October 2022 | CJ

October 2022

Service Guru Thakshina Fund Fees Donate


 சேவை, குரு காணிக்கை, நன்கொடை, பணம் சேகரிப்பு, கட்டணம்

அன்பர்களே,

வேதாத்திரிய சானல், வேறெந்த அமைப்பையும், அறக்கட்டளையையும், சங்கத்தையும் சார்ந்தது அல்ல. எங்களின் நேரத்தில் பெரும் பகுதியை செலவு செய்து ஓவ்வொரு பதிவுகளாக, “சொந்தமாக” தந்து கொண்டிருக்கிறோம். வெறுமனே எல்லோரையும் போல, குரு புகழ் பாடிக்கொண்டிருபவர்களும் நாங்கள் அல்ல. நம் வேதாத்திரி மகரிசியே அதை விரும்பியதும் இல்லை. தானாகவே தனக்கு ஒரு மதிப்பும் அளித்துக் கொள்ளாதவர். மற்றவர் தருவதையும் விரும்பாதவர். தன்னை குரு என்று கூட சொல்லாமல், பேராற்றலே எல்லோருக்கும் குரு என்ற சொல்லியவர்.

நம் குருமகான் வேதாத்திரி மகரிசி, உணர்ந்து ஓதியதை, நாங்கள் ஓதி உணர்ந்து 34 ஆண்டுகள் வேதாத்திரிய பயணத்தில், நாங்களும் உணர்ந்து ஓதுபவர்களானோம். அதைத்தான் 2018 முதல் வேதாத்திரிய சானல் வழியாக தந்து கொண்டிருக்கிறேன். அதில் என் நண்பரும் இணைந்து கொண்டார். 

குரு மகான் வேதாத்திரி புகழ்பாடுவதும், அவர் பதிவுகளை தருவதும் சரி, ஆனால் நீ என்ன கற்று உணர்ந்தாய்? என்பது எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வியே. அந்த கேள்விக்கான பதில்தான் எங்களது பதிவுகள். 

ஒருவர், தன் குருவின் புகழ் பாடினால், அவர் தன்னளவில் வளர்ச்சி இல்லாமல், குருவோடு நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். அவர் சரணாகதியே ஆனாலும் கூட, அவருக்கென்று தனி கருத்து ஏதுமில்லை. எல்லாமே குரு, குருதான் எல்லாமே. இதில் தவறில்லை. ஆனால் இந்த அன்பர், தன் கருத்தாக எதையுமே சொல்ல முடியாது. சொன்னாலும் மாட்டிக்கொள்வார். குரு மகான் வேதாத்திரி இப்படிப்பட்ட அன்பர்களை ஏற்படுத்தியது இல்லை. என்னைப்போல நீயும் மாறுக என்றுதான் வாழ்த்தியிருக்கிறார்.

நாங்களும், குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சரணாகதி அடைந்தவர்கள் தான். ஆனால் அவரளவில் நிற்காமல், எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து தெளிந்தோம். உண்மை அறிந்தோம். அதை வார்த்தையால் விளக்குவது கடினம். 

-

* இதுவரை எங்களை புரிந்துகொள்ளாத அன்பர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தருகிறோம். நீங்கள் விரும்பினால் எங்களை, உங்கள் அறிவாட்சித்தரத்தால் அளந்து பார்க்கலாம். நாங்கள் தயார்.

-

குரு மகான் வேதாத்திரி மகரிசியிடமே, உங்களுடைய சிஷ்யர்கள் உங்களை மாதிரி இல்லை, அவர்களை எப்படி தரத்தில், உண்மை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொள்வது? அப்படி ஒருவரை காட்டுங்கள், நான் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் என்றார். அதற்கு மகரிசி அவர்கள் “உங்கள் அறிவாட்சித் தரத்தின்படிதான் அவர்களை பார்க்கிறீர்கள். எந்த அளவைக்கொண்டு அப்படி சொல்லமுடியும்? அதோடு உங்கள் வணக்கத்தை எதிர்பார்த்தும் அவர்கள் இல்லை, உங்களை உயர்த்திக்கொள்ள என்ன வழியோ அதைப்பாருங்கள், குறைகாண்பது வேண்டாம்” என்று சொல்லியுள்ளார்.

அதுபோலவே வேதாத்திரிய சானலில், 07/10/2022 அன்று நான் பதிவிட்ட ஒரு பதிவிற்கு அப்படியான வாதம் வந்துவிட்டது. 

-

அங்கே பதிவிட்டது இதுதான்!

-

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம்.

1) குரு காணிக்கையாக ஒருநாளைக்கு ரூபாய் 300 GPay வழியாக செலுத்தவேண்டும்.

2) 90 நிமிடங்கள் (இரண்டு பிரிவுகளாக) ஒருநாள் மட்டும் விளக்கம் கிடைக்கும்.

3) எந்த நேரம் உங்களுக்கு தேவை என்ற விபரம் தெரிவிக்கலாம்

3) பணம் செலுத்திய உடன், ஜூம் இணைப்பு வழங்கப்படும்

பணம் அனுப்ப GPay ID  xxxxxxxxxxxxxx

-

இதற்கு ஒருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் X: இந்தத் தொகை SKY டிரஸ்டுக்கு செல்லுமா?

என்னுடைய பின்னூட்டம்: இந்த சேவை வழங்குவது WCSC, SKY Trust இல்லை


இன்னொருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் Y: குரு காணிக்கை என்றால் ஸ்கை ஆழியாருக்குத்தான் வழங்க முடியும். வேறு யாரும் நன்கொடை கேட்பதை ஏற்கமாட்டோம்

என்னுடைய பின்னூட்டம்: சரி அப்படியானல் வருந்துகிறேன். பணம் செலுத்தாதவர்களுக்கு சேவை வழங்க முடியாது. வாழ்க வளமுடன்.

சிறிது நேரத்தில் இதை நான் அழித்துவிட்டேன், முதல் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும் என்பதால்!

-

நான் மறுபடியும் ஒரு பதிவிட்டேன்.

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம் என்று பதிவிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்,

இவை எங்கே கிடைக்குமோ, அங்கேயே நீங்கள் பெற்றுக் கொள்ளவும். 

வாழ்க வளமுடன்!

-

இதற்கு என்னமாதிரியான வாதங்கள் நிகழ்ந்தது என்பதை நான் இங்கேயும் தருகிறேன்.

பின்னூட்டம் A: Super இப்போது தான் நீங்கள் சரியாக பதிவிட்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் வேதாத்திரியம் வியாபாரமாக்கப் படுகிறதே என்று வருத்தமாக இருந்தது

எனது பின்னூட்டம்:  நன்றி, ஓவ்வொரு அன்பருக்கும் அவரவர் வினைப்பதிவு செயல்படுகிறது. மெய்யுணர்ந்த ஆசிரியரின் சேவையை ஏற்கும் பக்குவமில்லை. வாழ்க வளமுடன்!

பின்னூட்டம் A: எதிர்பார்ப்பு இன்றி செய்வதே சேவை அல்லவா?

எனது பின்னூட்டம்: அதுதான் வழக்கமாக கொடுப்பதாயிற்றே, அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பதில், “தனித்தனி நபருக்கும்  கிடைக்கும்” என்ற வார்த்தை பதிவிடப்படிருப்பதை கவனிக்க மறந்தீர்போலும். நல்லது. இதுவும் எனக்கு இறை கொடுத்த பாடமே என்பதை உணர்ந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் B: வணக்கம்  தனித்தனியாக என்பதை  கவனித்தால்தான்  வேதாத்திரி மகரிஷியின்  அனுபவ விரிவை  புரிந்துகொண்டு  விளக்கம் அளிப்பீர்களா  அல்லது  தங்களது  நான் யார்  என்ற முழுமையின்  உச்சபட்சஅறிவின்  உணர்வின் தெளிவில்  உங்கள் விளக்கம் இருக்குமா?

எனது பின்னூட்டம்: அன்பரே, உங்களுக்காக தனியே பதில், கிழே தந்திருக்கிறேன்.

பின்னூட்டம் B: இவை எங்கே கிடைக்குமோ அங்கே சென்று  பெற்றுக் கொள்ளுங்கள்  என்று  பதிவில் உள்ளதை  கண்டு சேர்த்து கவனித்தால்தான்  உங்கள் விளக்கத்தை வேண்டி விரும்பினேன்   உங்கள் பதில்   வாழ்க வளமுடன்

பின்னூட்டம் A: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இனிப்பை சுவைக்க எறும்புக்கு, விளம்பரம் தேவை இல்லை. இனிப்பு இருந்தால் எறும்பு தானாக வரும் .மேலும் ...மேலும் சுயநலம் கருதாமல் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதிபலன் பாராமல் உழைத்து இறைத்தொண்டாற்றிய  மகான்கள் பலர் ..... புரிந்து கொண்டு செயல்படுங்கள்.. 

எனது பின்னூட்டம் :  உங்கள் அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி,  ஆனாலும் தாயானவள் வலிந்து உணவு ஊட்டவில்லையானல் குழந்தை வளர்ச்சி குன்றிப்போய்விடும். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் C: சரியான முடிவு.நீங்கள் அப்படி ஆலோசனை தருவீர்கள் என்றால்.1 நாள் மட்டும் இலவசமாக தந்திருக்க வேண்டும்.

எனது பின்னூட்டம்:  நல்லது, இனிமேல் திருத்திக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்

-

பின்னூட்டம் B: என் குருநாதர் வேதாத்திரி மகரிஷியின்  அவர் முகம் காணா மாணவன் நான்  அவரின் உன்னத செயலுக்கு இழுக்காக இருக்கிறது உங்கள் பதிவு   வேதாத்திரியத்தை படித்து  ஆசிரியர் பணி  செய்பவர்கள்  இறைவனுக்கே  பணி செய்பவர்கள் ஆகிறார்கள்  இதை சற்று புரிந்து கொள்ளுங்கள்  பாடத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும்  புரியும் நிலை இருந்தாலும்  புரிந்ததாகாது  உணர்ந்தால் மட்டுமே   அது முழுமையாக. உணர்ந்துகொண்டதாக ஆகும்  அப்படியிருக்கையில்  பயிற்சியின்போது   அனுபவத்தில்  சில நிலைகளை  உணர்ந்தவர்  மேலும் தெளிவு பெற படித்த உங்களிடம்  விளக்கம் கேட்டால்  உங்கள் நிலைப்பாடு என்ன. படித்த அறிவில்  உங்கள் பதில் இருக்குமா  அல்லது  அனுபவ உண்மையை உணர்ந்த நிலையில் இருக்குமா ???

எனது பின்னூட்டம்: வணக்கம், இந்த மாதிரியான வாதத்திற்கும், கேள்விகளுக்குமே நான் காத்திருந்தேன் என்பது உண்மை. ஏனென்றால் அப்போதுதானே நானும் சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் என்னுடைய அனுபவ உரைபதிவுகளை பார்க்க, கேட்கவில்லை என்றே கருதுகிறேன். நம் வேதாத்திரி மகரிசி சொன்னது போலவே, நான் உணர்ந்து ஓதுகிறேனா இல்லையா என்பதை, இங்கே பகிரும் பதிவுகளே சொல்லும். இந்த வேதாத்திரிய சானலில் இருக்கும் 533 பதிவுகளில், ஒரு சில பதிவுகள்தான் நேரடியாக, நம் வேதாத்திரி மகரிசி குரலில் இருக்கும். மற்ற எல்லா பதிவுகளும், குருமகான் சொன்னதை, நாங்கள் புரிந்து கொண்டவிதத்தில், அதன் சாரம் மாறாமல் நாங்கள் தந்தவையே. இதற்கு 13450 பகிர்வார்களே சாட்சி.

கிட்டதட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். நம் மகரிசியின் மாக்கோலம் கவிதைகள் விளக்கம் ஒரு பாகம் எழுதியிருக்கிறேன், மூன்று உடல், மன நலன் குறித்த கட்டுரை எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் அமேசான் கிண்டில் நூலாக விற்பனைக்கு கிடைக்கிறது. தற்பொழுதும் எண்ணம் குறித்த கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் எந்த மாதிரியானது என்பதை நீங்களே ஆராயுங்கள்.

என் வயது 53, என்னுடைய 18 வயதில் தீட்சை எடுத்துக்கொண்டேன். 34 ஆண்டுகால வேதாத்திரிய பயணத்தில் நான் பெற்ற உண்மைகள்தான் இங்கே பதிவுகளாக 2018 ஆண்டு முதல் மலர்ந்திருக்கிறது.

என் ஓவியங்களுக்காக இரண்டு முறை, நேரடியாக குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சந்தித்ததும், அவரின் கையொப்பம் கேட்டு வாங்கியதும் என் அனுபவங்கள்.

உங்களிடம் இருக்கும் அளவுகோலில் என் அறிவையும் தெளிவையும் அளந்து கொள்ளலாம். தவறேதும் கருதமாட்டேன். வாழ்க வளமுடன்.

-

இதோடு இன்றைய வாதம் நின்றிருக்கிறது, இது தொடருமா என்பது நாளை தெரியும். பார்க்கலாம்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

The World Community Network


 அன்பர்களே,



கேள்வியில் தொடங்குகிறேன்

உங்களிடம்,  “இப்பொழுது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காகித்தலோ / கைபேசி குறிப்பிலோ எழுதி வைத்துக்கொள்க. இதை நானாக புரிந்துகொண்டவகையில் சில பதில்களை இங்கே தந்து இந்த கட்டுரையை துவங்குகிறேன். அந்த பதில்கள் என்ன?

1) இன்றைய நாளும் பொழுதும் நன்றாக இருக்கிறது

2) ஏன் இன்றைக்கு ஏதோ சோகமாக உணர்கிறேன்?

3) இந்தவேலைக்கு ஏன் வந்தேனோ, ஒரே இம்சையடா!

4) எதிர்பார்த்த மாதிரி பண வரவு இல்லையே என்ன செய்வது?

5) வாங்கிய கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கே, பிரச்சனை ஆகிடுமோ?

6) கொடுத்த காசை திருப்பித்தராம எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!

7) பூர்வீக வீட்டு பிரச்சனை எப்போதான் தீருமோ தெரியலையே?

8) இந்த சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லியே உயிர் போகுது!

இன்னும் இன்னும், ஆயிரம் மனிதர்களின் பதில்களும் ஒரே மாதிரி இல்லாமல், தனித்தனியாகவே அமைந்திருக்கும். இதுதான் மனிதனின் இயல்பு. ஆணும் பெண்ணும் இருவரும், பொருளாதார வாழ்வில் சமமாக இருக்கும் காலம் இது. எனவே ஆணுக்கு என்னவகையான பிரச்சனைகள் எழுமோ, அதே அளவிலான பிரச்சனைகள் பெண்ணுக்கும் உண்டு.


வேற்றுமையில் ஒற்றுமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தன்னளவில் இருந்தாலும், உலகம் சுருங்கிய இந்த காலத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். அது சமூகம் தொடர்பானது. சமூகம் என்றால் நீங்கள், உங்கள் இனம், குழு என்று சொல்லுவதற்கில்லை. அதெல்லாம் அந்தக்காலம். 

இப்பொழுது சமூகம் என்றால், இந்த உலகமே சமூகம் என்றாகிவிட்டது. காரணம், எல்லைகளைக் கடந்த தொடர்புகள். ஆம் தகவல் தொடர்பு,  இணையம் வழியாகவும், கைபேசி வழியாகவும் இந்த உலகத்தையே ஓர் சமூகமாக மாற்றிவிட்டது. இதனால எண்ணற்ற பயன்கள் உண்டு. அதை நாமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த அனுபவத்தில் நன்மைகளுக்குப் பதிலாக, நிறைவாக வாழ்வதற்குப் பதிலாக, துன்பத்தையும், நிம்மதி இன்மையையும் அனுபவிக்கிறோமே அது சரியா?

அத்தகைய உலக சமூகம், தகவல் தொடர்பால் தரும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், தன்னளவில் தனித்தனியாக பிரச்சனைகளை சந்திக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள், ஒருசேர ஒற்றுமையாக ஒரே அளவில் அனுபவிக்கிறார்களே! இது சரியா? இதில் நானுமே ஒருவன், நானும் கூட தப்பிவிடுவதில்லை. 


இதில் நல்லது என்ன?

உலகம் சமூகமாகிவிட்டாலும், அங்கே சுயநலமும், தான் என்ற அகங்காரமும், தனது என்ற அதிகாரத்தை அமைக்க விரும்புவதும், குழப்பதை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியை கெடுத்தலும், நாட்டை அபகரித்தலும், எதிரிகளை கூட்டாக அழிக்க விரும்புவதும், அரசை கைபற்ற நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நடக்கும் நல்லது என்ன?

ஆங்காங்கே, மக்கள் ஒன்றுபட்டு நல்ல அரசை அமைக்க விரும்புவதும், தங்கள் பிரச்சனையை தாங்களே கேட்டுப்பெறுவதும், நாட்டின் இறையான்மையை காப்பதும் நிகழ்கிறது. அவற்றை முன்னெடுத்து நடத்திச் செல்லும் நல்ல தலைவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. நாடு என்ற அளவில், மொழி, மத, இன அடையாளங்கள் மறந்து ஒற்றுமையான மக்களை உருவாக்குகிறது.


நீங்களும், உங்கள் நிலையும்!

இந்த உலகில், இந்த காலகட்டத்தில் வாழ்வதால் நீங்களும், இந்த உலக சமூகத்தில் ஓர் உறுப்பினர். நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் கூட அந்த பாதிப்பையும், நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள். சில நேரம் மறுக்கலாம், ஆனாலும் எல்லோரும் ஏற்கும் பொழுது நீங்கள் மட்டும் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. மீறினால தண்டிக்கவும்படுவீர்கள்.

இதில் உங்கள் நிலை என்ன என்பது, உங்களை வந்தடையும் உலக சமூக பிரச்சனை / நல்லது இவற்றைப்பொறுத்துத்தான் அமையும். அதில் சந்தேகமே இல்லை. அது நல்லதா, கெட்டதா என்பதை, உங்களை வந்தடையும் நேரத்தில் கணிக்கவும் முடியாததாக இருக்கலாம். மேலும் உங்களையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய, உங்களுக்கு நன்மை தரதக்க ஒன்றாகவும் இருக்கலாம். முற்றாக உங்களுக்கு அவசியமற்ற, உங்கள் வாழ்க்கையும் பறிக்கலாம், நீங்கள் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கலாம்.


உங்கள் வீடும், குப்பைகளும்!

இந்த உலகத்திலேயே மன நிம்மதி தரும் இடம் என்றால், உங்கள் வீடுதான். அந்த வீடு ஆடம்பரம் இல்லாமல் இருக்கலாம். 1BKH முதல் 6BHK வரைகூட இருக்கலாம். நேற்று உடுத்திய துணிகள் எங்கும் பரவிகிடக்கலாம், வீடெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கலாம். ஆனாலும் அது உங்கள் வீடு, உங்களுக்கு அமைதிதரும் வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இப்பொழுது உங்கள் வாசல், எப்படி இருக்கிறது என்ற கவலை உங்களுக்கு இல்லை. என் வீடு என்வாசல் எப்படி இருந்தாலும் எனக்கு சரிதான் என்ற நிலைதான் உங்களுக்கு. நல்லதுதான். ஆனால் யாரோ உங்கள் வாசலில், வந்து குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள் என்றால், என்ன ஆகும்?

நீங்கள் வெகுண்டு எழுந்து, “எவண்டா அது என்வீட்டு வாசலில் குப்பையை கொட்டுகிறவன்?” என்று வீட்டை விட்டு, வாசலில் நின்று கொண்டு சத்தம் போடுவீர்கள். பக்கத்தில் இருக்கும் நான் உங்களிடம் “சரி, விடப்பா, எவனோ போட்டுட்டு போயிட்டான், நீ நிம்மதியா இரு” என்று சொன்னாலும், “அதெப்படிங்க, என் வீட்டு வாசலில் எவனோ ஒருத்தன் குப்பை கொட்டலாம், இது நியாயமா?” என்று என்னிடம் சொல்லுவீர்கள். அதற்கு மேல் நான் பேசினால், நம் இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிடும். கடைசியில் நான் தான் குப்பையை கொட்டினேன் என்று திருப்பிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

மறுநாள், உங்கள் வீட்டிற்குள்ளேயே குப்பையை யாரோ கொட்டிவிட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கும்? பார்த்த உடனே, கெட்டவார்த்தையில் கூட யாரையோ திட்டிக்கொண்டே வாசல் வரை வந்து கத்துவீர்கள். இன்றோ நானும் உங்களிடம் ஒருகருத்தும் சொல்லவில்லை. நான் வெளியே வரவேஇல்லை. நீங்களாகவே கொஞ்சம் கத்திவிட்டு அடங்கிவிட்டீர்கள்.

மூன்றாவது நாள், நீங்கள் அறியாமல், உங்கள் படுக்கை அறையிலேயே யாரோ ஒருவர் குப்பையை கொட்டுவிட்டார். அவ்வளவுதான், உங்கள் சினம் எந்த அளவுக்கு எகிரும் என்பதை அளவிடவே முடியாது என்பதுதான் உண்மை. 

கூட்டி அள்ளி வெளியில், போட்டுவிடுகின்ற குப்பைக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு வருமென்றால்... அடுத்த தலைப்பையும் படியுங்கள்!


உங்கள் மனமும், குப்பையும்!

உலக சமூகம், தகவல் தொடர்பில் மிக எளிதாக எல்லோரையும் ஒரே கயிறில் கட்டி இணைத்துவிட்டது. யார் எங்கே இருந்தாலும், யாரோடு யாரும் பேசலாம், பழகலாம், விரும்பலாம், இணையலாம், கூடலாம், விலகலாம், எதிர்க்கலாம், சண்டையும் போடலாம், பழியும் வாங்கலாம் என்றாகிவிட்டது தானே?!

மேலும் தினம் தினம், இணையம் வழியாக, கைபேசி வழியாக, யார் யாரோ குப்பைகளை, உங்கள் மனதில் கொட்டி விட்டு போகிறார்களே? உங்கள் மனம், நீங்கள் வாழுகின்ற வீட்டை விட கேவலமானதா? ஏகப்பட்ட குப்பைகளோடு வாழ்ந்து பழகி, இன்னும் பல மடங்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? ஒரு போதும் நீங்களாக, உங்கள் குப்பைகளை சரிசெய்ததில்லை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால், யார் யாரோ போடும் குப்பைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வீர்களா? அந்த குப்பைகளோடும்  உங்கள் வாழ்க்கையை தொடர்வீர்களா?

உங்கள் பதிலும், நிலையும் என்ன?

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!