February 2020 | CJ

February 2020

Artist life in the world


ஒரு தொழில்முறை ஓவியனாக என்னை நிறுத்திக்கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த சிறப்பான முன்னேற்ற நிலை. பல ஆண்டுக்காலமாக, பொழுதுபோக்காக சிலரின் அன்புக்காகவும் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவன் நான். கேரிகேச்சர்லைவ்ஸ் என்று ஒரு சுயநிறுவனம் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் குறிப்பில், அவர்களுக்கு பிடித்த அளவில், அவர்களின் முகம், பாவம் மாறாமல் வரைந்து தந்துகொண்டிருக்கிற இந்தகாலம், கிட்டதட்ட 17 ஆண்டுக்கால பயணம்.


கடந்த வாரத்தில் என் உறவினர் இல்லத்தில், ஒரு பெரியவரை சந்தித்தேன். நல்ல மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் பணியாற்றியவர், தற்போது பணி ஓய்வில், தான் கட்டிய 5 வீடுகளின் வாடகை வசூல்தான் இப்போதைய அவரின் பணி. என்னைவிட இருபத்தியாறு வயது கூடியவர். தன் மகளும், மகனும் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற பெருமையுடையவர். அன்றுதான் அவரை நேரில் பார்த்தேன். இதற்குமுன்பே அவரின் “மேற்கூறிய” தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன.
“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”
“நான் நல்லாயிருக்கேன். என்ன வேலைல இருக்கீங்க?”
“நான் ஓவியரா இருக்கேன். இதோ இந்த மாதிரியான ஓவியங்கள்தான் பாருங்க” என்று என் கைபேசி திரையை காட்டினேன்.
“அது சரி, வேறே வேலைல எதும் இல்லையா?”
“--------”
“இதுல என்னத்த கிடைச்சிட போகுது? வாழ்க்கை நல்லபடியா போகுதா?”
நான் உணர்ச்சிவசப்படாமல் “அதெல்லாம் போகுது போகுது” என்றேன்.
“போனா சரிதான்”
இனி பேசி பயனில்லை என்றபடி, நான் வாசலுக்கு வந்து நின்றுகொண்டேன். அந்த பெருசு வெளியேறினபிறகுதான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு ஓவியனைப்பற்றிய மதிப்பீடு இவ்வளவுதான். அடப்பாவிகளா. மனிதகுலத்தின் முதல் மலர்ச்சியே ஓவியம்தானடா? அதையே இப்படி செல்லாக்காசாக நினைத்துவிட்டீர்களேடா? கொஞ்சம் மனவேதனைதான். ஆனாலும் “நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது, தம்பி போவீங்களா” என்று கைப்பிள்ளையாக கடந்துவந்த பாதையில் அமைதியானேன்.

காலச்சுழற்சி பின்னோக்கி ஓடியது.
“வீட்டில இருக்கிற நேரமெல்லாம், வரைஞ்சிகிட்டே இருக்கான்பா”
“அப்படியா, அப்ப இவன் தேறமாட்டான்” சொன்னவர் சில ஓவியங்களை வரைந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். ஆனால் வேறு தொழில் செய்துகொண்டிருந்தார்.

“சுகு, நீ என்ன இவனைமாதிரி வரைஞ்சிகிட்டே இருப்பியாம். ஓவியன் வரையறவன் விளங்கமாட்டான்பா” நண்பனின் அம்மா சொன்னார்.

என் வீட்டில், என் தாயும், தந்தையும், சகோதரிகளும், சகோதரனும் ஓவியத்தின் பொருட்டு ஒரு குறையும், குற்றச்சாட்டும்  வைத்ததில்லை. நான் பல நேரங்களில், இத்தகைய, அவர்களின், என் ஓவியம் குறித்தான ஏற்றுக்கொள்ளல் தன்மை குறித்து வியந்திருக்கிறேன்.

சமீபமாக ஓவியம், ஓவியன் குறித்த சமூக நிலை, கீழிறிங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட படுத்துவிட்டது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுவது, சமுக அன்பர்கள் கேட்டுக்கொண்டதறு இணங்க வரையும், பழங்கால முறையில் வரைவதும், நவீன முறையில் கணிணி துணை கொண்டு  வரைவதுமான ஓவியங்கள் மட்டுமே.

தனக்கு தெரிந்ததை, தன் அனுபத்தை, தன் எழுச்சியை வரைந்து, காட்சிப்படுத்தி, அதற்கென்று காத்திருக்கும் அன்பர்களுக்கு விற்பனை செய்யும், ஓவியகலைஞர்களின் போக்கு தனி. அத்தகைய ஓவிய வட்டத்திற்குள் நான் நுழைந்ததில்லை. இனி நுழையப்போவதும் இல்லை.

என்பாதையும், பயணமும் தனியானது. தனி ஒருவன், ஓவியனாக முகமறியா அன்பருக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி வரைந்து, அதற்கான விலையில் பணம் பெறுவது என்ற அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறி, தொழிலாக செய்துகொண்ருக்கும் ஓவியர் என்ற வரிசையில் நான் நின்றிருப்பது எனக்கு பெருமையே.
“நீ மட்டும் எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது? ஏன் என்னால் முடியவில்லை?”
“இந்த முறையில்மட்டுமே, வாழக்கை உங்களால் ஓட்ட முடிகிறதா? எப்படி?”
“எனக்கும் இந்த வழியை காட்டிகொடுங்களேன்”
புன்னகை மட்டுமே என்பதிலாக இருந்திருக்கிறது.

சமீபமாக என்று ஆரம்பித்தேன் அல்லவா? அதை இன்னும் விளக்குகிறேன். கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் வரையும் நான்பார்த்த எல்லா வாடிக்கையாளரும், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்பும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மூலம் வரும், சகஜமாக எடுத்துக்கொள்வேன். ஆனால் வேலைகொடுத்த அனைவருமே அப்படி செய்தபோது கொஞ்சம் கலங்கித்தான்போனேன்.

ஒரு ஓவியம் என்பது, படைத்தல், அதில் குறைகள் என்று கண்டுபிடிப்பவனும், அதை இப்படி திருத்திக்கொடு என்று கேட்பவனும் முட்டாள். கொஞ்சமும், ஓவியம் குறித்த எந்த அனுபவமும் இல்லாதவன் என்றும் நான் சொல்லுவேன். Critic என்று சொல்லபடுபவனும் முட்டாளே. இயற்கையை குறைகாண்பானா அவன்? குறை நிறைகள் தான் இயற்கை.

Quora வில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். என்றைக்கு ஒருவன் முதன் முதலில் ஓவியம் வரைந்தானோ அவன் ஓவியன். அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்தான் Critic

ஒரு மனிதனின், ஒருபக்க காது வித்தியாசமிருக்கிறதே? நீ என்ன செய்தாய்? ஒட்டுபோட்டுக்கொண்டாயா?
ஒரு மனிதனின், ஒரு கண் சிறுத்திருக்கிறதே? இமைகளை விரிக்கச்சொல்லி மருத்துவம் பார்த்தாயா?
சிரித்தால் இதழ் ஒருப்பக்கம் கோணலாக போகிறதே, வாழ்வில் சிரிக்காமலேயேவா நாட்களை கடத்துகிறாய்?
நிறுத்து, நீ ஓவியன், காசுக்காக வரையும் ஓவியன், நீ கொடுப்பதை நான் காசு கொடுத்து பெற்றுக்கொள்ள நாங்களென்ன முட்டாளா? எங்களுக்குள்ளும் ஓவியன் இருக்கிறான் (?!) நான் எப்படி கேட்கிறேனோ அப்படி வரைந்துதருவதுதான் உன்வேலை.  படைப்பு கிடைப்பு என்று பினாத்துகிறாயே?!

எத்தனை அடி? எவ்வளவு அடி? யப்பா?

ஒரு கணிணி அல்லது கைபேசி விளையாட்டில், எதிரியை கொன்று குவிக்க, குவிக்க மீண்டும் மூண்டும் முளைத்தெழும் எதிரியைப்போலவே, ஒவ்வொரு முகமுடியை மாட்டிக்கொண்டு, அதே வாடிக்கையாளர் வந்து எனக்கு வேலை கொட்டுப்பதுபோலவே எனக்கு திகிலாக இருக்கும். இன்னுமா இது முடியலை என்று என் மனம், பழைய வேலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திடுக்கிடச்செய்யும்.

ஓவியத்தில் திருத்தமெல்லாம் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று பலதுறைகளைச் சார்ந்தோர் எனக்கு சொன்னபோதிலும், வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுகிறோம், அதனால் அவர்களின் திருப்திக்காக சில திருத்தம் செய்வதில் தவறில்லை என்பது என் கருத்தாகவே இருந்தது. ஒரு ஒளிப்பட கருவி, (Camera) இருப்பதை எடுத்துக்காட்டும் என்ற அளவில் கூட, “ஒருஓவியனுக்கு” மதிப்பில்லாமல் போனது அதிசயமே.

இதில், இப்படியும் கேட்பார்கள். “எனக்கு Soft copy மட்டும் போதும்” இதை எங்கே, யாரிடம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதன் பொருள் என்னவென்றால் “ நீபாட்டுக்கு உனக்கு தகுந்த விலையை சொல்லாதே, கொஞ்சம் சீப்பா விலை சொல்லு” (நான் என்னய்யா, வாழைப்பழ கடையா போட்டிருக்கேன்?) முழு ஓவியம், பெரிதாக வரையாமல், எப்படி சீப் சாப்ட் காப்பி கொடுக்கமுடியும்?!

திரைப்படத்தில், செந்தில், கவுண்டமணி கடத்தல் பேரம் பேசுவதுபோல, இப்படியான வாடிக்கையாளர்களுக்கு, எத்தகைய விலை சொன்னாலும், அது சீப் ஆகாது. இன்னும் குறை, அட்ஜஸ் பண்ணு. ரவுண்டப் பண்ணு... எல்லா மொழிகளிலும் கேட்பார்கள்.

திருத்தம், திருத்தம், திருத்தம் ?! மாற்றம் ஒன்றுதானே மாறாது :P போதுமடா சாமி என்றாகிவிட்டது.  எப்போதுமே, நாம் நம்முடைய வாழ்வில் சந்திக்கும் ஓவ்வொரு நபருக்கும் ஒரு தொடர்பு, விட்டகுறை தொட்டகுறை என்பது நிச்சயமாக இருக்கிறது. இருந்தாகவும் வேண்டும் என்பதுதான் இந்த இயற்கையின் விதி. தானாக வந்ததாகவும் இருக்கலாம். தானே சேர்த்ததாகவும் இருக்கலாம். இதன் மூலமாக, நம் வினைப்பதிவுகள் ஓவ்வொன்றாக கழிகின்றன. திருத்தம் பெறுகின்றன. அவர்கள் மூலமாக அவன் சுத்தம் செய்யபடுகிறான். உண்மையாகவே நான் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய சுயத்தை பரிசோதனை செய்ய வாய்ப்புத்தந்தவர்கள் அவர்களே. என் பலத்தையும்,  என் பலவீனத்தையும் எனக்கு வெளிச்சம்போட்டு காட்டி, என் சுயபலத்தை உணரச்செய்தவர்கள். நன்றி, நன்றி, நன்றி என் வாடிக்கையாளர்களே.

இந்த 17 வருடங்களில், 12 வருடங்கள் பெரும்பான்மையான வாடிக்காளார்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறேன். ஓவ்வொருவரும், கடைசியாக, “மன்னிக்கனும் சார், உங்களை ரொம்ப கரைக்சன் கேட்டு நோகவைத்துவிட்டேன், பொறுமையாக எல்லாம் சரி செய்து கொடுத்ததற்கு நன்றி” என அவர்களே தானாக சொல்லும்படிச்செய்து, நட்பாகவே முடித்துவைத்திருக்கிறேன். தற்போதைய என்னுடைய பலம், இதுதான். அதோடு நம்பிக்கை. உடனுக்குடன் தகவல். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள். அவர்களே வியந்து பாராட்டுமளவுக்கு. நான் இந்த இடத்தில்தான் நிமிர்ந்து நிற்கிறேன்.

எல்லாம் நிகழ்வன, நிகழ்ச்சியே, தோற்றமாயைகளே, எங்கள் வேதாத்திரி மகரிசியும், மகாகவி பாரதியும் சொல்லியதை, அனுபவங்களாக, ஆராய்ச்சியால் கண்ட உண்மையில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மனிதன் பல நிலைகளில், பலதரங்களில், பல காலங்களில் அனுபவித்து வாழலாம், ஆனால் பிறப்பு எப்படி நிகழ்ந்ததோ அப்படி, இறப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இறப்பை வெறுக்கலாம், மறக்கலாம், வராது என்று நம்பலாம், மருத்துவத்தால், யோகத்தால், உடல் சாதனையால் தள்ளிவைக்கலாம் கொஞ்சநாளைக்கு... ஆனால் இறப்புக்கான அந்த டிக்கெட்டை யாராலும் வாபஸ் பெற முடியாது. அப்படி போய்ச்சேர்ந்தவர்களின் தோள்கள்மீதுதான் நாமும் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான், என் பயணத்தில் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கதொடங்கியதாக எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமானால், இந்த பயணத்தையும், இலக்கையும் நான் தீர்மானிக்கவில்லை. நான் அதை தொடங்கவும் இல்லை. நான் ஒரு பயணி, ஏதோ ஒன்றை என்னை எடுத்துச்செல்கிறது. நான் அதனிடம் என்னை சில வருடங்களுக்கு முன் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  அந்த பயணத்திற்கும், அந்த வழியில் நான் காணப்போகும் காட்சிகளுக்கும், சென்றடையும் இலக்குக்கும் நான் மனம் விரித்தும், மனம் ஒடுங்கியும், காத்திருக்கிறேன், விழிப்புநிலையில். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி.

வேலையை எளிமையாக்குவதற்கு ஓப்படைப்பதைத்தவிர வேறு வழியில்லை.