CJ for You: spiritual and bhakti

spiritual and bhakti

Showing posts with label spiritual and bhakti. Show all posts
Showing posts with label spiritual and bhakti. Show all posts

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

Who are Siddhars? Why is it that only Tamil Siddhas are spoken of? Are there still Siddhas? How useful is their support to us? Will you explain?


வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?



இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.

இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.

தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள். 

சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
 
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
வாழ்க வளமுடன்.
-

Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi


கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?


கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?

பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.

பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.

இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.

மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.

எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.

விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.

இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.

கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,

   கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!

கட -  உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,

   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;

கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக் 

   கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!

கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.

   கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.

மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-