CJ for You: protect

protect

Showing posts with label protect. Show all posts
Showing posts with label protect. Show all posts

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

Why is my mind always agitated and nervous?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனம் எப்போதும் படபடப்பாகவோ, பதட்டமாகவோ இருக்கிறது ஏன்?


பதில்:

உலக வாழ்வில் சராசரி மனிதர்கள், இயல்பாக இருக்கும் மன நிலை அப்படித்தான். எதையாவது செய்யவேண்டும், எதையாவது பெறவேண்டும், எப்படியாவது வாழ்வில் முன்னேறி மற்றவர்களை விட நன்றாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய பெற்றோர் வளர்த்தமுறையும், இந்த சமூகத்தின் வழியாக அவர்களுக்கு கிடைத்த பாடமும் துணை செய்கிறது எனலாம். இந்தமாதிரியான மனிதர்களுக்கு ஒரு பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அது என்னவென்றால், ‘யாராவது என்னை ஏமாற்றிவிடுவார்கள், நாம் யாரிடமும் ஏமாறக்கூடாது, நம் உரிமையை இழந்துவிடக்கூடாது, போராடியாவது ஜெயிக்கவேண்டும், நாமே முதன்மையாக பெற்றுவிடவேண்டும், நாம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது’ என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இந்த நபர்களில் நீங்களும் ஒருவரா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் இப்படியான சிந்தனை ஓட்டம் இருப்பது உண்டு எனினும், வேதாத்திரியத்தில் கற்றுக்கொண்ட நாள்முதல், மாற்றம் பெற வாய்ப்பு அதிகம் உண்டு. என்றாலும், பழக்கதோசம் என்ற ஒன்று இருப்பதால், மனம் மாற்றம் பெற கொஞ்சம் காலமும் ஆகலாம்.

இதை நீங்களே உணர்ந்து, ஏன் நான் பழையபடியே இருக்கிறேன்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு சிந்தனை செய்யுங்கள். வேதாத்திரிய வழியில், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்யுங்கள். மிக குறுகிய காலத்தில் உங்கள் மனம் தெளிவடையும். முக்கியமாக, இந்த சமூகம் குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் உங்களுக்கு இருக்கும் அச்சம், பயமே உங்களையும், உங்கள் மனதையும், உடலையும், படபடப்பாகவும், பதட்டமாகவும் வைத்திருக்கிறது. 

எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கையை, உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்பதை நீங்களாகவே அறிந்து உணரும் காலம் வரும். அதை நான் இங்கே விளக்கிச் சொன்னால் ‘நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மேலும் தயங்குவீர்கள்’ என்பதே உண்மை. அனுபவமாக நீங்களே அந்த விளக்கத்தை பெறும்பொழுது ‘அடடா, இவ்வளவு காலம் இப்படியாக வீண் செய்து விட்டேனே’ என்று வருந்தும் அளவிற்கு உண்மையை புரிந்துகொள்வீர்கள். 

வாழ்க வளமுடன்.

To whom does Vethathiriyam give importance to living people? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?


பதில்:

குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.

எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.

உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.

இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!

ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!

ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.

வாழ்க வளமுடன்.

Stay with alert in unavoidable circumstances near the dead bodies


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் ஒருவருடைய இறப்பு நிகழ்வில் ஒருநாள் முழுவதும் இருக்கவேண்டி இருந்தது, மறுநாள் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, தலைபாரம், உடல்வலி, காய்ச்சல் போல இருக்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்?


பதில்:

நீங்கள், மனவளக்கலையில் தவம் கற்ற அன்பர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் அங்கே உங்களுக்குச் சொல்லப்பட்ட வழிமுறைகளை மறந்துவிட்டீர்கள் என்பதும் தெரிகிறது. உங்களுக்கு, மனவளக்கலை ஆசிரியர்கள், சாந்தி தவம் இயற்றும் பாடம் தந்திருப்பார்கள். அதற்கு முன்னதாக, இந்த சாந்தி தவம் என்பதின் மகிமை என்ன? அது ஏன் செய்யவேண்டும்? எப்பொழுது எல்லாம், சாந்திதவத்தின் வழியாக, மூலாதர நினைவை செலுத்திப் பழவேண்டும் என்ற விளக்கத்தையும் உங்களுக்கு நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

யோகசாதனையில் இருக்கிற எல்லா அன்பர்களுக்கும் ‘சாந்தி தவம்’ முக்கியமானது. அற்புதமானது என்றால் மிகையில்லை. அதிலும், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில், அடிப்படை பயிற்சியிலேயே ‘சாந்தி தவம்’ கற்றுத்தரப்படுகிறது.

சாந்திதவம், யோகசாதனையில் ஏற்படுகின்ற தடைகளை அகற்றுகிறது. விரிவான விளக்கத்தை, வேறு கட்டுரையில் காணலாம். சில அடிப்படைகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்வோம். யோகத்தின் வழியாக தவ ஆற்றலின் அளவு சில நேரம் மீறும். அப்போழுது வழக்கமான தவங்களை செய்யக்கூடாது. எனவே அந்த நேரங்களில் ‘சாந்தி தவம்’ மட்டும் செய்துவந்தால் தவ ஆற்றல், உடல் ஆற்றலாக மாறி நன்மை அளிக்கும்.

மேலும், மூலாதரத்தில் நினைவை செலுத்தும் ஆற்றலும் நமக்கு கிடைத்துவிடும்.

மனிதனின் குண்டலினி சக்தி எனும் ஆற்றலை, உயர்த்துவது எவ்வளவு நன்மையோ, அதுபோல பாதுகாப்பதும் நன்மையே! உங்களை சுற்றி இருக்கும் சூழல் கூட உங்கள், சக்தியை பறித்துவிடும். ஒரு இறந்த மனிதரின் உடலைச் சுற்றி ஒரு சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. யோகத்தில் இணையாத, யோகம் கற்றுக்கொள்ளாத சாதரண மனிதர்கள், இறந்த மனிதரின் உடலின் அருகில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் யோகமும், தவமும் செய்யும் அன்பர், மூலாதார நினைவோடு அங்கே இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால், அன்பருடைய சக்தி வீணாக பறிக்கப்படும். இது இயற்கையாக நிகழ்வது. எனவே நீங்கள், இனிமேலாவது சாந்தி தவம் நன்கு கற்று, மூலாதர நினைவை செலுத்துவதை பழக வேண்டும்.

சாந்தி தவம் தொடர்ந்து செய்துவாருங்கள், உடல் நலம் பெறும், அதுபோல, வாரத்தில் ஒரு நாள் சாந்திதவம், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக செய்யவேண்டியதும் அவசியம். 

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!