CJ for You

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 02


        வாழ்க வளமுடன். மனிதனாக இவ்வுலகில் பிறந்தவனுக்கு, வாழும்வரை உடல் சொந்தம், அந்த உடல் இருக்கும்வரைதான், அவனும் இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து மகிழவும் முடியும். இந்த உண்மையின்படி, மனிதன் என்பவன் உடலா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் தருவீர்கள். உடல் என்பது மனிதன் இல்லையானால், மனிதனாக இருக்கும் நீ யார்? என்ற கேள்வியை கேட்டால், அந்த கேள்வியை உங்களுக்குள்ளாக திருப்பிவிட்டு, நான் யார்? என்று கேட்க வேண்டும். அப்படி இந்த கேள்விக்கு பதில் அறியவேண்டுமானால், நீங்கள் யோகத்திற்கு வரவேண்டும்.

        நான் யார்? என்ற கேள்விக்கான பதில், எப்போது கிடைக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது. வேறு யாரும் கணித்து சொல்லவும் முடியாது. உங்களுக்கு தீட்சை வழங்கிடும், ஆசானும், குருவும் கூட, இதை சொல்லமுடியாது. உங்களை அந்த நிலைக்கு உயர்த்தித் தருவது அவர்களின் வேலை. விடையை, பயிற்சியாலும், முயற்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டுபிடிப்பது உங்களின் வேலைதான். சந்தேகமில்லை. இந்த பதில் கிடைக்கும் வரை, நீங்களும், உடலும் நலமாக இருக்கவேண்டுமே? அதற்கு உடலும் துணையாக இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல், நோக்கம் நிறைவேறாது.

        இந்த உண்மையை அறிந்த சித்தர்களும், ஞானியர்களும், குண்டலினி எனும் தீட்சைக்கு முன்னால், உடலை வளப்படுத்தி தக்கவைக்கும், பயிற்சிகளை கண்டறிந்தார்கள். அதுதான் உடற்பயிற்சியாகவும், யோக ஆசனங்களாகவும், காயகல்ப யோக கலையாகவும் மலர்ந்திருக்கிறது. அப்படியும் கூட, சிலருக்கு, வாழ்நாள் போதாமல் கவலைப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம், பதஞ்சலி முனிவர், அஷ்டாங்க யோகம் என்ற எட்டு படி நிலைகளாக அமைத்துத் தந்தார். இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், தாரணா, பிரத்தியாகாரா, தியானம், சமாதி ஆகினவே அந்த எட்டு படி நிலைகள் ஆகும்.

        இந்த இயமம், ஏற்கனவே இருக்கும் வழக்கங்களை விட்டொழிப்பது ஆகும். நியமம், புதிய வழங்கங்களை பற்றிக்கொள்வது ஆகும், இதன் பிறகுதான், உடலை, மனதை, உயிரை வலுப்படுத்தி, உரமூட்டும் ஆசனம் கிடைக்கிறது. வடமொழியில் ஆசனம் என்றால், தமிழில் அது உடற்பயிற்சிதான். அத்தகைய பயிற்சியே யோகத்தில் பலவாறாக வழங்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய அன்பர்களின் மேல், அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகளை கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, விளைவுகளுக்கு ஏற்றபடி மாற்றமும் செய்து கொண்டார். மேலும் புதிய முறைகளும் தந்தார்.

        வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஹோமியோபதி சிகிச்சை முறையில், மருத்துவர் என்பதால், அதற்கு ஏற்றபடியும், உடற்பயிற்சியை திருத்தி அமைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும், ஆன்மீக வகுப்பு காலங்களில், மக்களின் கலாச்சாரங்களையும், அதனோடு கலந்த உடற்பயிற்சிகளை அறிந்து, உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவான, எளியமுறை பயிற்சியாக, அதை வடிவமைத்தார். இந்த வகையில்தான், குண்டலினி யோகம் கற்கும் முன்பாக, உடலை வளப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைபாடுகளில்தான், உடற்பயிற்சி கட்டாயம் என்பதாக மாற்றம் பெற்றது. அதுவே இன்றும் தொடர்கிறது.

 வாழ்க வளமுடன். 

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 01


        வாழ்க வளமுடன். உலகில், அக்காலம் முதல் இக்காலம் வரை, பொதுவாகவே உடலை வளமாக்கும் வேலைகளும், ஆசனங்களும், உடலுக்கான பயிற்சிகளும் நடைமுறையில் இருந்தன. கால மாற்றத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது, மனிதனுக்கு நடைப்பயணம் என்பது கூட இல்லை, இதனால், உடல் தன் இயக்கங்களில் பெரும் மாற்றம் பெற்றுவிட்டது. வேலை, வியாபரம், தொழில் ஆகியன எல்லாமே, உட்கார்ந்து செய்யக்கூடிய நிலைக்கு மனிதவாழ்வு மாறிவிட்டது. எனினும் கடின உழைப்பாளிகள் இருப்பதை மறுக்க முடியாது. உடலுக்கு எப்போதும் அசைவுகள் தேவை.

ஏனென்றால், உடல் பஞ்சபூத தோற்றங்களால் ஆனது. மண் என்ற கெட்டிப்பொருள் உடலாகவும், உடல் உறுப்புகளாகவும். நீர் என்பது உடலெங்கும் ஓடும் ரத்தமாகவும், வெப்பம் என்பது, உடல் நடத்திட உதவும் மின்சாரமாகவும், காற்று என்பது உயிர்காற்றாகவும், சுவாசமாகவும், விண் என்பது மனிதனுக்கும், ஜீவன்களுக்கும் உயிராகவும் இருக்கிறது. இவை எல்லாமே அணுக்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. அணுக்கள் என்றாலே, எப்போதும், என்றும் இயக்கமும் இருக்கும். அந்த இயக்கங்களில், தடை ஏற்படாத நிலையில், பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.

முக்கியமாக, உடலாக நாம், நம்மை அறிகிறோம். அது நிலையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், உடல் செல்கள் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதியது உருவாகவும், பழையது உதிரவும் செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. உடலுக்குள் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் சீராக, ஓடிக்கொண்டே வருகிறது, இதனோடு உயிரோட்டமும், ஜீவகாந்தம் என்ற அலை இயக்கமும் ஓடுகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவைகளின் ஓட்டத்தில், எந்த தடை வந்தாலும், அங்கே வலி உண்டாகும். வலி தேக்கமுற்றால், அது நோயாக மாறிவிடும். நோய் உறுப்புக்களை சிதைக்கும்.

வலி, நோய், உறுப்புகளின் சிதைவு ஆகிய எல்லாமே, மனதையும், உயிரையும் தாக்கும். மருந்துகளால் சரி செய்யமுடியும் என்றாலும் கூட, பழைய நிலைமைக்கு கொண்டு வருவதிலும், திருத்தி அமைப்பதிலும் சிக்கல் உண்டு. இயந்திரங்கள் போல, மாற்று உறுப்புக்களும் உடனடியாக பொருந்துவதும் இல்லை. எனவே, மனிதன் வருமுன் காப்பதில், கவனமும், அக்கறையும் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உடலியக்கம் சுருங்கிவிட்ட இக்காலத்தில், உடற்பயிற்சி மிக முக்கிமானதாக அமைகிறது. உடல், மனம், உயிர் என்ற இணைப்பு சிறப்பாக இருந்தால்தான் வாழ்நாளும் நீடிக்கும்.

உடற்பயிற்சி என்பதை விட, குறிப்பிட்ட நேரம், நடந்தால் கூட நல்லதுதான் என்ற நிலைக்கு, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வெறுமனே நடப்பது மட்டும், முழுமையான உடல், உடல் உறுப்பு மாற்றங்களை, நலத்தை உருவாக்கி விடுவதில்லை. இதனால், உடலுக்கும், உடலுறுப்புக்கும், தனித்தனியான பயிற்சிகள் அவசியமாகிறது. பருவ வயதில் இருந்து, உடற்பயிற்சியை செய்துவர ஆரம்பித்தால், உடல், மன, உயிர் இயக்கம் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி. உடல் இல்லாமல் உணர்வு ஏது? இன்பங்கள் ஏது? உலக வாழ்க்கையும் ஏது? இன்னும் தொடரும்.

வாழ்க வளமுடன். 

-

Why Vethathiri maharishi not form as a Jeevasamati? Answer for the unwise question


வேதாத்திரி மகரிஷி ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? கேட்கும் பாமரனுக்கு பதிலும் விளக்கமும்.

உலகம் தோன்றி, ஜீவ பரிணாம எழுச்சியில், கடைசியாக பூத்த மலர்தான் ‘மனிதன் ' என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். என்றாலும் கூட, மனிதன் இப்போதைய மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. சக ஜீவராசிகளைப் போல, மிருகங்களின் நடவடிக்கை போல, அதன் செயல்களை பார்த்துத்தான் வாழ்ந்திருந்து வந்தான். ஐந்தறிவு மிருகங்கள் செய்கின்ற, 1) பிற உயிரை கொலை செய்தல், 2) பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை பறித்தல், 3) பிற ஜீவனின் உடலை உணவாக்கிக் கொள்ளுதல் ஆகிய, மனித இனத்திற்கு ஒவ்வாத குற்றங்களை செய்துவந்தான்.

எனினும், அவனுக்குள் இருக்கின்ற, தெய்வீகம், ‘இது உனக்கானது அல்ல’ என்ற விளக்கத்தை, தந்துகொண்டேதான் இருந்தது. அவனுக்குள் அறிவாக நிறைந்திருந்த, அந்த தெய்வீகம், மனித செயல்களின் விளைவுகளால், திருத்திக்கொண்டே வந்தது. அந்த விளக்கத்தை உணர்ந்த மனிதர்களில் சிலர், சிந்திக்கலானர்கள். தன் சிந்தனையில், எண்ணத்தில், சொல்லில், செயலில் திருத்தம் கொண்டு, நன்மையான, இன்பமான விளைவுகளில் மகிழ்ந்தார்கள். இயற்கையில் உள்ள, எங்குமே, எப்போதுமே நிறைந்திருக்கும் இன்பத்தையும், அதனோடு கலந்திருக்கும் தெய்வீகத்தையும் கண்டு, பிறருக்கும் வாழ வழிகாட்டினார்கள். தெய்வம் என்ற உண்மையையும் அறிந்து உணர்ந்தார்கள். அத்தகையோர், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் என்றானார்கள். 

நாம் வாழும் இத்தகைய நவீன விஞ்ஞான உலகிலும் கூட, ஆறாம் அறிவில் உயர்ந்ததாக கருதி வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனத்தினோடு, உண்மையான திருத்தம் வழங்கிட, இன்றும் இத்தகைய சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாகிக் கொண்டும், நல்ல வழிகளை அம்மனிதர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அக்காலம் முதல், இக்காலம் வரை, பாமரர் என்ற நிலைபாடுகொண்ட மனிதர்கள் உண்டு. இவர்களை பொதுவாக அறிவிலி என்று சொல்லுவது, பொருத்தமாகாது. அறிவு எல்லோருக்கும் உண்டு. அதில் மாற்றுகருத்து இல்லை. எனவே அறிவு இல்லாதவர் என்று சொல்லுவது தவறு. அந்த அறிவை பயன்படுத்த தெரியாதவர், பயன்படுத்த வழிகள் கற்றுக்கொள்ளாதவர். அந்த மாற்றத்திற்கு ஆர்வமில்லாதவர் என்று சொல்லலாம். எனவே இவர்களை பொதுவாக ‘பாமரன்’ என்று சொல்லுவது சிறப்பு.

இத்தகைய பாமரன் அன்றும் இருந்தான், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உங்களோடும் உண்டு. இவர்களை எப்படி அடையாளம் கொள்வது? அவனின், அறிவார்ந்த நிலை என்று நினைத்துக்கொண்டு, நம்மிடம் கேட்கும் கேள்விகளால் அடையாளம் காணலாம். உங்களிடமும் அப்படி சில கேள்விகளை கேட்பவர்களை அடையாளம் காண்பது எளிதுதான். இந்த பாமரர்கள் மேல் அக்கறை கொண்டு, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர், பாமரர்களுக்கு விளக்கங்கள் சொல்லி, தெய்வீகத்தையும், மனித பிறப்பின் மூலத்தையும் பாடம் நடத்தினார்கள். என்றாலும் அது சிலவகையில்தான் உதவியது. அதனால், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தங்களுடைய, வாழ்நாளுக்குப் பிறகும், இவர்களுக்கு உதவலாம் என்று, தன் உயிரை தன் உடலிலேயே சுவரவிட்டு, உடலை விட்டு உயிர்பிரியாத நிலையில், தன் மூச்சை, வாழ்நாளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் உடலை சமாதியாக அமைத்து, அதன் மேலாக, ஆலயங்கள் எழுப்பி, ஜீவசமாதி என்றாக்கினார்கள். 

இத்தகைய ஜீவசமாதி, குடமுழுக்கு தேவையில்லாத, சக்தியாற்றல் நிரம்பியது ஆகும். வந்து வணங்கிச் செல்லும் அன்பர்களுக்கு, குறிப்பாக ‘பாமரர்களுக்கு’ உதவிடும். ஆனால் காலம் மாறியது. மக்களின் தரம் உயர்ந்தது. கல்வி எல்லோருக்கும் கிடைத்தது. ஆறாம் அறிவின் அற்புதம் விளங்கியது. மருத்துவம், விஞ்ஞானம், வானியல் மிக உயர்ந்தது. மனிதனின் வாழ்நாளும் உயர்ந்தது. ஆனால் பாமரன் பாமரனாகவே வந்துகொண்டு இருக்கிறானே?! ஒரு குரங்கிடம், ஒரு நிலக்கடலையை கொடுத்தால், வாங்கிக்கொண்டு, அதை இரண்டாக உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை உண்ணும் அனுபவ அறிவு அதற்கு இருக்கிறது தெரியுமா? ஆனால் இந்த பாமரன்?!



இக்காலத்திலும், உண்மை அறியாமலும், விளங்கிக் கொள்ளாமலும், அதை ஆராயாமலும், சிந்திக்காமலும், இன்னமும் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? உங்களை உயர்த்திடத்தான், வேதாத்திரியத்தின் வழியாக, மனவளக்கலை பயிற்சிகளை, முழுமையாக தந்துவிட்டாரே? அதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? அதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாடமும் பயிற்சியும் வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

மனவளக்கலை பாடங்களை புரியாதவர், அதை கற்றும் செய்திட ஆர்வமில்லாதவர், தன்னை உயர்த்திக்கொள்ள விருப்பமில்லாதவர், சுலபமாக தன்னை, பிறரால் உயர்த்திக்கொள்ள பேராசை கொண்டவர், குறுக்குவழியை தேடக்கூடிய இவர்கள்தான், தன்னை ‘பாமரன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு  சித்தராக, மகானாக, ஞானியாக உங்களை நீங்களே உயர்த்திட, வழிகளை தந்த வேதாத்திரி மகரிஷியையே, ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? அப்படியானால் நீங்கள் பாமரன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    உங்களுக்காகவே, உங்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் செயல்பட்டு, தன்னை வான்காந்தத்தில் நிரப்பிக்கொண்டு, இன்னமும் நம்மோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘குரு மகானை’ ஒரு சமாதிக்குள் அடைத்துவைக்க நினைக்கிறீர்களே? நியாயம் தானா பாமரனே?!

வாழ்க வளமுடன்.

-


Is Simplified Exercise Suitable for You? Truth Explanation


 எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? உண்மை விளக்கம்.


        இந்த கட்டுரையின் நோக்கம், எளியமுறை உடற்பயிற்சியின் நோக்கத்தை தவறாக மதிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும்.

ஒரு மனிதன் என்று எடுத்து ஆராய்ந்தால், எல்லோரும் ஒரே மாதியான அமைப்பு என்று பொதுவாக கருதினாலும், உடலின் இயக்கம், உடலுறுப்பின் இயக்கம், மனம் செயல்பாடு, உயிரின் தன்மை ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் கொண்டிருக்கிறான். மேலும், ஆண், பெண் என்ற பேதமும், அவர்களுக்குள் இருக்கும் உடறுலுறுப்பு மாறுபாடுகளும் அவர்களை பாதிக்கின்றன. இதில் மூன்றாம் பாலினமும் உண்டுதான்.

இதனாலேயே, ஒரே ஒரு பயிற்சி எல்லோருக்கும் பொருந்துமா? என்ற கேள்வி எழுவது உண்மைதான். ஆனால், தற்போதைய உலகம், எல்லோருக்கும் பொதுவான உடலமைப்பையும், உடலுறுப்பும் கொண்டதாகவே கருதி, எந்த உடல் நல குறைபாடு வந்தாலும், இதுதான் தீர்வு என்று பயிற்சிகளும், சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில், ஏதோ சரியாகிவிடுவது போல இருந்தாலும், பலவிதமான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய அதே நிலைக்கோ, அதைவிட மோசமான நிலைக்கோ போய்விடக்கூடும். இதை நாம், நம்முடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறோம். உண்மைதானே?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர், தன் திருக்குறளில், ‘நோய் நாடி, நோய் முதல்நாடி’ என்று ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தானே? ஆனால் அக்கால மருத்துவ முறைகளும், கைவிடப்பட்டுவிட்டன. ஒரு நோயுற்ற மனிதனின் நாடி பார்த்தே, குறித்த மருந்து தரும், மருத்துவர்களும், மருந்துகளும் இப்போதில்லை, இருந்தாலும்கூட ஏதோ ஒரு சிலர்தான். அதில் நம் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை. வீட்டிலேயே வருமுன் காக்கும் ‘பாட்டி வைத்தியமும்’ இப்போதில்லை. சொல்லப்போனால் பாட்டியே வீட்டில் இல்லை.

இதை எழுபதாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த, வேதாத்திரி மகரிஷி அவர்கள், திருத்தமான வாழ்வியலுக்கு உதவ எண்ணம் கொண்டிருந்தார் எனலாம். தன்னுடைய குரு, வைத்திய பூபதி கிருஷ்ணாராவ் வழியில், ஹோமியோபதி கற்றுத்தேர்ந்து, அதில் பட்டயமும் பெற்று உயர்ந்தார். மருந்துகளும் தயாரித்து வழங்கி சேவை செய்துவந்தார். தன் தொடர்ச்சியாகவே, தவமும் கற்று, அதன் முறையான பயிற்சியை, பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுக்கொண்டார். தன் ஆராய்ச்சியின் வழியாகவும், பிறரின் அனுபவத்தின் வழியாகவும், உலக மக்கள் சமுதாய வாழ்வில் கலந்திருக்கும் செயல்கள் வழியாகவும், ஒரு முழுமையான, உடற்பயிற்சியாகவே, தன்னுடைய வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்தார்.

உலகில் இருக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது என்றில்லாமல், உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் வளம் தருகின்ற, ஊக்கமும், ஊட்டமும் தருகின்ற பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடலை எந்தவகையிலும், வருத்தாமல், வலி உண்டாக்காமல், மிக எளிமையாக, பதிநான்கு வயதுமுதல் உடல் அசைவுள்ள எந்த வயதினரும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், வருமுன் காப்பதும், இருப்பதை சரி செய்து குறைப்பதும் ஆகும். நோய் தீர்வு என்பது தொடர் பயிற்சிகளாலும், மருந்துகளாலும் மட்டுமே அமையும்.

இப்போது கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருவோம். எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? என்று கேட்டால், நம்முடைய பெரும்பாலான அன்பர்களின் பதில் ஆம் என்பதுதான். கற்றுக்கொண்டேன், தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் பலனை அனுபவிக்கிறேன் என்றுதான் கருத்திடுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான, உடலமைப்பும், காற்றோட்டமும், வெப்ப ஓட்டமும், ரத்த வோட்டமும் இருக்கிறது அல்லவா? வயது வித்தியாசமும், உடலுறுப்பின் இயல்பு, இயக்க வித்தியாசமும் இருக்கிறது. உறுப்புக்களின் இயற்கை நிலை மாறாதிருப்பதும், நோய் தாக்கம் பெற்றிருப்பதும் உண்டுதானே? இந்த அடிப்படையில், ஒரே தீர்வு என்று, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது சரிதானா?

இதற்கு வழி என்ன? வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொள்வது நல்லதுதான் எனினும், உங்கள் உடல் எப்படி? எந்த நிலையில் இருக்கிறது? நோய் தாக்கம் உள்ளதா? பயிற்சியால் குணமாகுமா? மருந்துகள், சிகிச்சை அவசியமா? என்ற ஆய்வும் அதன் முடிவும் அவசியமாகிறது. உடலில் ஏற்கனவே உள்ள தொந்தரவோடு, எந்த பயிற்சியை செய்தாலும். அது உடலுக்கு பொருந்தாது. இதையும் நீங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். எனவே, உங்களுக்கு தேவை, நல்ல ஆலோசனை. அதை தகுந்த மருத்துவரிடமோ, ஆசிரியரிடமோ பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வையும் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது மிகுந்த பலன் அளிக்கும் என்பது என்னுடைய முடிவாகும். உடனே இதற்கு மாற்றுக்கருத்து, உங்களுக்குள் எழலாம். ஆனால், சில அனுபவம் மற்றும் ஆய்வுகளின் வழியாகவே இந்த விளக்கங்களை தருகிறேன் என்பதே உண்மை.

வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொண்டு செய்து வாருங்கள், அதில் எந்த குறையுமே இல்லை. ஆனால். உங்கள் உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை கவனியுங்கள். அதில் பிரச்சனை எழுந்தால், உடல் தொந்தரவு எழுந்தால், நீங்கள் செய்கின்ற ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி’ குறை கொண்டது என்று தீர்மானித்து விடக்கூடாது அல்லவா? ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி செய்தும் கூட, எனக்கு இந்த உடல் பிரச்சனை, மன பிரச்சனை தீரவில்லையே’ என்று நீங்கள் புலம்பத்தயாரானால், அது சரியான நிலைபாடு ஆகுமா? இப்போது நீங்கள் எதை தொடருவீர்கள்? எதை கைவிடுவீர்கள்? கேள்விகள் சரியானது தானா? உங்கள் அனுபவம் என்ன? என்பதை பின்னூட்டத்தில் தரலாம், வரவேற்கிறேன்.


வாழ்க வளமுடன்.

-

Why need Wife Appreciation? by Vethathiri Maharishi


மனைவி நல வேட்பு - Wife Appreciation


        உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

        பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்

நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை

நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு

மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்

மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

-


Wife Appreciation 

So far, ‘Fathers day’, ‘Mothers day’ are celebrated separately in the world. In the name of Sumangali puja (~ like Karva Chauth festival in southern India), husband welfare seeking day is also celebrated. Wife appreciation day is nowhere. Isn’t it lack of gratitude? This was always pinching my mind. However, it is not sufficient if just someone performs. This should be made aware to all male people in the country.

When I was analysing with the mind of understanding the glory of womanhood, birthday of my wife (Divine mother Lokambal) came on 30th August. Told to the loving disciples that can celebrate ‘Wife Appreciation Day’ by starting from the birth date of my wife. Accordingly, henceforth, let it be a practice of our organisation to celebrate ‘Wife appreciation day’ every year on 30th August. Opined that let it spread to other countries later. Men and women have accepted it enthusiastically, celebrating it at many places. You also thank your life partner with gratitude with the following poem:


Leaving your parents your home and your place of birth

You came with a great vision of performing your duty

Like a dispassionate sage to serve the family on the basis

Of tradition and culture you took me as your husband

Due to my boon you become my life partner

With all good qualities of womanhood serving others also with love and grace

You were of great service to other members of the family and society as well

Honorable my wife, I appreciate respect bless you with all happiness

 Divine Father Vethathiri Maharishi

Why today spiritual world is crowed by Masters?


மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா? 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா?


பதில்: 

ஒருவகையில், இப்போதைய சூழல், நீங்கள் சொல்வதைபோலத்தான் இருக்கிறது. ஒருவகையிலி இது நல்லதுதான். அந்த அளவிற்கு, நம் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் தேவை சராசரி மக்களுக்கு உதவவும் கூடும் என்பது உண்மைதானே? இதில் சிக்கல் என்னவென்றால், எது சரியானது? என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாகவே, நாம் விளம்பரங்களால் கவரப்படுவோம். விளக்கின் நெருப்பை, ஒளியென்று கருதி தேடிச்செல்லும் விட்டில் பூச்சிகள் போலவே. அதில் தப்பி வரவும் பெரும் முயற்சி தேவைப்படும். என்னுடைய அனுபவத்தில், ஒரு அன்பர் சொன்னதை அப்படியே தருகிறேன். அந்த அன்பர், தன்னுடைய பள்ளிக் காலங்கங்களியே, கடவுள், தெய்வம், இறைவன் என்பதில் நல்ல தெளிவான விளக்கம் பெற்றிருக்கிறார். கோவிலுக்கும், ஆலயங்களுக்கும் சென்று, வழிபட்டு கேட்டால் மட்டும் எதுவும் கிடைத்துவிடாது என்ற கருத்தில், உண்மையாக இருந்திருக்கிறார். அதை பிறரிடம் சொல்லியும் இருக்கிறார். ஆனால், இறை என்ற ஒன்று இருக்கிறது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதை நம்புகிறார். பகுத்தறிவு வாதம் என்று சொல்லி, இல்லவே இல்லை என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இறையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த வேண்டுதல், வழிபாடு, கொண்டாட்டம், திருவிழா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவசியமில்லை என்பது அவரின் சொந்தக் கருத்து.

இந்த நிலையில், விவேகானந்தர், அவரின் குரு ராமகிருஷ்ணர், சாரதாதேவி அம்மையார் இப்படி பலரின் யோக வாழ்வையும் படித்தும், சொல்லக்கேட்டும் அறிந்துகொள்கிறார். இந்த வரிசையில், பல யோகிகளையும், மகான்களையும் அறிகிறார். நம்முடைய குரு வேதாத்திரி மகரிஷியையும் கூட. ஆனால் உடனடியாக ஏற்கவில்லை. பத்தோடு பதினொன்றான போலிச்சாமியாரா? என்று ஆராய்கிறார். சிலரிடம் கேட்டும் தெரிந்து கொள்கிறார். வேதாத்திரி மகரிஷி எழுதிய நூல்களையும் வாசிக்கிறார். நல்ல ஆராய்ச்சி முடிவுக்குப் பிறகுதான், சரி அவரின் அமைப்புக்கு போய்தான் பார்க்கலாமே? என்று ஒருநாள், மனவளக்கலை வகுப்புக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையின், அடிப்படையில்தான், அங்கே உறுப்பினராக, அதுவும் உடனடியாக சேர்ந்து உயர்ந்திருக்கிறார்.

இப்படியான தெளிவான பார்வை, ஒவ்வொரு அன்பருக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். இவர் சொன்னார், அவர் சொன்னார், இவர் இணைந்துவிட்டார், அவர் இணைந்துவிட்டார் என்று நாமும் சிக்கிக் கொள்ள அவசியமும் இல்லை. உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லுகிறது? என்பதை நிதானித்து பிறகு முடிவு செய்யுங்கள். ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று, இந்த வழவழா குளகுளா என்று கிராமங்களில் சொல்லிவார்களே அதுபோல, வழுக்கி தப்பிக்கிற ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாத தெளிவு வேண்டும். உங்கள் முடிவே சரியானது.

ஒரு கேள்விக்கும், விளக்கத்திற்கும், மூன்று நிமிடத்திற்கு மேல், விசயத்திற்கு வராமல், எதை எதையோ மேற்கோள் காட்டிக்கொண்டே இருந்தால், நீங்கள் அந்த இடத்தில் இருப்பதில் அர்த்தமே இல்லை. இந்த நூலில் அப்படி இருக்கிறது, அந்த நூலில் அப்படி இருக்கிறது, இவர் அப்படி சொல்லியிருக்கிறார், அவர் இப்படி சொல்லி இருக்கிறார். என்று இழுத்துக்கொண்டே போகிற ஆசாமிகளின் கைகளில், நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர் பிடித்தாலும் கையை எடுத்து விலக்கி விட்டு ஓடி வந்துவிடுங்கள். அவர் அனுபவத்தில் இருந்து, உங்களுக்கான பதிலும், விளக்கமும் தருகிறாரா? என்பது மிக முக்கியமானது. போலியான முகமுடியை போட்டுக்கொண்டு, உங்களை அணுகும் ஆசாமிகளை, இனம் கண்டு கொள்வதில் கவனமாக இருங்கள். அதுபோலவே, எப்போதுபார்த்தாலும் தன் குருவின் புகழ்பாடும் ஆசாமிகளும் பிரச்சனைக்குரியவர்களே! இவர்கள் சொந்தக்கருத்துக்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். உங்களையும் தருவதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.

ஆனாலும், இன்றைய மக்களுக்கு புதிது புதிதாக ஏதேனும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்ற காரணத்தால், புதியது சிறப்பானது என்ற மயக்கம் வந்துவிட்டது. அந்த மயக்கம் அவர்களின் அனுபவத்தாலே விளக்கமாகும். நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், முன்னதாகவே ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். எனினும், இத்தகைய ஆன்மீக வளர்ச்சியை நான், மனதார பாராட்டுகிறேன். விரும்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-


Through the simplicity of the Vethathiriya, the truth and the individuality is gone. Is this correct?


வேதாத்திரியம் வழியாக, யார் வேண்டுமானாலும் யோகம் கற்று உயரலாம். மற்றவர்களுக்கும் கற்றுத்தரலாம் என்றாகிவிட்டது. இதில் உண்மை அறிந்தவர் யார்? என்ற தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது. இது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் வழியாக, யார் வேண்டுமானாலும் யோகம் கற்று உயரலாம். மற்றவர்களுக்கும் கற்றுத்தரலாம் என்றாகிவிட்டது. இதில் உண்மை அறிந்தவர் யார்? என்ற தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் வேதாத்திரி மகரிஷி ஆகிவிடலாமா? அப்படி ஆகிவிட முடியுமா? விளக்கம் தருக.

பதில்:

உங்களுடைய, குழப்பத்திலும், கோபத்திலும் இந்த கேள்வி எழுந்திருக்கலாம். எனினும் நல்ல கேள்வியே என்பதில் வரவேற்கிறேன். இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியே, தந்திருக்கிறார். ஆம், அவரும் இதுபோன்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கிறார். அந்த கேள்வியையும், அதற்கான மகரிஷியின் பதிலையும் பார்க்கலாம். அதில் உங்களுக்கான விளக்கமும் கிடைக்கும். இதோ!

அன்பரின் கேள்வி:

மகரிஷி அவர்களே, நம் நாட்டில் பல மகான்கள் அவ்வப்பொழுது சித்தியடைந்துள்ளனர். அவர்கள் உபதேசத்தால் ஈர்க்கப்பட்டு பலர் பக்தர்கள் ஆனார்கள், ஆனால் தாங்கள் மட்டும் மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள். அது எவ்வாறு சாத்தியம்?

வேதாத்திரி மகரிஷியின் பதில்:

பல மகான்கள் உலகில் சித்தியடைந்தார்கள் என்று கூறுகிறீர்கள். மேலும் என்னைக் குறிப்பிட்டு 'உங்களைப் போல் மற்றவர்களும் உயர்நிலை பெறுவது சாத்தியமில்லை' என்று கூறுகிறீர்கள். 

நீங்கள் எந்த நிலையை, எந்தப் பேற்றினை சித்தி என்று கருதுகிறீர்கள். வேடமிட்ட சந்நியாசிக் கோலத்தையா? எதேனும் ஜால வித்தையில் தேர்ச்சிப் பெற்று பிறர் வியப்புறச் செய்யும் திறமையையா? இனிக்கப் பேசி சொற்பொழிவாற்றும் தெளிவையா? நாடு எங்கும் மக்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு நூல்களில் எழுதிப் புகழ் பெறுவதையா? ஒரு மனிதன் அருட்பேறு பெற்றதை உங்கள் கண்ணாலோ, கருத்தாலோ காண முடியுமா? எந்தக் கோணத்தில் எந்த நிலையிலிருந்து கொண்டு நீங்கள் பிறர் உயர்வைக் கணிக்கிறீர்கள்? 

நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் பல பழிச்செயல்கள் கொண்டவராக, நடிப்பில் வல்லவராக இருக்கலாம். உங்கள் தயவில் வேலை செய்யும் ஒரு கூலியாள் பழிச் செயல் நீங்கி உய்வு பெற்ற ஒரு மகானாக இருக்கலாம். ஒருவரைப்பற்றிக் கணிக்க நீங்கள் உங்கள் தெளிவையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும். அதற்கு முன் ஒருவர் சித்தி பெற்றவர் என்று கருதினால் அது தப்புக் கணக்கேயாகும். மருட்சியால் கொண்ட முடிவாகும். 

மனிதன் புலன்வழியே இன்ப துன்ப நுகர்ச்சியில் மயங்கி உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் அடையும் பொருந்தா நிலைகள் ஆறுகுணங்களாகும். அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலியவையாகும். மனதிற்கு மூலமான உயிராற்றலை உணர்தலாகப் பெறும் குண்டலினி யோகத்தால் மனம் ஒடுங்கி தன் மூலத்தில் நிலைபெறுகிறது. அப்பொழுது உணர்ச்சி நிலையில் எழும் ஆறுகுணங்களைப் பற்றியும், அவை இயங்கும் நிலைகளைப் பற்றியும், அகநோக்குப் பயிற்சி என்ற சாதனையால் உணர்ந்து சீரமைப்பு பெறலாம். முறையாகப் பயின்ற பலர் இப்பயிற்சியில் வெற்றி பெற்று அமைதியின் பெருமையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

வாழ்க வளமுடன்.

-