CJ for You: enlighten

enlighten

Showing posts with label enlighten. Show all posts
Showing posts with label enlighten. Show all posts

Can we get everything we ask for through this Law of Attraction? Everyone says they won. But nothing happened to me? How long do you have to be confident? I came to know that Guru Vethathiri Maharshi has said a similar concept and method in Vethathriya also. Is that really the truth?


வாழ்க வளமுடன் ஐயா. இந்த Law of Attraction என்பதை சொல்லும் சீக்ரெட் நூல் வழியாக, நாம் கேட்பதை எல்லாமே பெறமுடியுமா? எல்லோருமே வெற்றி பெற்றதாக சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லையே? எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்? வேதாத்திரியாவிலும் இதுபோன்ற ஒரு கருத்தை, வழிமுறையை, குரு வேதாத்திரி மகரிஷி சொல்லி இருப்பதாக அறிந்தேன். அது உண்மைதானா? அதுகுறித்து விளக்குவீர்களா?

The Secret என்ற நூல் சமீபமாக, (14 ஆண்டுகளாக) உலக மக்களிடையே பிரபலமாகிவிட்டது. பலருக்கும் இது குறித்த விசயங்கள், பேசு பொருளாகி பகிரப்படுகிறது. இது திரைப்படமாகவும், நூலாகவும், கட்டுரையாகவும், ஒலி நூலாகவும் இணையத்திலும் கிடைக்கிறது. நானும் கூட அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாமே! என்று கவனித்தேன். ஆனால் முழுமையாக பார்க்க, படிக்க வாய்ப்பு அமையவில்லை. என்னுடைய சில நண்பர்கள்கூட, அதில் சில உண்மைகள் இருக்கிறது, உதவும், என்று சொல்லி படிக்க சொன்னார்கள். ஏனோ அது ஆர்வத்தை தூண்டவில்லை.


வேதாத்திரிய யோகத்தின் நல்விளக்கம், ஒருவர் பெற்றபின்பு, அவருக்கு வித்தியாசப்பார்வை இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லாவகையான வேதாத்திரியம் அல்லாத கருத்துக்களிலும், அக்கருத்து சொல்லவருவது எது? என்ற உண்மை, அவருக்கு புலப்பட்டுவிடும். இதற்கு உதாரணமாக, இனிப்பு பண்டங்கள் பலப்பல வகையான பெயர்களில், வடிவங்களில், நறுமணங்களில் இருந்தாலும், அவை எல்லாமே, சர்க்கரை இனிப்பு என்ற ரசாயன தன்மையை மட்டுமேதான் பெற்றிருக்கின்ற என்ற அடிப்படை கருத்தில், ஒன்றிணைப்பதைப் போலவே ஆகும்.

எனினும், உங்களுக்காக, உங்கள் கேள்விக்காக, The secret, The power என்ற அந்த நூலை படித்தேன். ரூண்டா பைரன் என்ற பெண்மணி, தன் அனுபவங்களின் அடிப்படையில், அதுபோலவே சிந்தித்து அனுபவம் பெற்ற நபர்களை சந்தித்து, அவற்றை தொகுத்து, திரைப்படமாகவும், நூலாகவும் தந்திருக்கிறார். அதில் சில உண்மைகள் பொதிந்திருக்கிறது. எனினும், அது உலகாதாய விசாரணையாகவே இருக்கிறது. பொருள்முதல்வாத உலகியலில், மனிதனின் தேவைகள் மற்றும் மனம் குறித்து விளக்கினாலும், அங்கே அதற்கான பொது தன்மையில் மட்டுமே விபரம் கிடைக்கிறது. சில ஆன்மீகம் கலப்பு இருந்தாலும், யோகமாகவில்லை. எனினும், சாராசரி மனிதருக்கு தேவையான கருத்துகள் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கேள் கிடைக்கும் என்ற ரீதியில் இருப்பதும், நீங்களே மகத்துவமானவர், ஈர்ப்பு விதி உங்களிடமே இருக்கிறது, செயல்படுகிறது என்பதும், நன்றியுணர்வோடு இருப்பதும், நேர்மறை எண்ணங்களோடு இருப்பதும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனியாக எதிர்க்கருத்து எனக்கில்லை. எனவே, என்னிடம் விளக்கம் எதிர்பார்ப்பதைவிடவும், நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு கலந்துரையாடி, உண்மை அனுபவத்தை தெரிந்து கொண்டு, உங்களுக்கான வழியை பெற்றுக்கொள்ளுங்கள். பொதுவாகவே, எதுவும் நடக்கவில்லையே? என்ற கருத்துக்கு உடனடியாக வந்துவிடவும் கூடாது. நம்பிக்கை இழக்கவும் கூடாது.

வேதாத்திரியத்தில், இறை என்ற பேராற்றலிடம், கேட்டுப்பெற மனிதனுக்கு தகுதி உண்டு என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இந்த பேராற்றலே, பிரபஞ்ச சக்தி, டோட்டாலிட்டி என்று சீக்ரெட் நூலில் குறிப்பிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் ஆனால், ஏற்கனவே கேட்டுவைத்த வரிசைப்படியேதான் நடக்கும் என்பதையும் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும், உன்னை தகுதியாக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறார். அதையேதான், Fraction demand Totality supplied என்றும் சொல்லுகிறார். தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவே, அருட்காப்பும், சங்கல்பமும் தந்திருக்கிறார். அதன் விளக்கத்தை, தன் சொற்பொழிவிலும், கட்டுரைகளிலும், கவிகளிலும், என் வாழ்க்கை விளக்கத்திலும் தந்திருக்கிறார்.

இதனோடு, சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் என்பதையும், நமக்கு தந்திருக்கிறார். அதன் உண்மைகளையும் நமக்கு விளக்கியிருக்கிறார். யோகத்தில் நம்மை, நான் யார்? என்று உணர்ந்தறிவது, நம்முடைய பிறப்பின், நோக்கமும் கடமையும் ஆகும். அதனோடு, அந்த ஆராய்ச்சி பயணத்தோடு, உலக வாழ்க்கையும் முக்கியம், குடும்ப கடமையும், சமூக கடமையும் முக்கியம் அல்லவா? வேதாத்திரியம் இதை வலியுறுத்துகிறது. அந்தக்காலம் போல விட்டுவிட்டு செல்வது பொருந்தாது என்றும் சொல்லுகிறது. எனினும் வேதாத்திரிய கருத்துக்கள் தனித்துவமானவை. இவற்றை, The secret, The power, law of attraction என்பதை விளக்கும் நூலின் கருத்தோடு ஒப்பிட முடியாது.

மேலும் சில உண்மை விளக்கமறிய, இந்த காணொளி உதவிடும்.

பிரபஞ்ச அறிவு என்பது என்ன? அதனோடு இணைந்து கொள்வது எப்படி ? உண்மை விளக்கம் Universal Conscious, Human

வாழ்க வளமுடன்

Since everything is against nature, how can it be considered good?


மனிதன் யோகத்தில் இருந்தாலும் கூட, செய்வது எல்லாமே இயற்கையை எதிர்த்துத்தான் என்றே அமைகிறது என்பதால் அதை எப்படி நல்லதாக நினைத்துக்கொள்ள முடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனித மனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே? விளக்க வேண்டுகிறேன்?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா? என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் பஞ்சபூதங்களையும் ஒரு குறிப்பட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அத்தகையவர்கள் இறங்குவார்களா? என்பதை ஒருவர் மிக நுணுகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவளக்கலையில் தேர்ந்த அன்பர் ஒர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்ததாக எவ்வாறு நம்புவது? என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துப்போவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப்போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், தூரம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம்: மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும்? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறருக்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்கிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்தை உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்தும் போகலாம். இதனால் மருத்துவருக்கு வலுவில்லை என்று கொள்ளமுடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ, சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும், இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

வாழ்க வளமுடன்

-

How can fix fake people in the spiritual and yoga?


ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?

பதில்:
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், இந்தக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள்தான். நெல் விதைத்தால் நெல்லும் விளையும், புல்லும் விளையும், களையும் விளையும் என்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தெரியும். விளைச்சல் காலத்தின் முடிவில், களைகள் அவ்வப்பொழுது களைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. விவசாயிக்கு என்ன தேவையோ அதை அவன் எடுத்துக் கொள்கிறான். நெற்கதிரை அறுத்து, அடித்து, நெல்லை பிரித்து, தனித்து வைத்துக் கொள்கிறான். நெல்லில் இருந்து அரிசி நமக்கு உணவாகிறாது. நெல்லின் உதிரிகள் பறவைகளுக்கு உணவாகிறது. கதிர்கள் விலங்கினங்களுக்கு உணவாகிறது.

அதுபோலவே இந்த உலகில், மனிதன் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வாழ்வில் தேவைகளும் நிறைய இருக்கின்றன. ஒரு தன் உடல்பலம், வலிமை, இவற்றைக்கொண்டு உழைக்கிறார், பலன் பெறுகிறார். சிலர் அதன் அறிவை பயன்படுத்தி, அதன் வழியாக நன்மை பெறுகிறார். இன்னும் சிலர், இவர்கள் செய்வதைப்போல செய்து, அவர்களைப்போல நடித்து, அவர்களைச் சார்ந்து, அவர்களை ஏமாற்றி பிழைக்க தயாராகிறார்.

நமக்கு என்ன தேவை என்றால், யார் உண்மையானவர்? என்று ஆராய்ந்து, பிறகு அந்த நட்பை, பலனை பெறுவதுதான் முக்கியம். சிலவேளை நடிப்பு, உண்மையை விட உயர்ந்ததாகவும் இருக்கும். அந்த ஏமாற்று வித்தையை நாம் அடையாளம் கண்டுகொள்ள பழகவேண்டும்.

இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டாலும், நாம் அவரை திருத்தவோ, தண்டணை வழங்கவோ, பெற்றுத்தரவோ அவசியமில்லை. நாம் அந்த நபரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டால் போதுமானது. திருத்தத்தை காலம் பார்த்துக்கொள்ளும் என்பதால் நாம் வருந்தவேண்டியதில்லை. நீங்கள் அவரிடம் சிக்கி வருந்தாமல் கவனமாக இருந்தால் போதுமே.

இப்படி ஒவ்வொருவரும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், போலியான நபர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு விலகிவிடவேண்டும். அவர்களை அடையாளம் காண பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய அறிவு அவர்கள் வசம் சிக்கிவிடக்கூடாது. உங்களிடம் இருக்கும் பெரும் பொருள், பெரும் பணம் சிக்கிவிடக்கூடாது.

ஆனால், உண்மையானவரையும் போலி என்று கருதிவிடாத, ஒதுக்கித் தள்ளிவிடாது, ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு வேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-

How to deal with cheaters in our everyday life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முதுகில் குத்துபவர்களையும், காலைவாரி விடுபவர்களையும் எப்படி சமாளிப்பது?


பதில்:

யோகத்தின் பாதையில் செல்லுகிறவர்களுக்கும் இப்படியான சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். ஏனென்றால் ஏதேனும் ஒருவகையில், நாம் உலகில்போக்கில் போகத்தானே வேண்டியுள்ளது. அந்த வகையில், நாம் என்றோ செய்த ஒரு தவறு, அதாவது நமக்கு சரியாக இருந்து பிறருக்கு அதில் விளைந்த துன்பம் என்றும் புரிந்துகொள்ளலாம். நான் அப்படி எதுவுமே செய்யவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் கூட, உங்கள் தாய், தந்தையரோ, அவர்களுக்கு முன்னோர்களோ செய்திருக்கலாம். அது உங்கள் வழியாக தீர்க்கவும் இப்படியாக நிகழலாம். இதுவெல்லாம் காலத்தின் கணக்கு என்பதால் நாம் ஏதும் முன்கூட்டி அறியவோ, தீர்க்கவோ முடியாது. அதை ஏற்று அனுபவித்தே தீர்க்க முடியும்!

முக்கியமாக இந்த புரிதல் வந்துவிட்டால், நாம் எந்தவகையிலும் நம்மை வருத்திக் கொள்ளாமல், இந்த அளவில் என்னுடைய வினைப்பயன் ஒன்று கழிந்துவிடுகிறது, என்ற நினைவில் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி அதை கடந்துவிடலாம். நடந்ததை எண்ணியும், இப்படியாகிவிட்டதே என்ற மன வருத்தமும் ஏற்படுத்த தேவையில்லை. அந்த நபர்களை நினைத்து திட்டவோ, சாபமிடவோ, பழிவாங்கிடவோ தேவையும் இல்லை. நல்ல புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால் அவர்களை வாழ்த்திடவும் செய்யலாம்.

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், இனிமேலும் நிகழாத விழிப்புணர்வோடு நீங்கள் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், உடனடியா தொடர்புடைய அந்த நபரிடம், விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு அவரால் வேறெதும் துன்பம் நிகழாமல் செய்துவிடலாம். குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல ‘விளைவறிந்த விழிப்புநிலை’ என்ற அளவில் உங்கள் கடமைகளை, வேலைகளை, தொழிலை,  வியாபாரத்தை செய்துவாருங்கள். நன்மை அடைக!

வாழ்க வளமுடன்.

-