November 2022 | CJ

November 2022

Positions of the human mind in the world!


 உலகியலில் மனித மன நிலைப்பாடுகள்!

தானும் தனதும்!

பற்றுக பற்றற்றான் பற்றினை -  என்பது ஆசான் திருவள்ளுவர் வாக்கு. பொதுவாகவே மனிதருக்கு, தான் என்ற அதிகார பற்றும், தனது என்ற பொருள்பற்றும் உண்டு. இந்த குறள் சொல்லும் காலமே, இரண்டாயிரம் ஆண்டுகள் என்றால், அதற்கு முன்பே, ‘தான் தனது’ என்ற பற்று இருந்திருக்கிறது என்பதும் அர்த்தமாகிறது அல்லவா?

வேதாத்திரி மகரிசி அவர்கள், தான் தனது என்பதை, தம்பதிகள் என்று சொல்லிவிட்டு, இவர்களுக்கு பிறந்ததே பேராசை, சினம், கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என ஆறு குழந்தைகள் என்றும் சொல்லுவார்.

இந்த ஆறு களங்களும் நம்மிடமிருந்து நீக்கிடவே, தற்சோதனை என்ற பயிற்சியையும் வேதாத்திரியத்தில் இணைத்து தந்திருக்கிறார். யோக வாழ்வில் சிறக்க இந்த தெளிவு அவசியமாகிறது!


பற்று

வேதாத்திரிய அன்பர்கள் ஓரளவேனும் இந்த விளக்கங்களை பெற்று, தன்னை தன் தற்சோதனை மூலமாக தங்களை காத்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். ஆனால் உலகில் பெரும்பாலோர் இதில் மூழ்கி தத்தளிக்கிறார்கள் என்றால் மிகையில்லை. தானும், தனதும் தவறல்லவே என்று அவர்கள் நம்மோடு வாதிடவும் செய்வார்கள். மேலும் இது மனிதனுடைய இயல்பு என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

தான் தனது என்ற பற்றா மனிதனுக்கான இயல்பு? இல்லவே இல்லை. ஆனால் அதை அறியமுடியாத மயக்கத்தில் மனிதமனம் இருக்கிறது, அப்படியே வாழ்ந்து கொண்டும் வருகிறது.


பற்றில்லாமல் வாழமுடியுமா?

உலகவாழ்வில், இருப்பதையெல்லாம் கொடுக்கும் பரந்த மனப்பான்மையில் யாருமே வாழமுடியாது. வாழும் எல்லோருக்கும், வாழும் காலம் முடியும் வரை எல்லாமும் வேண்டும். ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது, தேவைக்கும் மேலாக சேர்த்து வைப்பதில் பிரயோஜனமில்லை!

அடிப்படை தேவை என்ன? எவ்வளவு எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும்? அடுத்தடுத்த பிரச்சனை எழுமானல் இது போதுமானதா? என்ற தெளிந்த அறிவில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, வெறுமனே சேமிக்காமல், அதில் மிகைப்பற்று இல்லாமல், பகிர்ந்தளிப்பது நல்லது தானே?! ஆனால் உடனடியாக யாருமே இந்தக் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்பது உண்மை!

இந்த உலகில் வரும்போது கொண்டு வருவதுமில்லை, போகும் பொழுது கொண்டு செல்வதும் இல்லை. ஆனால் நம்மோடு, நம் ஆன்மாவோடு எப்போது வந்துகொண்டே இருப்பது, நம்முடைய கர்ம வினை. அவ்வினைகளின் சுமையால் பிறந்தோம். வினை தீர்த்தால் முழுமையில் சரணடைகிறோம். ஆனால், வினை தீர்க்க யோகத்தை அண்டாது, வழக்கம்போல் தான் தனது பற்றில் மூழ்கினால், சுமை கூடுமே தவிர குறைக்க வழி உண்டா?


உழைக்காமல் ஏதுமில்லை!

இந்த உலகில், யாருமே யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்பது உறுதியானது. காட்டில் வாழும் மனிதனுக்கு பசியெடுத்தால், மரத்தின் கனிகளை பறிப்பானேயன்றி, கையேந்த மாட்டான். ஆனால் காட்டை அழித்து நகர அல்லது நரக வாழ்க்கைக்கு வந்துவிட்டபிறகு, காடும், வனமும், வயலும், மரமும் அடுத்தவர்களின் சொத்தாகிவிட்டதே. இன்னும் சிலர் எத்தகைய ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்களே தவிர ஏதும் கேட்கமாட்டார்கள். 

ஒருவித இயலாமை என்ற சூழல் வருத்தமில்லாமல், அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலைக்கு வரவே மாட்டார்கள். தன்னுடைய உடலை விட மனம் அவர்களுக்கு பெரும் பாரமாக இருக்க, யாரேனும் எனக்கு உதவ முடியுமா என்று வாய்திறக்காமல், கண்களால் கூட பேசக்கூடும். 

ஆனால், மிக முக்கியமாக, இந்த உலகில் உழைக்காமல் ஏதும் உனக்கு கிடைக்காது என்ற அறிவுறுத்தல் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. ஏதாவது உனக்கு வேண்டுமென்றால் உழைத்து அதை கூலியாக பெற்றுக்கொள் என்று அறிவுறுத்தப்பட்டுவிட்டது. இதனால் உலகில் சோம்பேறிகள் இருக்கமாட்டார்கள் என்பது மேற்கத்திய பாலபாடம்!

ஆனால், குழந்தைமுதல் 14 வயது பாலகர்களும், 60 வயதைக் கடந்த முதியவர்களும் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு உழைக்கும் வலு உள்ளவர்கள் உறுதுணையாக அல்லவா இருக்கவேண்டும்? ஆனாலும் எப்படியோ குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோரால் ஆதரவு கிடைத்துவிடும் என்பது உண்மைதான்.

ஆனால், மனிதர்களில் ஓவ்வொருவரும், தனித்தனியாக திறமை பெற்றவர்கள் அல்லவா? ஒரு நிறுவனத்தின் கார் போல, கைபேசி போல ஒரே மாதிரி இயங்கும் தன்மை இல்லையே?! அதேபோல, அவர்களின் உடலும், வலுவும், ஆர்வமும் வித்தியாசமானதே. இவர்களை எப்படி ஒருமுகப்படுத்தி உழைக்க வைக்கமுடியும்? மேற்கத்திய நாடுகளின் கல்வி அவர்களை ஒரே வடிவான தன்மைக்கு கொண்டுவருகிறது. ஆனாலும் கல்விக்குப்பிறகு, பொதுவாழ்வில் வரும்பொழுது ‘அது’ வேலை செய்வதில்லை என்பது உண்மை.


சுயம் - தன்மானம்

நான் உழைக்காமல் எதும் பெற மாட்டேன் என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடிந்ததை செய்கிறேன், பெறுவதை பெறுகிறேன் என்பது சிலரின் நிலைப்பாடு. இதுதான் என்னால் முடியும், ஏதேனும் கொடு என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடியாத சூழ்நிலை, அதை அறிந்து ஏதேனும் கொடு என்பதும் சிலரின் நிலைப்பாடு. உழைக்கின்ற எண்ணமே இல்லாதவனின் நிலைப்பாடு இருப்பதை தட்டிப்பறிப்பது. 

தட்டிப்பறிப்பதுகூட தானாக வரவில்லை, அப்படியான நிலைக்கு அவனை தள்ளிவிட்டதில், முந்தைய சமூகத்திற்கு பொறுப்பு உண்டு என்று வேதாத்தி மகரிசி தன்னுடைய,

‘குற்றவாளி பாவியென்று ஏதுமில்லை உலகிலே, குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்’

என கவியில் சொல்லியுள்ளார்.


யாருக்கு பகிரலாம்?!

தன் தேவை போக,  நிறைவில் இருக்குமானால், உண்மையிலேயே யாருக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பகிர்ந்தளிக்கலாம். பொருள் இல்லாதோரின் வருத்தம், எவ்வகையிலேனும் உங்களையும், இந்த சமூகத்தையும் பாதிக்கும் என்பது இயற்கையின் விதியே! 

இருப்பதை கொடுப்பது தேவையில்லை. உங்களுக்கே பற்றாக்குறை என்றால் கொடுக்க வேண்டாம். ஆனால் மிகையை தருவதில், தன்னளவில் இது போதும் என்றால், மீதியை கொடுக்கலாமே?

ஆனாலும் இன்னும் வேண்டும், வேண்டும் என பெற்றுக்கொள்ளும் மனநிலையில், இருப்பவர்களுக்கு, பகிர்ந்து கொடுப்பதற்கு ஆர்வம் எழுவதே இல்லை!


இயற்கை நீதி

ஒருவகையில் உங்கள் தேவையை நிறைவேற்றியதில், உங்கள் உழைப்பு இருந்தது எனினும், அதை தந்ததில் இயற்கையின் நீதியும் உண்டு. சரியான உழைப்புக்கு சரியானதும், தவறான உழைப்புக்கு தவறான நீதியும் அமைவதுண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, நீங்கள் ஒருவருக்கு பகிர்ந்தளிக்கும் பொழுது, அதுவும் இயற்கை நீதியில் வரவு வைத்துக்கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு சூழலில் அது திருப்பி அளிக்கப்படுவதும் உண்டு என்பதை மறவாதீர்கள்!


இரட்டை மன நிலை!

நம் வேதாத்திரிய சானலில், கடந்த இரண்டு நாட்களாக, தினமும் நடத்தும் வாக்குப்பதிவில் கிடைத்த பதில்கள் பார்க்கலாமா?!

உங்களிடம் பணம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; போனா போகுது என்று பத்து ரூபாய் கொடுப்பேன் 58%

அதே பணம் என்னிடம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; எப்படியும் 50 ரூபாய் தந்தால் எனக்கு நல்லது 60%

இது எப்படி இருக்கிறதென்றால், உனக்கு வந்தா தக்காளி சட்னி, எனக்கு வந்தா ரத்தம்! என்று வேடிக்கையாக சொல்லுவதைப்போல உள்ளது. என்னிடமிருப்பதை நான் ஏதோ கொஞ்சம் தருவேன், ஆனால் உன்னிடமிருப்பதில் பாதி எனக்கு வேண்டும் என்பதாக அன்பர்களின் கருத்து இருக்கிறது!


ஆய்வின் முடிவில்!

பாவமும், புண்ணியமும் இக்காலத்தில் கட்டுக்கதை ஆகிவிட்டது. யார் எப்படிவேண்டுமானலும் வாழமுடியும், வாழலாம் வாழ்நாள் முடியும்வரை என்ற பெரும்போக்கான மனநிலை சூழ்ந்த காலம் இது!

சிலர் இயற்கை எனக்கு என்னதருமோ அதை ஏற்பேன் என்றும், நானே உழைத்து பெறுவேனே தவிர கேட்டுப்பெறவோ, தருவதைப்பெறவோ மாட்டேன் என்றும் பதில் தந்திருக்கிறார்கள். 1) இயற்கை எப்படித்தரும்? ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்தால் தானே கொடுக்கும்?! 2) நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது சரி, உடல் வளு இழந்த நிலையில் என்ன செய்வீர்கள்?

உலக நாடுகள் பலவும், முதியோர்க்கு சலுகைகள் வழங்குவதற்கு என்ன காரணம்? அவர்களின் தள்ளாமை உணர்ந்து தானே? ஆனாலும் சில முதியவர்கள் உழைக்கத்தான் செய்கிறார்கள். எப்படி? இந்த சமூகம் முன்னேற தாங்கள், வாழ்ந்து கண்ட அனுபவ அறிவின் அடிப்படையில், ஆலோசனை சொல்லி உதவுகிறார்கள் அல்லவா? அதுவே அவர்களின் உழைப்பு.

இருப்பதை பகிர்ந்தளிப்பது என்ற உண்மையை, மனிதர்களை விடவும், ஐந்தறிவு விலங்குகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. காகம் ஒன்று உதாரணம் போதுமே?!


சப்பைக்கட்டு!

சிலர் மிக மோசமான புரிதலில், ஆனால் திடமாக, பொருளாதார நிபுணராக வாதிடுவார்கள்! அதெல்லாம் சரிதான், ஆனால் பற்றில்லாமல் வாழவே முடியாதே, நான் எதற்காக பிறருக்கு பகிரனும், கொடுக்கனும்? என்றுதான் மல்லுக்கு நிற்பார்கள். இவர்கள் தான், எனக்கு ஒன்று, என்வீட்டு ஆளுக்கு ஒன்று என இரண்டாக, முதலில் எடுத்துச் செல்வார்கள்!

இத்தகைய, உழைக்காமல் ஏதும் வராது, நாங்கள் கொடுக்கமாட்டோம். பகிரமாட்டோம் என்ற கருத்து கொண்ட மக்கள்தான், அக்காலம் முதல் இருந்து வந்த, திண்ணை வீடுகளை ஒழித்தார்கள். தண்ணீர் பந்தலை அகற்றினார்கள். சத்திரம் சாவடிகளை இடித்தார்கள். அன்னதானத்தை சிற்றுண்டியகம் ஆக்கிவிட்டார்கள். 

பூகம்பம் ஏற்பட்டு வீடிழந்த மக்களுக்கும், வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கைத் தொலைத்த மக்களுக்கும், புயலால், சுனாமியால், இப்படி பலப்பல இயற்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோர்க்கு, தீடீரென கருணைக் கைகள் முளைத்து உதவி செய்யும். ஆக, இவர்களை பொறுத்தவரை, தாங்கள் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், பிறர் குறிப்பிட்ட சூழலில் இருந்தாக வேண்டும். அதுவரை நாங்கள், தான் தனது என்ற பற்றில்தான் இருப்போம். பகிரத்தயாராக மாட்டோம் என்ற நிலைப்பாடுகளில் இருக்கிறார்கள்!


முடிவுரை

அன்பர்களே, இது சிந்தனைக் கருத்துக்கான கட்டுரையே, எந்தவகையிலும் இது முடிவான கருத்தாக இருக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் அலசுவோம்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!