CJ for You: calm

calm

Showing posts with label calm. Show all posts
Showing posts with label calm. Show all posts

Why does the mind often confuse me. No matter what you do, the mind refuses to budge. Shall we leave it as it is and go back to normal? Is it possible to separate the mind?


என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை? 


மனமும் மனிதனும் இணைபிரியாத கூட்டணி ஆகும். எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. விலகி நிற்கவும் முடியாது. ஏதோ ஒரு சில நொடி மனம் இல்லாதது போலவும், பிரிந்து நிற்பது போலவும் தோன்றலாம். ஆனால் அது மாயை. மனதை விட்டு விலகி நின்று வாழ முயற்சிப்பது என்ற செயல் கேலியானது. மனம் இன்றி மனிதனே இல்லை என்ற நிலையில், இது எப்படி நிகழும்? விலகினாலும் அது உங்களோடுதான் இருக்கும். மனம் இல்லை என்றால், அவன் ஒரு ஜடப்பொருளாகி விடுவான். அதாவது உயிரற்ற தன்மைக்கு போய்விடுவான் என்பதுதான் உண்மை.

இங்கே, நான் மனதை வென்றுவிட்டேன். மனதை தள்ளி வைத்துவிட்டேன், என் வழக்கமான வேலைகளை உற்சாகமாக கவனிக்கிறேன். எனக்கு எந்த தடையும் இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கென்று பயிற்சிகளும்கூட கிடைக்கிறது. நல்லதுதான். அப்படியான மாற்றம் பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அந்த நிலையில் அவர்கள், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் அதே நிலைமையில் தொடர்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி மனதை தள்ளி வைத்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. உண்மையாக இது மிகப்பெரிய ஏமாற்றுவித்தை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எனினும், ஏதேனும் ஒருவகையில் மனம் குறித்த விளக்கம், உங்களுக்கு கிடைத்தால் சரிதான். நல்லதும் கெட்டதும் அனுபவபட்டால்தானே தெரியும்? அதனால் நான் வரவேற்கிறேன்.

மனதை புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, அதன் இயக்கத்தோடு கலந்து, அதன் உண்மையை, அந்த மனதிற்கே புரியவைத்துவிட்டால் மட்டுமே, அது தானாக தன்னை முழுமை செய்துகொள்ளும். அப்போது அது உங்களோடு கைகோர்க்கும். இதற்கு தியானம் என்ற தவம், அகத்தாய்வு எனும் தற்சோதனை மிக முக்கியமாகும். 

மேலும் மனம் குறித்த உண்மைகள் அறிய, இந்த காணொளி உதவிடும்.


மனம் என்பது உங்களுக்கு இத்தனை அவசியமா? உண்மை விளக்கம் - Importance of the Mind

வாழ்க வளமுடன்.

-

If you are a child, you can always be happy? Is that correct?


குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?


பதில்: 

பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று  கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும்.  பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை. 

ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த  3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.

‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’

‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?

அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.

இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.

‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!

வாழ்க வளமுடன்.

-

How the practice of silence is the solution for the purity of mind?


மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.


பதில்:

மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சி மவுனம்(Silence) 
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.  மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்ட கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம். 

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்?  நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.  

எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.

யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மவுனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். 

அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.  ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.  

        நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.  அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மவுனம் இருக்க வேண்டும். 

மவுனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மவுனமாக இருப்பது நல்லது.  எல்லோரும் தூங்கும்போது மவுனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மவுனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  

இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும். 

அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், "நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்". "ஆமா, அறிவுத்திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"

"ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை. இது என்ன மவுனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?

 "மவுனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மவுனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும்.

மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும். மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் மவுனம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்!
-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Why some people looking calm but they extreme blast sometimes?


அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?

பதில்:
உங்களுடைய கேள்வியில், அமைதியாக இருக்கும் பலர் என்பதை விடவும், அமைதியாக இருப்பதுபோல நடிக்கும் பலர் என்பதுதான் சரியானது ஆகும். உலகவாழ்வில், நன்கு கல்வி கற்றவர், சிந்தனையாற்றல் மிக்கவர், தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், சுய சிந்தனை உள்ளவர், தற்சார்பு தன்மையில் வாழநினைப்பவர், தத்துவத்தை கரைத்து குடித்தவர் இப்படி பலரும், வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவே இருப்பார்கள். ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமா?’ என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருவதை தடுக்கமுடியாது. அவரைப்பார்க்கின்ற நாம், அவரை மதித்து அவரோடு நட்பு பாராட்டவே விரும்புவோம்.

‘என்னைவிட இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே, இவரோடு நாம் பழகிக் கொண்டால், நமக்கும்கூட அந்த அமைதியான பண்பு வந்துவிடும் அல்லவா?’ என்றுதான் நினைப்போம். பழகும் காலங்களில் கூட உங்களோடு, ஒரு வார்த்தைகள் பேசி நிறுத்திக்கொள்வார். நீங்கள் சொல்லுவதை எல்லாம் அக்கறையாக கேட்டுக்கொள்வார். அதாவது உங்களுக்கு அவ்வளவு மதிப்பு அளிப்பார், அப்படியாக காட்டிக்கொள்வார் என்பதுதான் உண்மை. நீங்கள் பழகுகின்ற அந்த காலம் முழுவதும் உங்களை எடைபோடுவார். ‘இவர் எப்படிப்பட்டவர்? எந்தெந்த விசயத்தில் இவர் பலவீனம்? இவரின் நல்லது என்ன? கெட்டது என்ன? இவரிடமிருந்து நமக்கு கிடைப்பது என்ன? லாபம் என்ன?’ என்று பல வகைகளில் கணக்குப்போட்டு, எடைபோட்டுக் கொண்டிருப்பார். இதெல்லாம் முடிந்தவுடனே, உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலும், ‘ஆமாய்யா, ஆனா இப்படி, அப்படி’ என்றவாறாக மாற்றுக்கருத்தை தெரிவிப்பார். அதை நீங்கள் கவனமாக செவிமெடுக்கவில்லை என்றால் ‘யோவ், உனக்கு எத்தனை தடவை, என்ன சொன்னாலும் தெரியாதாய்யா?’ என்று சினம் கொள்ளுவார். நாமும் இவ்வளோ அன்பாக பழகியவர், ‘நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுகிறார்’ என்று ஏற்றுக்கொள்ளவும் தயாராவோம். சரிதானே?!

இந்த மாதிரி நபர்களை எல்லாம், ரஜனீஷ் ‘பழைய கில்லாடிகள்’ என்று அழைக்கிறார். இவர் ஒருபோதும் மாறுவதே இல்லை. மாற்றிக்கொள்வதும் இல்லை. உலகில் நடத்தப்படுகின்ற பெரும்பாலான (யோகமுறை அல்லாத) பயிற்சி மையங்கள், இப்படியான ‘அமைதியாக நடிக்கும் நபர்களைத்தான்’ உருவாக்குகின்றன. சில வணிக மேம்பாடு பாடங்களின் கல்வி கூட இப்படியான பயிற்சியைத்தான் தருவதாக சொல்லுகிறார்கள். காரியம் ஆகும்வரை கையப்பிடி, காலைப்பிடி என்று செயல்படுவார்கள். இத்தகைய குணநலன், நடவடிக்கைகள் வெறுமனே பயிற்சியால் மாறுவதில்லை. ஏனென்றால் அவர்களின் மனம் அந்த அளவிற்கு திசைமாறி போயிருக்கிறது. கூடவே அவர்களுக்கான மாற்றத்தை ‘இந்த அளவில் போதும்’ என்று நம்புகிறார்கள். அவர்களுடைய வாழ்வில், ஏதேனும் ஒருநாளில், இதனாலேயே ஒர் பிரச்சனையை சந்திக்கும்பொழுதான் ‘நாம் ஏதோ தவறு செய்கிறோம்’ என்று உள்ளுணர்வாக உணர்வார்கள். அதுவரை நாம் சொல்லுவதை கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள். ‘எல்லாம் எனக்குத் தெரியும்மய்யா’ என்று விலக்கியும் விடுவார்கள்.

நாம் என்ன செய்யலாம்? இப்படியான, அமைதியாக நடிக்கும் நபர்களை, அடையாளம் கண்டு பழகவேண்டும். எடுத்த எடுப்பிலேயே நம்முடைய நல்லதை, கெட்டதை எந்த அளவிலும் அவர்களோடு பகிரக்கூடாது, நம் வார்த்தைகளில் கவனம் வைத்து பேசி, சிக்கிக் கொள்ளாத விழிப்புணர்வு வேண்டும். அது போதுமானது.

வாழ்க வளமுடன்
-

Can we change the day, time, place for the yoga practice? Is it Okay?


தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


பதில்:

சாதாரணமாக  கண்கள்மூடி தவம், தியானம் செய்வதற்கும், குருவிடம் தீட்சை பெற்று, யோகவழி தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலவே நாம் இயற்றும் வேதாத்திரிய தவங்களுமாகும். பொதுவாகவே யோகவழி தவங்களுக்கு, உங்களுக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்வது மிக நல்லது. அப்போதுதான் மனம் அமைதியில் இருக்கும். தவமும் சிறக்கும்.

இடம் என்பதை, நீங்கள் என்றுமே பயன்படுத்தாத, எப்போதாவது பயன்படுத்துகின்ற இடமாக இருக்கக்கூடாது. வழக்கமான வாழ்வில், எப்போதும் நிறைவாக பயன்படுத்தும் அறையாக, இடமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய படுக்கையறையும் பொருத்தமானதே. பலர் வந்து போகின்ற அறையாகவோ, வரவேற்பறையாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தவம் இயற்றுகின்ற நேரம் முழுவதும் எந்த தொந்தரவும், தடையும் ஏற்படுத்தாத நிலையும் முக்கியம்.

காலம் என்பது, ஒவ்வொரு நாளும், சூரிய உதயத்திற்கு முன்பான காலம் சிறப்பு. கூடுதலாக காலை, நண்பகல், மாலை வைத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேலாக தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நேரம் என்பதை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தவத்திற்கு 15 நிமிடம் போதுமானது. அதை நீடிப்பது உங்கள் விருப்பம். அதை தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நேரம் முழுவது உங்களுக்கு தடையோ, பிரச்சனையோ பிறரால் எழாத தனிமை அவசியமாகும்.

இந்த காலம், நேரம், இடம் இம்மூன்றையும், ஏதேனும் சூழ்நிலை கருதி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக், உங்கள் இல்லத்தில் விருந்தினர் வருகை என்றால், அவர்களை தொந்தரவும் செய்யாமல், ஏதேனும் மற்றோர் இடத்தில் தவம் செய்யலாம். ஆனாலும் உங்களுக்கு பொருந்தாத இடத்தில் தவம் செய்வதை தவிர்க்கலாம். தவம் இயற்றுவதற்காகவே வெளியிடங்களுக்கு, இன்னொருவர் வீட்டிற்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள மனவளக்கலை தவமையத்திற்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ செல்வது மிகச்சிறந்த வழியாகும்.

ஏதேனும் சூழலில், நீங்கள் வெளியூரில் இருந்தால், அங்கே தவம், தியானம் இயற்றுவதை தவிர்க்கலாம். புதிய இடங்கள் எப்படிப்பட்டவை என்ற அனுபவம் நமக்கு இல்லை என்பதால் விட்டுவிடலாம். அதுபோல பொது இடங்களில் தவம், தியானம் இயற்றுவதும் நல்லதல்ல.

ஏன் இப்படியாக மாற்றிக்கொள்ளக்கூடாது? அதற்கு சில காரணங்கள் உண்டு. தினமும் உங்கள் வீட்டில் ஒரே இடத்தில், தவம், தியானம் செய்துவந்தால், அந்த அறை, இல்லம் முழுவதும் நல்ல ஆற்றல்களம் நிறைந்திருக்கும். தவத்திற்கு அமர்ந்த உடனே மனம் லயித்து செய்யவும் முடியும். உங்கள் யோக பயணத்தில் நல்ல வளர்ச்சியை தந்துவிடும் எனலாம். பொதுவாக உங்கள் மனதில் தோன்றும் ‘உள்ளுணர்வுக்கு’ மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு பொருந்தாத இடம், காலம், நேரம் என்பதை தானாகவே உணர்த்திவிடும் என்று சொல்லலாம். அதை கணித்து மாற்றம் செய்து கொள்க.

வாழ்க வளமுடன்

-

Is it feasible being awaken without mind?


வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?

பதில்:

மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை.  சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம்  செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.

மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?

அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட? 

இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-