Home » Posts filed under daily life
How to control the unwanted thoughts that arise in the mind?
May 07, 2024 Sugumarje
மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள்.
இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது.
அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும். அப்போது மனம் தூய்மையாக இருக்கும். மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.
மனம் வெளுக்க மருந்து உண்டு:
வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.
எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம். அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள். பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும்.
மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.
வாழ்க வளமுடன்.
-
alert / analysis / daily life / enlightenment / fix / how / introspection / meditation / mind / practice / research / silence / solution / think / thought / unwanted
Why is my mind always agitated and nervous?
December 11, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனம் எப்போதும் படபடப்பாகவோ, பதட்டமாகவோ இருக்கிறது ஏன்?
பதில்:
உலக வாழ்வில் சராசரி மனிதர்கள், இயல்பாக இருக்கும் மன நிலை அப்படித்தான். எதையாவது செய்யவேண்டும், எதையாவது பெறவேண்டும், எப்படியாவது வாழ்வில் முன்னேறி மற்றவர்களை விட நன்றாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய பெற்றோர் வளர்த்தமுறையும், இந்த சமூகத்தின் வழியாக அவர்களுக்கு கிடைத்த பாடமும் துணை செய்கிறது எனலாம். இந்தமாதிரியான மனிதர்களுக்கு ஒரு பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அது என்னவென்றால், ‘யாராவது என்னை ஏமாற்றிவிடுவார்கள், நாம் யாரிடமும் ஏமாறக்கூடாது, நம் உரிமையை இழந்துவிடக்கூடாது, போராடியாவது ஜெயிக்கவேண்டும், நாமே முதன்மையாக பெற்றுவிடவேண்டும், நாம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது’ என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்கும்.
இந்த நபர்களில் நீங்களும் ஒருவரா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் இப்படியான சிந்தனை ஓட்டம் இருப்பது உண்டு எனினும், வேதாத்திரியத்தில் கற்றுக்கொண்ட நாள்முதல், மாற்றம் பெற வாய்ப்பு அதிகம் உண்டு. என்றாலும், பழக்கதோசம் என்ற ஒன்று இருப்பதால், மனம் மாற்றம் பெற கொஞ்சம் காலமும் ஆகலாம்.
இதை நீங்களே உணர்ந்து, ஏன் நான் பழையபடியே இருக்கிறேன்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு சிந்தனை செய்யுங்கள். வேதாத்திரிய வழியில், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்யுங்கள். மிக குறுகிய காலத்தில் உங்கள் மனம் தெளிவடையும். முக்கியமாக, இந்த சமூகம் குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் உங்களுக்கு இருக்கும் அச்சம், பயமே உங்களையும், உங்கள் மனதையும், உடலையும், படபடப்பாகவும், பதட்டமாகவும் வைத்திருக்கிறது.
எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கையை, உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்பதை நீங்களாகவே அறிந்து உணரும் காலம் வரும். அதை நான் இங்கே விளக்கிச் சொன்னால் ‘நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மேலும் தயங்குவீர்கள்’ என்பதே உண்மை. அனுபவமாக நீங்களே அந்த விளக்கத்தை பெறும்பொழுது ‘அடடா, இவ்வளவு காலம் இப்படியாக வீண் செய்து விட்டேனே’ என்று வருந்தும் அளவிற்கு உண்மையை புரிந்துகொள்வீர்கள்.
வாழ்க வளமுடன்.
My spouse is suffering from some bad habits. Can correct him by blessing him?
October 03, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைத் துணைவர் சில பல கெட்ட பழக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை வாழ்த்தால் திருத்தமுடியுமா?
பதில்:
நிச்சயமாக நாம் விரும்பி செய்யும் வாழ்த்தினால், அவரை நல்வாழ்வுக்கு திருத்திட முடியும். என்றாலும் வாழ்த்து மட்டுமே போதாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. சில பல கெட்ட பழக்கம் என்பது தெளிவாக இங்கே சொல்லவில்லை என்றாலும், அதை புரிந்துகொள்ள முடியும்தானே?! இத்தகைய கெட்ட பழக்க வழக்கங்கள் மனதையும் உடலையும் பாதிக்கும். அதனுடைய இயல்பை மாற்றி அடிமையாகவும் மாறிவிடும். அது இது இருந்தால்தான் நான் நன்றாக இருப்பேன் என்ற நிலைக்குப் போய்விடும். உடனடியாக மாற்றம் கொண்டுவருவது மிக கடினமே. இந்த காரணத்தினால்தான் ‘வாழ்த்து’ மட்டும் உதவாது.
ஏதேனும் ஒரு நல்ல, இயல்பான சூழலில், உங்கள் வாழ்க்கைத்துணைவரோடு பேசவேண்டும். உங்களால் முடியாது என்றால், அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் வழியாக, இந்த பழக்கத்தால் என்னென்ன கேடுகள், குடும்பத்தில் தடுமாற்றம், பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் சிதைகிறது என்பதையெல்லாம் சொல்லி புரியவைக்க வேண்டும். ஒருவேளை அந்த நண்பரும், உங்கள் வாழ்க்கைத்துணைவரின் கெட்டபழக்க கூட்டாளியாக இருந்தால் இது வேலைக்கு ஆகாது. எனவே நல்ல நண்பராக இருக்கவேண்டும். நீங்கள் மனவளக்கலை பயின்றவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைதுணைவரை அங்கே ஒரு பார்வையாளராக கட்டாயம் அழைத்துச் செல்லலாம். தினமும் என்றால் நிச்சயமாக ஒரு மாற்றம் கிடைக்க வாய்ப்பு வரலாம் அல்லவா?
பொதுவாகவே, கெட்டபழக்கங்களில் இருக்கிற எந்த நபருக்குமே, அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாங்கள் செய்வது தவறு என்று நன்றாக தெரியும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அதிலிருந்து விடுபட முடியாத அளவிற்கு அந்த பழக்கத்திற்கு, அந்த செயலுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகிறது. இதனால், அவர்கள் செய்வது தவறுதான் என்று நிச்சயமாக, நீங்கள் உணர்த்திவிட்டால் போதும், அவர்கள் திருந்தி மாறிவிட முடியும்.
இதற்கான சில மருத்துவ முறைகளும் கூட ஆலோசனை பெறலாம். என்றாலும் நேரடியாக, பாதிக்கப்பட்டவரோடு கலந்து பேசி, அவருக்கு தெளிவுபட விளக்கம் தந்தால்தான், நிலையான மாற்றம் கிடைக்கும். அவரை யோகத்தில் இணைத்துவிட்டால், உடற்பயிற்சி மற்றும் தவம் வழியாக, உண்மையான உற்சாகமும், மன உறுதியும் கிடைக்கும். எந்தவித தவறான பழக்கமும் நிச்சயமாக மாறி நல்வாழ்வு வாழமுடியும். எனவே, வாழ்த்துவது நல்லதுதான் எனினும், நேரடியான செயல்முறை மாற்றமும் தரவேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-
addict / bad habit / bless / body / careless / daily life / husband and wife / ignore / mind / problem / vazhga valamudan / வாழ்க வளமுடன் / வாழ்த்து
How i can fix my confidence, depression, sorrow, problems in my daily life?
September 28, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் ஓவ்வொருநாளும் சோகம், கவலை, பிரச்சனை சூழும் பொழுது, மனம் அமைதி கெடுகிறது. தன்னம்பிக்கையும் இல்லாதுபோகிறது எப்படி சரி செய்யலாம்?
பதில்:
சராசரி மனித வாழ்வில் அப்படி நிகழ நிறைய வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம். மேலும் புதிதாக உருவாக்கியும் கொள்கிறோம். காரணம் என்னவென்றால், மனம் என்பது என்ன? அதன் மகத்துவம் என்ன? என்பதெல்லாம் அறியாத காரணத்தால்தான். யாரிடமாவது மனம் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? மனம் என்பது எண்ணங்களின் வெளிப்பாடு. அது இங்கிக்கொண்டே இருக்கும் என்று சில வரிகளில் முடித்துவிடுவார்கள். நவீன கால விஞ்ஞானமும் மனம் என்பதை இன்னமும் முழுமையாக சொல்லிவிடவில்லை. ஆனால் உலகில் மனநல மருத்துவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னதுபோல ‘எல்லோரும் மனநலன் பாதிக்கப்பட்டவர்தான், ஆனால் வெளியே தெரிவதில்லை’ என்பது உண்மையோ என்று கருதவும் இடமாகிவிட்டது.
உங்கள் மனதை முதலில் புரிந்துகொள்வதுதான் முதல்படி. அதற்கு சாதாரணமான பயிற்சி உதவாது. மனதை பழக்கப்படுத்தும் எதுவும், மனதால்தான் செய்கிறோம் என்றாலும் அது அதன் போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு காட்டு யானையை, ஒரே நாளில் அல்லது சில நாட்களில் நம் போக்கிற்கு கொண்டவர முடியுமா?
அதேபோல மனதை விட்டுவிட்டும் நாம் வாழமுடியாது, அதை வேறெங்கோ வைத்துவிட்டும் வாழமுடியாது. நாம் அந்த மனதோடு இணையவேண்டும். மனதின் அலைநீளங்களில், அதன் இயக்கத்தில் கவனம் வைக்கவேண்டும். அதற்கு, யோகம்தான் சிறந்தவழி. எனக்கு அதெல்லாம் சரிப்படாது. யோகத்திற்கும் வரமாட்டேன் என்றால், உங்களுக்கான வழி ஏதுமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
யோகத்தில் இணைந்தால், தவம், தியானம் வழியாக மனதை ஆராய்கிறோம். மனம் என்றால் என்ன என்பதை, அங்கே புரிந்துகொள்கிறோம். அதன்வழியாக திருத்தம் பெற்று, மனதை எப்படி கையாளவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு, நாமும் நம் தவறுகளில் திருத்திக்கொண்டு, இயல்பாக வாழ முயற்சிக்க பழகினால், உங்களுடைய சராசரி வாழ்வில், அளவுமுறையோடு செயல்பட்டு, துன்பம், கவலை, குழப்பம், சோகம் சூழாத வாழ்க்கையை வாழமுடியும். தன்னம்பிக்கையோடு வாழமுடியும், அதை மற்றவர்களுக்கு தரவும் முடியும். எது இன்பம் என்பதை புரிந்து அதை அனுபவிக்கவும் முடியும்.
வாழ்க வளமுடன்.
-
activites / avoid / bad / confidence / daily life / depression / difficult / fix / inner / kundalini / level / limit / mind / problem / reject / sad / sorrow / understand / wrong / yoga
Why do you have to look for pleasure in living?!
September 12, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வதில் ஏன் இன்பத்தை தேடவேண்டியது இருக்கிறது?!
பதில்:
இன்பம் என்பதை மகிழ்போகம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். ஆனால் போகம் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் சிதைந்துவிட்டது என்பது உண்மை. போகம் என்றால் ஆணும் பெண்ணும் கூடிக்கலத்தல் என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே மகிழ்போகம் என்று சொன்னாலும், அதைத்தான் அர்த்தம் கொள்வார்கள்.
சித்தர்கள் சொன்ன விளக்கத்தின் வழியாக, மகிழ்போகம் என்றால், மனிதன் தன்னுடைய புலன்களால் அனுபவிக்கின்ற, உணர்கின்ற இன்பத்தைத்தான் குறிப்பாக தருகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஐம்புலன்களை தாண்டி இந்த உலக இன்பங்கள் என்ன அனுபவித்துவிடப்போகிறோம்? எல்லாமே நம் புலன்களுக்குள்ளாக அடங்கிவிடுகிறது. ஆனால் தன்னை அறிந்துகொண்டால், அதுதான் நிலையான இன்பம், பேரின்பம் என்ற உண்மையும் நமக்கு விளங்குவிடும் என்கிறார்.
ஆனால் நாம் வாழ்வில் இன்பத்தை தேடுகிறோம் என்பது உண்மைதான். ஏனென்றால், நமக்கு எது இன்பம் என்பதை உணர்தலாக பெறவில்லை. அந்த இன்பம் எங்கே இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவில்லை. அதனால்தான் நாம் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். மேலும் அந்த இன்பத்தை பெற்றுவிட்டாலும் கூட, அதுதான் இன்பமா என்று தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் மிகையாக அனுபவித்து அல்லது குழப்ப நிலையில் அதை ஏற்று, அதன் வழியாகவே துன்பத்தையும் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.
இறையாற்றல், நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் இன்பத்தை வாரிவழங்குவது உண்மையே. எப்போது துன்பம் வந்தாலும்கூட அதை தாங்கும் அளவிற்கு, நமக்கு துணை நிற்பது கூட இறையாற்றல்தான் என்பதை நாம் அறிவதில்லை. சிந்தனையாற்றல் மிகுந்த நாம், எது இன்பம்? அந்த இன்பம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அளவு முறையோடு அனுபவிப்பது? என்பதை அறிந்துகொள்ளமுடியும், ஏற்று செயல்படுத்திடவும் முடியும். ஆனால் இந்த உலகில் நாம் அதற்கு இடம் கொடுக்காமல், தேடிக்கொண்டே காலத்தை வீண் செய்கிறோம். வேதாத்திரி மகரிசி, ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்றும் சொல்லுகிறார்! உங்கள் வசதி எப்படி?!
வாழ்க வளமுடன்.
almighty / conscious / daily life / enjoyment / happiness / here and now / joyful / lifestyle / looking / materialistic / Nature / pleasure / searching / senses / siddhar / stable / understand




