CJ for You

There is no need to worry about exercising so much. Isn't this a common thing? If you are interested, let them do it. Why provoke people to say it so often? What is the need for that?


உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.




ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.

நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.

தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.

மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது. 

உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.

இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...

எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret


வாழ்க வளமுடன்
-

Leave the mind as it is. Let it be what it is within. How then can one be without a mind? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, மனதை அப்படியே விட்டுவிடுங்கள். அது அகத்தில் எப்படி இருக்கிறதோ இருக்கட்டும் என்கிறார்கள். அப்படியென்றால் மனம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? விளக்குக.



வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.

பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.

மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.

மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.

மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும்.  எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.

மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?

-

வாழ்க வளமுடன்
-

Do the rituals in our lives have meaning? Do you have to do it? Shall we exclude it? Can't you?


வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்வில் கலந்திருக்கும் சடங்குகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? அதை செய்யத்தான் வேண்டுமா? அதை விலக்கிவிடலாமா? கூடாதா? விளக்கம் தருக.



பொதுவாகவே, நம்முடைய இப்போதைய வாழ்வில், நம் முன்னோர்களின் சடங்குகள் காலாவதி ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. அனேகமாக, நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா செய்ததைக் கூட செய்வதில்லை அல்லவா? காரணம் அதில், அந்த சடங்குகளில், இக்கால சந்ததியினர் உண்மையையை தெரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்கு செய்வதற்கு விருப்பம் இல்லை. அது ஏன் செய்ய வேண்டும் அல்லது விலக்க வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்வதும் இல்லை. எனக்கு அதில் ஆர்வமில்லை, நேரம் இல்லை என்று விட்டுவிடுவார்கள்.

இதனால் அவர்கள் இழப்பது நிறைய நன்மைகளையும், உண்மைகளையும், விளக்கங்களையும் சேர்த்துத்தான் என்பது தெளிவு. எப்போதுமே மனிதனின் அறிவு, ‘ஏன்?’ என்று ஆராயும் பொழுதான் வளர்கிறது, தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. அது இல்லாமல், விட்டுவிடுதலும், விலகுப்போவதும் குறையாகவே நின்றுவிடும்.  அதுதான் இங்கே, இப்போது நடக்கிறது, நம்முடைய வாழ்வில். அதை நீங்களும் கண்டிருப்பீர்கள்.

ஆனாலும், நாம் செய்துவருகின்ற சில சடங்குகளில், வழிமுறைகளில் உண்மை இருக்கிறது. அது எது எது என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டு ஏற்பதும் நல்லதுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். மனவளக்கலை என்பதே, மானிட உலகுக்கு ‘புதிய பாதை’ என்பது இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனினும் காலம் மாறிவருகிறது. மக்களிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் உண்மை தத்துவங்கள் உலகம் முழுவதும் உள்ள மனிதர் மனதிற்குள்ளாக பரவிக்கொண்டு இருக்கிறது.

நம் வாழ்வில் நாம் பற்றிக் கொண்டிருக்கிற, சில சடங்குகள் குறித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள், உண்மை விளக்கம் தந்திருக்கிறார். அதை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே @Vethathiriya வில் பதிந்திருக்கிறோம். இதோ அந்த காணொளி வழியாக, அவரே சொல்லும் திருத்தங்களை கவனிப்போம்.

Rituals Fake Characters-சமூக சடங்குகளில் போலித்தன்மை -Vethathiri Maharishi


வாழ்க வளமுடன்
-

What is God really? How to know or realize? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.


இறை என்ற வார்த்தையிலேயே ஓர் உண்மை இருக்கிறது எனலாம். தமிழ் மொழியின் சிறப்பு, அந்த வார்த்தையிலேயே அதனுடைய இயல்பும் இருப்பது ஆகும். இறை, என்பது எங்கும் நிறைந்து இருக்கும் ஒன்றை குறிப்பதாகும். இதை இறைந்து இருக்கிறது என்றும் சொல்லமுடியும். உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒரு கண்ணாடி பொருளை கீழே போட்டால் உடைந்து சிதறும் அல்லவா? கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்களாகவும் அவை இருக்கலாம். அவை எல்லாம் இறைந்து கிடக்கிறது எனலாம். தெரியாது ஆனால், காலை வைத்தால், ரத்தம் வரும் அளவிற்கு பாதத்தை பதம் பார்க்கும்தானே?

இந்த இயற்கையோடு, நாம் காணும் பொருட்களோடு, உயிர்களோடு, இந்த பிரபஞ்சத்தோடு ‘இறைந்து இருக்கும்’ ஒரு பேராற்றலையே ‘இறை’ என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதையே நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பேராற்றலை, குறிப்பாக உணர்த்தும் வகையில்தான்,  பக்தியாகவும் மலர்ந்தது. அதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு. அது அவரவர்கள் நிலைபாடும், உண்மை அறியாமையுமே ஆகும். ஆனால் இறைந்து கிடப்பது உண்மை என்பதை யாராகிலும் மறுக்கமுடியுமா? இதை மேலும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளின் வழியாகவே அறியலாம். இந்த காணொளி காண்க.

இறை என்பது உண்மையில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாழ்க வளமுடன்

Pongal is the festival of Tamils. There are some who call it the New Year. What's so special about it? Has Vethathiri Maharshi said anything? Explain


வாழ்க வளமுடன் ஐயா. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. இதையே புத்தாண்டு என்று சொல்வோரும் உண்டு. இதில் என்ன சிறப்பு? வேதாத்திரி மகரிஷி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.

பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான பண்டு ஈகை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மகிழ்ச்சி நம்மோடு பொங்கிட வேண்டும் என்ற கருத்தில், இயற்கையையும், சூரியனையும், நிலத்தையும், அதற்கு துணையாக இருக்கும் காளை மாடுகளையும் மதிப்பு செய்து, வணங்கி மகிழ்ந்து, சக்கரைப்பொங்கல் படையலிட்டு வழிபடும் நாள் இதுவே. மேலும், தங்களைடைய சந்தோசங்களையும், தன்னிடமிருக்கும் பொருளையும், பிறருக்கு தந்து மகிழ்ந்து, அவர்கள் தருவதை பெற்று மகிழும் பண்டு ஈகை என்ற பண்டிகையாகவும் இருக்கிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. எனினும் தற்போது சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

காரணம், அன்றைய காலம் போல, விவசாயம், விளைபொருட்கள் விளைவிக்கும் தொழில், வேலை என்பதில் இருந்து மனிதர்களாகிய நாம் விலகிவந்து, வெவ்வேறு தொழில்களில் வளர்ந்து விட்டோம். மேலும் அதில் புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டுவந்து, இயந்திரங்களே அதை செய்திடும் அளவிற்கு மாற்றமும் செய்துவிட்டோம். நாம் அந்த நுட்பங்களை கவனிக்கும், முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் வேலைகளை மட்டும் செய்து வருகிறோம். அதனால், பாரம்பரியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகிறது. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை. இவ்வுலக நடைமுறையில் பயணிப்பதுதான் நமக்கும் நல்லது. எதிர் திசையில் பயணிப்பது, நம்மை மட்டுப்படுத்திவிடும் அல்லவா?

பொங்கள் திருநாளை, தை முதல் நாளாக சொல்லுவதில், பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் நிலையில், நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. இதைக்குறித்து குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் எதும் சொன்னதில்லை. எனினும், மெய்ப்பொருள் உண்மையை, இந்த பொங்கல் திருநாளில், வாழ்த்தாக ஒரு கவிதை வழியாக சொல்லி இருக்கிறார். அதில் இருக்கும் உண்மையை, இந்த காணொளி பதிவு வழியாக அறியலாம். இதோ அதற்கான இணைப்பு.

வேதாத்திரி மகரிஷி பொங்கல் வாழ்த்து மதிவிருந்து கவிதை - Pongal Greeting Poems by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

-


Sir, who initiates a disciple into Kundalini and enhances his kundalini energy? Give an explanation.


ஐயா, ஒரு சீடனுக்கு குண்டலினி தீட்சை கொடுத்து, குண்டலினி சக்தியாற்றலை உயர்த்துவது யார்? விளக்கம் தருக.

நல்ல சிந்தனைக்குறிய கேள்வி. இந்த கேள்விக்கு, நம் வேதாத்திரியாவில், தனியாக ஒரு பதிவு தரப்பட்டுள்ளது. அதை இந்த பதிவோடு இணைத்துள்ளேன். அதற்கு முன்பாக சில உண்மைகளை இங்கேயும் காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, குரு மட்டுமே, ஒரு சீடனுக்கும், தன்னை நாடி வரும், சுய தேடல் ஆர்வம் உள்ள அன்பருக்கும், குண்டலினி தீட்சையை வழங்க முடியும். குரு என்பவருக்கு நிகராக யாரையும் சொல்ல முடிவதில்லை. எனினும் ஒரு சீடன், குருவால் உயர்த்தப்படும் பொழுது, சீடனும் பிறருக்கு மெய்விளக்கம் தரும் வாய்ப்பை பெற்றுவிடுகிறான். இங்கே சீடனுக்கு, தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உன்மை விளக்கமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, குருவின் அன்பும், கருணையும் அவனுக்கு இருக்கிறதல்லவா?

அப்படியல்லாது, ஏதோ ஒருவருடம் படித்தேன், தவம் செய்ய பழகிக் கொண்டேன். படித்தேன், குருவின் விளக்கம் கேட்டேன். மெப்பொருள் உண்மை புரிந்து கொண்டேன், அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நானும் ஆசிரியர் என்ற ரீதியில், யாரும் மற்றவர்களுக்கு தீட்சை வழங்கிட முடியாது. அது இந்த இரு நபர்களுக்குமே பிரச்சனை ஆகிவிடும். ஒரு சீடன் உண்மையாகவே தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள,  சீடனின் தவம், தற்சோதனை, அகத்தாய்வு, ஆராய்ச்சி என்ற வகையில், பல ஆண்டுகளை செலவிட வேண்டிய அவசியம் உண்டாகும். குறைந்தது பத்தாண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம், ஆனாலும், அவனின் கர்மா என்ற வினைப்பதிவு தீர்க்கப்பட வேண்டும்.

எனவே, தீட்சை வழங்கும் நிலைக்கு, ஒருவர் உயர்ந்தாலன்றி, தீட்சை அளித்திட முடியாது. என்றாலும் கூட, வேதாத்திரியத்தில், குறிப்பிட்ட தகுதிநிலை பெற்றவர், முற்றிலும் புதிய ஒருவருக்கு தீட்சை அளிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இது, மகான் வேதாத்திர் மகரிஷி அவர்களே, ஏற்படுத்தித் தந்த வழிமுறை ஆகும். இந்நிகழ்வை, ஓவ்வொருவரோடும் இணைந்து, வான் காந்தத்தில் தன்னை கலக்கவிட்டுக் கொண்ட, வேதாத்திரி மகரிஷி அவர்களே, ஒழுங்குசெய்து கொள்கிறார். ஆனால் பெரும்பாலோர் இதை நம்ப மறுப்பார்கள்.

என்னுடைய அனுபவத்தில், எனது 21 வயதில்  அப்போதைய ‘Master’ பயிற்சி வழியாக, உயர்ந்த நிலையிலும், எனக்கு முழுயான, இறையுண்மை அனுபவமாக பெறாததாலும், பிறருக்கு தீட்சை வழங்க, தயக்கம் இருந்தது. அதனாலேயே, மூன்றாண்டுகளில், அந்த சேவையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, என்னளவில் முயற்சித்து, வேதாத்திரி மகரிஷி காட்டியவழியில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள முடிவு செய்து பயணித்தேன். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அனுபவம் அது. அந்நிலையில்தான் நான் நிறைபேற்று நிலை பெற்றேன். அதன் பிறகுதான், பிறருக்கு, உண்மை விளக்கம் தரும் பணியை கடமையாகக் கொண்டேன். இது உங்களுக்கும், ஒவ்வொரு வேதாத்திரிய அன்பருக்கும் நிகழலாம்.

தீட்சை வழங்கப்படும் பொழுது, தீட்சை பெறப்படும் பொழுதும் அங்கே ஓர் அதிசயமும் நிகழ்கிறது. அது என்ன என்பதை, இந்த காணொளி மூலமாக அறியலாம்.


ஆக்கினைசக்கரத்தில் குண்டலினி தீட்சை எனக்கு அளிப்பது யார்?  Who initiate My Kundalini in Agna Chakra?

வாழ்க வளமுடன்

-

Is it still fair to believe in karma? Outdated myths are no longer valid. That's what people all say. Is there really karma or not? Explain.


இன்னமும் கர்மாவை நம்புவதெல்லாம் நியாயமா? காலவதியான கட்டுக்கதைகள் இனிமேலும் செல்லுபடி ஆகாது. இப்படித்தான் மக்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையாகவே கர்மா உண்டா இல்லையா? விளக்குக.

என்னுடைய வாழ்விலும், இதை இப்பொழுது விளக்கிச் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றாலும், என் பதின்ம வயதுகளில், கர்மாவை ஏற்றுக்கொண்டவனில்லை. நான் செய்யாத ஒன்றை, என்னை ஏன் சுமக்கச் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்டிருக்கிறேன். அதுபோலவேதான், மக்கள் அனைவரும் ‘கர்மா’ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. பேசட்டும், விலக்கட்டும், ஒதுக்கி தள்ளட்டும். ஆனால், உண்மை என்ன? என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அதை செய்யவேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். 

ஒன்றைப்பற்றி தெரியாமலேயே அதை புறம்தள்ளுவது, பாதிக்கப்பட்ட உடலுக்கு தேவையான மருந்தை, ‘எனக்கு வேண்டாம், இதை சாப்பிட்டால் நான் பிழைத்துவிடுவேன்’ என்று சொல்லுவது போல ஆகிவிடும். எத்தனை முரண்பாடு கவனித்தீர்களா?

முதலில் இந்த கர்மா என்ற வார்த்தையின், அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள். கர்மா என்ற வடமொழி சொல், அழகாக வினை என்று சித்தர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. வினை என்றால் செயல், இயக்கம் என்று அர்த்தமாகிறது. இதை இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பார்வையில் விளக்க முடியுமா? என்று கேட்கிறீர்களா? முடியும்.

'Every action has reaction'என்பது பொதுவான கருத்துதானே? இன்னமும் விளக்கமாக, Newton's third law of motion, every action has an equal and opposite reaction. These two forces act on two different bodies. இதன்படி, ஒரு செயலுக்கு அதற்கு சமமான எதிர் செயலோ, விளைவோ உண்டு என்று தெரியவருகிறதுதானே? அதுதான் இந்த கர்மாவில், இல்லையில்லை, வினையில் இருக்கிறது. ஒரு செயலை செய்கிறீர்கள். அந்த செயலுக்கு விளைவாக இன்னொரு செயல் விளைகிறது. அது நன்மையாகவும், தீமையாகவும் அமைந்துவிடுகிறது. இது உங்கள் அளவில் உண்மைதானே? 

நன்மையாக இருந்தால் அனுபவிப்பீர்கள், தீமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும். இதில் நீங்கள், தீமையை அனுபவிக்காமல் தப்பித்துவிடலாம். ஆனால் செயலை செய்தது நீங்கள் தானே? அப்படியானால், தப்பித்துவிடுவது உங்கள் அளவில் என்றால், இயற்கை விதிப்படி அப்படி இல்லை. அந்த விளைவை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று உங்களை தண்டிக்கிறது. இது இயற்கையின் வினை விளைவு நீதி, Law of the Nature என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார்.

நான் சொன்னால் கூட நம்ப மாட்டீர்கள், ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களே விளக்கிச் சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ இந்த காணொளி பதிவில் உண்மை அறிக.

உங்களின் உண்மையும், உங்கள் கர்மாவின் ரகசியமும் தெரியுமா?

வாழ்க வளமுடன்

-