை தேடுங்கள். என்னிடமோ, வேறு யாரிடமோ ஆலோசனை கேட்காதீர்கள். உங்களுக்குள்ளாக என்ன பதில் விளக்கம் வருகிறதோ அதை கடைபிடியுங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் அது ‘உங்களுக்கு நல்லதே’ ஆகும்!
வாழ்க வளமுடன்.