ஒரு ஓவியன் எழுதக்கூடாதாம்... வருத்தம் தரும் செய்தியோடு இந்த வார்த்தையையும் படித்தேன்... ஆம்... ஓவியனின் கைகள் வரையத்தானே வேண்டும்...
“நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“அப்படியா வேறே என்ன செய்யறீங்க?”
“ஐயா, நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“சரிங்க, வேறே என்ன வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்”
யாரையாவது புதிதாக சந்திக்கும்பொழுது இப்படியான கேள்விகளை நான் எதிர்கொள்வேன்... கடைசி வரை ஒரு ஆர்டிஸ்டாக இந்த உலகில் நீ வாழ்ந்திருக்க முடியாது, வாழவே முடியாது என்பதாகவே அவர் தன் கேள்விகளை கேட்பார்...
ஒரு ஆர்டிஸ்ட் நிலைமை அப்படித்தான் இருக்கிறது... உண்மைதான்... இன்னும் ஒரு சிலர்...
“வருமானம் எல்லாம் சரியாக இருக்கா?”
“எப்படி சமாளிக்கிறீங்க?”
இவர்கள் என் பதிலில் எதிர்பார்க்கும் எல்லாவகையான கூலி வேலைகளும்,(சம்பளம் வாங்கினாலும் அது கூலிதானே...) பார்த்து சலித்துப்போய், போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று புலம்பிவிட்டே ஓவியத்தை கையிலெடுத்தேன். அதுவரை இது சோறும், குழம்பும் தராது என்ற நினைப்பிலே கைவிட்டதை...
படிப்பாக இருந்தால் அதிக படிப்புவேண்டும்... அதிலும் தொடந்த படிப்பு வரிசை முக்கியம்... நிலம் விற்று, நகை அடகுவைத்து, மதிய சாப்பாட்டை தள்ளிவைத்து அப்பன் செலவு செய்து படிக்கவைத்த படிப்பு தகுதிமட்டுமே... சம்பளமோ மிக சொற்பம்...
அதிக சம்பளமிருந்தாலோ அவனுக்கு காலணி கயிறைக்கூட முடிச்சிடும் வேலைபார்க்க வேண்டும்...(நாகரீகமாக சொன்னேன்)
அறிவாளி முட்டாளிடம் வேலைபார்க்க வேண்டியிருக்கும். ஒன்றுமே தெரியாதவனிடம் உலக நடப்பை சொன்னாலும் ஒருவேலைக்கும் ஆகாது. எப்பொழுது வெளியே அனுப்புவானோ என்ற பயத்தோடு நாட்களை கழிக்கவேண்டும்...
“சம்பளம் வாங்கறேலே... செஞ்சா என்னா?” கேட்பார்கள்....
வருமானம் அதிகமில்லை என்றாலும், வருத்தமில்லை, சோகமில்லை, புலம்பலில்லை, மன் அழுத்தமில்லை. ஒரு மனிதன் பணத்தேவை வெளியில் கடன் வாங்காதிருந்தால்... இன்றைக்கும், நாளைக்கும் பணம் போதும்.
இன்று இறந்தால், நாளை அவனை நல்லடக்கம் செய்யும் அளவுக்கு இருக்கவேண்டும். திருமணமாகியிருந்தால் அவள் தன் அழுகை நிறுத்தும் வரைக்கும் போதுமானது, பிறகு அவள் தன் வழி பார்த்துக்கொள்வாள்...
சரி... இரண்டு தொழிலாளிகள் “யோவ் நானும் கூலிதான்யா” என்று கூறும்பொழுது ஏற்படுகிற அதே விசயங்கள் “நானும் ஆர்டிஸ்ட் தாங்க” எனும் போது கிடைப்பதில்லை...
ஒரு ஒவியன் எவ்வகையிலும் ஒரு புரவலரை சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது... ஓவியம் வரைய காலி வயிறும், அரை பட்டினியும் இல்லாத நிலைவேண்டும். தன் ஓவியத்தை கேட்டுவாங்கிக்கொள்ளும் அன்பர்கள் முக்கியம்... படுக்க இடமில்லாமல் இடத்தை அடைத்துக்கிடக்கும் ஓவியங்களை, ஊர் ஊராக தூக்கிக்கொண்டு அலைய நேரிடும். உயிர்கொடுத்து வரைந்த ஓவியத்தை, கடைசியிலோ, ஓரத்திலேயோ வைக்காமல் காட்சிபடுத்தவேண்டும்... அதை வாங்குபவர்கள் வரவேண்டும் என்பதும் முக்கியம்... இன்னொருவகையில், பத்திரிக்கைகளுக்கு ஓவியத்தை அனுப்பிவிட்டு, பிஸ்கெட்டுக்காக நாவை தொங்கப்போட்டு காத்திருக்கவேண்டும். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
இந்தவகை ஓவியனில் இருந்து நான் சற்று மாறுபடுகிறேன்... நான் மரசட்டத்திலோ, அட்டையிலோ ஓவியம் வரைவதில்லை. எல்லாம் கணிணி... இடத்தை அடைக்காத கோப்புகளாக... எது விற்குமோ, எது வாங்கிக்கொள்ளபடுமோ அந்தவகை... அந்த என் வகை கேரிகேச்சர்... இது எப்படி சாத்தியம்?
வாசல்கள் திறந்துதான் இருக்கிறது... நாம் மூடிய சாளரங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்... வேறெதோ வேலைகளில் பிழைத்தவன் திடீரெனெ ஒருசில நாளின் முழு ஓவியனாக மாறிக்கொள்ளமுடிகிறபோது ஓவியராகவே இருக்கவேண்டும் என்றே வளர்ந்த உங்களால் ஏன் இயலாது???
தமிழகத்தின் முன்ணணி ஓவியர் ஒருவரோடு பேசும் பொழுது, என்னைக்கேட்டு மிகவும் மகிழ்ந்து, என்கைகளை இறுகப்பற்றி...
“கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார்.
ஒரு ஓவியனை மதிக்கும் சமூகமும், தலைவரும் நம் நாட்டில்... மன்னிக்க, என் நகரத்தில் இல்லை... நகரத்தில் இருந்தாலல்லவா நாட்டில் தெரியவரும்.... அதோடு ஓவியம் தொடர்பான எந்த விசயமும் குழந்தைகளிடத்தில் சொல்லப்படுவதில்லை... கற்றுக்கொடுக்கப்படுவதில்லை... அப்படியிருந்தாலும் மேல்நிலைகல்வியில் அந்தப்பாடங்கள் இல்லை. கல்வி நிலையங்களும் கழுவி ஊத்தியாயிற்று... பிறகெப்படி ஓவியம் மதிக்கும் சமூகம் வரும்???
இயல் இசை நாடகத்தில் அரசும் ஓவியத்தை ஊத்தி மூடியாகிவிட்டது... ஓவியம் தொடர்பான அரசு வழங்கும் பட்டங்கள் விபரம் மக்களை சேர்வதில்லை.
இத்தகைய நிலையிலும் நான் குழந்தைகள், பெரியவர்களுக்கான ஓவிய வகுப்பை வரும் மே மாதம் முதல் தொடர்கிறேன். வருங்காலமாவது சிறப்பாகட்டும்.
என் பதின் வயதில் நான் கேட்டவை...
என் நண்பரின் அம்மா,
“பேப்பர்லயும், சொவத்திலயும் கிறுக்காதடா... கிறுக்குறவன் உருப்படமாட்டாண்டா” என்று சொல்லுவார்....
என் உறவினர் என்னை அருகில் வைத்துக்கொண்டே தன் நண்பரிடம்...
“எப்பப்பார்த்தாலும் வரைஞ்சிகிட்டே இருக்கான்பா...”
“வரையறானா, அப்ப விளங்காதே... பேசாம இவனை வேலைக்கு அனுப்புங்க”
என் வீட்டில்...
“வரைஞ்சி வரைஞ்சி குப்பைய போடுறதே இவனுக்கு வேலையாபோச்சு”
இந்த்மாதிரியான வசவுகளையும் மீறி ஓவியம் பழகி, பணம் செலுத்தி, வருடங்களையும், வயதையும் தொலைத்து, பட்டம் வாங்கி முழு ஓவியனாக வருபவன், தனக்கான செலவுக்காகவும், தன் வீட்டிற்காகவும் படும்பாடு அதிகம்...
அடுத்தமுறை “நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்று நான் சொன்னால் பாராட்டி மகிழுங்கள்...
கேள்விகளால் துளைக்காத அந்தநாள் எங்கள் இனத்திற்கு விரைவில் வரட்டும்...