November 2013 | CJ

November 2013

chennai-live-caricature-and-rainy-day


சாலிக்கிராமம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். வெளியே நல்ல மழை, நானும் ஏற்கனவே இங்கே வரும் வழியில் நனைந்திருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பேருந்து கிளம்ப அது மைலாப்பூர் செல்வதாக சொன்னார்கள்.

அடிக்கடி சென்னையை சுற்றியதில் ஓரளவு இடம் யூகிக்கமுடியும் என்பதால், மைலாப்பூர் எங்கே, RK சாலை எங்கே என்று மனதிற்குள் ஓடியது... பனகல்பார்க், தி.நகர், TTK சாலை இதில் இறங்கலாம் என் யோசித்தேன்.

நடத்துனரிடம் கேட்டேன்...
“RK சாலை போகணும், ஹோட்டல் சவேரா”
“டைரக்டா அங்க போக பஸ் இல்லை சார்.. மைலாப்பூர் போய்ட்டு, இன்னொரு பஸ்ல TTK ரோடு போய் போய்டுங்க...”
“வழில வேறே எங்கயாவது இறங்கமுடியுமா”
“நீங்க எங்க வேனாலும் எறங்கிக்கங்க... சவேரா போகமாட்டீங்க”
“ஆட்டோல”
“சார் ஏன் சார், காச வீண் பண்றீங்க...”
பதினைந்து ரூபாய் சீட்டு கொடுத்தார்... இந்த பேருந்தும் வழியெல்லாம் நீந்தியது... சாலை, தொகுப்பு குடியிருப்பின் தளங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது மழை நீரால்...CIT காலனி கடந்து TTK சாலை என்று ஒரு பெயர்பலகைகாட்டியது. ஆனால் பேருந்து வலதுபக்கமாக திரும்பியது...
“சார், இங்கே இறங்கலாம் போல இருக்கே”
“என்ன?”
“TTK சாலை தானே அது?”
“சார்ர்ர்ர்ர்ர்ர்ர், அது இங்கதான்தான் ஸ்டார்ட் ஆகுது... இங்கே இருந்து RK சாலைக்கு இன்னிக்கி நீங்க போய் சேரமாட்டீங்க”

நான் அமைதியானேன்... புனித மேரி சாலை வந்து, மைலாப்பூர் வந்து சேர்ந்தேன்...

-----------------
மைலாப்பூரில் ஆட்டோ பிடித்தேன்... மீட்டர் இருந்தது, தூறிக்கொண்டிருந்த மழையில் நனையாமலிருக்க துணியால் சுற்றப்பட்டிருந்தது.
“ஹோட்டல் சவேரா”
“உட்காருங்க”
“மீட்டர் போடலை?”
“மழைக்கு பிராப்ளமா இருக்குசார்... ஓடல”
“பொய்யெல்லாம் சொல்லாதீங்க, சண்டேனா லீவா? சரி. எவ்வளவு?”
“நாற்பது ரூபாய்”
“முப்பதுதாரேன்...”
”மீட்டர்ன்னா இந்த மழைல ஜாஸ்தியாவே வரும் சார்”
“சரி கிளப்பு”
தேங்கி கிடந்த மழை நீரில் ஆட்டோ மட்டுமில்லாமல் எல்லா வாகனங்களும் நீந்தி வந்தன. நெரிசலில் தாமதமும் ஆகிற்று. TTK சாலை வந்து, RK சாலை வந்தாயிற்று... நாற்பது கொடுத்தேன்...

“கண்டிப்பா முப்பதுதான் தரனும். ஆனா நீந்தி வந்தீங்கல்ல... அதான் நாற்பது” என்றேன் நான்!

boon-from-friendship


சென்னை, மாம்பலம்...காலை,
பாரதிமணி அய்யாவுக்கு  அழைப்புவிடுத்தவுடன், “சந்தோசம், ஆனா நான் நாரதகான சபாவிலே நாடகத்துக்கு போறேன். அதுக்கு பிறகுதான் வீடுக்கு வருவேன்”
“ஓ. அப்போ நான் கொஞ்சம் லேட்டாவே வரேன் அய்யா”
“உங்களுக்கு அது பக்கம் தானே, சபாவுக்கே வந்துடுங்க... அங்கே பார்த்துக்கலாம். நம்ம நண்பர்களையும் பார்த்துபேச வாய்ப்பு கிடைக்கும்”
“சரி, என் லைவ் கேரிகேச்சர் ஈவண்ட் எப்படியும் 6 மணி ஆகிடும்னு நினைக்கிறேன்... முடிஞ்சதும் சபா வந்துடறேன் அய்யா”

ஹோட்டல் சவேராவில் அன்றைய நிகழ்வின் கடைசி ஓவியத்தை வரைந்துமுடித்து வெளியே வர மாலை 6.30 ஆகிற்று. என் கைபேசி மூலமாக, கூகுள் மேப்பில் சபாவின் இடத்தை தெரிந்துகொண்டேன். காரில் போனால் 7 நிமிடம் ஆகும் என்றும் காட்டியது. நடந்தா 15 நிமிடத்தில் போகலாம் என்று கணக்கிட்டு, TTK சாலை வந்தேன். வழியில் ஒரு ஏலக்காய் தேனீர்... மழைத்தூறலாக இருந்ததில் சாலையில் நெரிசலும் இருந்தது... கவனமாக சாலை கடந்து, நாரதகான சபாவிற்குள் நுழைந்தேன்...
பெருங்கூட்டம் இருக்கலாம் என்று நினைத்தால் அளவான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளேயும் அளவான பார்வையாளர்களே இருக்கலாம்... அங்கேயிருந்த சிற்றுண்டி கடையில் இருந்தவரிடம் விசாரித்தேன்...
“சும்மா போலாம் சார். திரையில் நடிக்கிறவங்கள பார்க்கனும்னா பின்னாடி உள்ள அறைக்கு போய்டுங்க... ஆனா இன்னும் அரைமணி நேரத்தில் இடைவேளை விட்டுடுவாங்க..”
“அவங்களை தொந்தரவு செய்ய விரும்பலை... வெளியே காத்திருக்கிறேன்” என்றேன்...

அழுத குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வெளியே வந்தார்... நாடக சப்தம் அறை விட்டு வெளியே கேட்டது...
அடுத்து ஒரு தம்பதி நேரமாச்சி, கிளம்பலாம் என்ற வகையில் வெளியே கிளம்பிவந்தனர்...
இதற்கிடையில் நான் பாரதி மணி அய்யாவுக்கு ஒரு அழைப்பும், இரு குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டேன்... அதன் வாயை அப்போதைக்கு அடக்கி வைத்திருப்பார் என்பது தெரிந்தும்...
நான் வெளியே எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று தெரியாதவகையில், உள்ளே நாடகத்தை பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன்...

கடைசி இருக்கைகள் வழியாக, திரை பக்கம் பார்த்ததும், சினிமாவோ என்றெண்ண தோண்றியது... அவ்வளவு அருமையான செட்... ஆஹா... உள்ளே வந்தபோதே, உள்ளேயும் வந்திருக்கலாமே என்று வருந்தினேன்...  கடைசிக்கு மூன்று வரிசை முன்பாக உட்கார்ந்து நாடகத்தை ரசித்தேன்... இது ”சிலிக்கன் வாசல்” என்பதும், இரா. முருகன் எழுதியது என்பதனையும் நான் அறியேன்... நாடகம் பார்த்துக்கொண்டே, பாரதிமணி அவர்களின் தலை தெரிகிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தேன்... அரைமணி ஆனதே தெரியாத நாடக ஓட்டம்... அருமை... எல்லோருமே பாராட்டிவிட்டதால் நான் தனியாக சொல்ல ஏதுமில்லை... எனக்கு ஒரு நல்ல அனுபவமாக உணர்ந்தேன்...

அடுத்த “எழுத்துக்காரர்” இடைவேளையில் கொஞ்சம் முன்னே நடந்து பாரதிமணி அவர்களை தேடினேன்...
”சுகுமார்ஜி” அழைத்த குரல் புதிது... ஹா.. இது யாரு? என்று பார்க்க... நம்ம வெங்கட சுப்பிரமணியன் ராமமூர்த்தி... (இவர் பெயரை டைப் செய்தாலே ஒரு சோடா குடிக்கவேண்டும் என்று நண்பர் பரணிராஜன் சொல்லுவார்)
“ஆஹா. சந்தோசம்... எப்படி இருக்கீங்க?” நல விசாரணைக்குப்பிறகு
“பாரதிமணி அய்யாவை தேடிட்டிருக்கேன்”
“இதோ இங்கே தான் என்கிட்டே உட்கார்ந்திருக்கார்... வந்துடுவார்”
என்னைப்பற்றி, என் ஓவியம் பற்றி பேசியவாறே எல்லோரிடமும் கைகொடுத்தேன்... சந்திரமொளலீஸ்வரன் விஸ்வநாதனும் அருகில் அமர்ந்திருந்தார்...
“சுகுமார்ஜி, பாரதிமணி வர்றார் பாருங்க”
“ஓகே... இருங்க அவர்ட்ட சொல்லிட்டு வந்துடறேன்”

பாரதிமணி அய்யாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கையில்...
“ஏன் அங்கே போய் உட்கார்ந்திருகீங்க, இங்கே வந்துடுங்க..” என் இருக்கையை மாற்றி, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்தேன்...
எழுத்துக்காரர் நாடகத்தை அருகில் இருந்து ரசிப்பதும் சுகமாக இருந்தது... நிகழ்கால நடப்பினையும், அதிலே ஒரு செய்தியையும் வைத்திருந்தது அருமை.

நாடகம் முடிந்து எழுகையில், திரை நட்சத்திரங்களையும் காணமுடிந்தது... ஆனால் யாரோடும் பேசமுயலவில்லை... ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு நடிகர் நாசரை பார்த்துப்பேசி, ஒரு ஆட்டோகிராப் கேட்டதில்... மனுசன் என்னை மேலும் கீழும் பார்த்த பார்வையில் நான் அங்கேயே கரைந்துபோய், இனி யார்கிட்டயும் இந்தமாதிரி கேட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்...

நாடகவாயிலின் வெளியே எழுத்தாளர், கட்டுரையாளர் ஞானி நின்றிருந்தார்... ஒரு யோசனையோடவே அவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொண்டு,“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்... தன் நண்பர்களிடம் பாரதிமணி என்னை அறிமுகப்படுத்திவைத்தார்...மிகுந்த கொடுப்ப்பினையாக உணர்ந்தேன்... போட்டோ பிடிக்கும் வைபவம் அப்போதுதான் நிழந்தது... முடிந்தளவு ஒதுங்கியிருந்தாலும், அந்த ஃபிரேமுக்குள் நானும் இருப்பதை அறிந்தேன்...

எல்லோரும் கிளம்ப சபா காலியானது... நானும், பாரதிமணி அய்யாவும் மட்டுமே... இதற்கிடையில் இன்னொரு சுவரஸ்யமான மனிதரும் சேர்ந்துகொண்டார்... அவர் பற்றி தனியாகக்கூட ஒரு கட்டுரை எழுதலாம்...

திடீரென்று கொட்ட ஆரம்பித்த மழைக்கு இரண்டு சேர்களை தூக்கிக்கொண்டு ஓரமாக நான் ஒதுங்க, பாரதிமணி அய்யாவும் வந்தார்... அடை மழை, அரைமணி நேரம்... இடைப்பட்ட நேரத்தில் எத்தனைமுறை பைப் பற்ற வைத்தார் என்றெல்லாம் எண்ண முடியவில்லை... கால் டாக்சிக்காக, பேசிக்கொண்டே காத்திருந்ததில் நேரம்போனதே தெரியவில்லை...

என் இரவு ஜாகை பாரதிமணி அய்யா வீட்டில்தான்... நட்பு கொடுத்த வரம்...